ரஷ்யாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான ஒக்ஸனா பொப்ரோவ்ஸ்கயாவும் அவரின் கணவரும் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டபோது ஒக்ஸனாவை அவரின் கணவர் வல்லுறவுக்குட்படுத்திக் கொண்டிருந்திருந்தார் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
30 வயதான ரஷ்ய எம்.பி. ஒக்ஸனா பொப்ரோவ்ஸ்கயாவும் 28 வயதான அவரின் கணவர் நிகிட்டா பொப்ரோவ்ஸ்கியும் ரஷ்யாவின் சைபீரிய பிராந்திய நகரான நோவோஸ்பிரிஸ்கில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து அவர்களின் வாகனத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இவர்கள் இருவரினதும் சடலங்கள் வாகனத்துக்குள் அரைநிர்வாண நிலையில் காணப்பட்டன.
குண்டுவெடித்தபோது இவர்கள் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கலாம் என முன்னர் கருதப்பட்டது.
ஆனால், தனக்கு துரோகம் இழைத்ததாக கருதப்பட்ட மனைவி ஒக்ஸனாவை அவரின் கணவர் நிகிட்டா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்யா கட்சியை சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒக்ஸனா பொப்ரோவ்கயா. கவர்ச்சியான தோற்றம் கொண்ட அவர் தனது குடும்பத்தினரதும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
ஆனால், நிகிட்டாவுக்கும் ஒக்ஸனாவுக்கும் இடையிலான குடும்ப வாழ்வில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
செல்வந்தர் ஒருவருடன் ஒக்ஸனாவுக்கு பாலியல் தொடர்பு இருப்பதாக நிகிட்டா குற்றம் சுமத்தி வந்தார்.
இந்நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை நோவோஸ்பிரிஸ்க் நகரில் தமது காரில் வைத்து, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு ஒக்ஸனாவை நிர்ப்பந்தித்துவிட்டு கிரனேட்டை வெடிக்க வைத்து தான் நிகிட்டா தற்கொலை செய்துகொண்டதுடன் தனது மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் என ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிரனேற் வெடித்தபோது நிகிட்டாவுக்கும் ஒக்ஸனாவுக்கும் இடையில் பாலியல் உறவு பரஸ்பர சம்மதத்துடன் நடைபெற்றதாக தெரியவில்லை என ரஷ்யாவின் ‘லைவ்’ நியூஸ் எனும் ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
நிகிட்டா, ஒக்ஸனா தம்பதிக்கு 4 வயதான ஒரு மகள் உண்டு. ஆனால், அச்சிறுமி இச்சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை. அவள் தற்போது தனது பாட்டியிடம் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவத்தில் குண்டு வெடித்த சத்தம் தமக்கு கேட்டதாக அருகிலிருந்த குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சத்தம் எதனால் ஏற்பட்டது என்பது தெரியாத நிலையில், துருக்கியுடனான யுத்தம் ஆரம்பமாகிவிட்டது போலும் என தனது கணவரிடம் தான் வேடிக்கையாக கூறியதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
நோவோஸ்பிரிஸ்க் நகர மேயர் அனடோலி லோகொட் இது தொடர்பாக கூறுகையில், ‘இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல, இது ஒரு குடும்ப சர்ச்சை. ஆனால், இக்கணவரின் பொறாமையைத் தூண்டிய விடயம் எது எனத் தெரியவில்லை. எனத் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸனாவின் கணவர் நிகிட்டா ரஷ்ய இராணுவத்தின் விசேட சேவைப் பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.