ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் ஐ.எஸ். என்றும் ஐ. எஸ்.ஐ.எஸ். என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பிற்கு எதிராக ஒரு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் பாரிஸ் நகரத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் ரஷ்யாவும் பிரான்ஸும் ஒத்துழைக்க முன்வந்துள்ளது.
இதேவேளை ரஷ்ய விமானம் ஒன்று துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
சிரிய உள்நாட்டுப் போர் அடக்கு முறை ஆட்சியாளருக்கு எதிரான கிளர்ச்சியாக 2011 ஆம் ஆண்டு உருவானது.
அது ஷியா மற்றும் ஸுன்னி இஸ்லாமியர்களுக்கு இடையிலான மோதல்களாக மாறியது. பின்னர் அது ஈரானிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான பிராந்தியப் போட்டியாக மாறியது.
இப்போது அது நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதலாக மாறுமா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதுடன் உலகெங்கும் தீவிரவாதத் தாக்குதல்களை இஸ்லாமிய அரசு செய்யுமா என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
வீழ்த்தப்பட்ட விமானங்கள்
பனிப்போருக்குப் பின்னர் ரஷ்ய விமானமொன்று நேட்டோ உறுப்பு நாடு ஒன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது 2015 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடந்தது.
1960ஆம் ஆண்டு அமெரிக்க யூ– 2 உளவு விமானம் ரஷ்யாவின் சாம்–2 ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது. ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதுகளில் நடந்த கொரியப் போரின் போது வான் பரப்பில் சோவியத் விமானங்களும் அமெரிக்க விமானங்களும் அடிக்கடி மோதிக் கொண்டன.
ஒரு அமெரிக்க விமானி சோவியத்தின் நான்கு மிக்–15 விமானங்களை வானில் வைத்துச் சுட்டு வீழ்த்தினார். சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த போது பாகிஸ்தானியப் படையினர் அமெரிக்கத் தயாரிப்பு F-–16 விமானங்களில் சென்று குறைந்தது பத்து சோவியத் போர் விமானங்களையாவது 1980 களில் சுட்டு வீழ்த்தினர்.
துருக்கியால் தனது விமானம் சுடப்படும் போது அது, ஒரு கிலோமீட்டர் துருக்கி சிரிய எல்லைக்கு உட்பக்கமாகப் பறந்து கொண்டிருந்ததாக ரஷ்யா தெரிவித்தது.
2015 செப்டம்பரில் ரஷ்யா, சிரியாவில் தனது படையினரைக் கொண்டுபோய் இறக்கியதிலிருந்து ரஷ்யப் போர் விமானங்கள் தனது வான் பரப்புக்குள் பறப்பதாக துருக்கி பல தடைவைகள் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.
2015 ஒக்டோபர் மாதம் ரஷ்ய விமானம் துருக்கியினுள் அத்துமீறியபோது, அடுத்த அத்துமீறலின்போது சூடு விழும் என துருக்கி எச்சரித்திருந்தது. அதை நேட்டோ நாடுகளும் ஆமோதித்திருந்தன.
இது துருக்கியின் “ஏரியா”! ஏன் இங்கு ரஷ்யா?
ரஷ்ய விமானங்களின் தாக்குதல்களால் சிரியாவிலுள்ள துருக்கியர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் துருக்கியிலுள்ள ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வெளிவருகின்றன.
சிரியா தொடர்பான பேச்சு வார்தைகள் வல்லரசு நாடுகளிடையும் மற்றும் பிராந்திய நாடுகளிடையும் நடக்கும்போது அங்கு துருக்கிக்கும் ஒரு இடம் உண்டு. இதை இனி ரஷ்யா ஆட்சேபிக்கலாம். ஆனால் அது துருக்கியின் பிராந்திய ஆதிக்கக் கனவைப் பாதிக்கும்.
சுட்ட விமானமும் சுடப்பட்ட விமானமும்.
துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்யாவின் எஸ்யூ-24 போர் விமானம் 23 மில்லி மீட்டர் துப்பாக்கிகள் மூன்று பொருத்தப்பட்டவை. அத்துடன் 20 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலக்குகளைத் தாக்கக் கூடிய நான்கு லேசர் வழிகாட்டி ஏவுகணைகளையும் கொண்டவை.
தேவையேற்படின் தொலைக்காட்சி வழிகாட்டி ஏவுகணைகளையும் எடுத்துச் செல்லக் கூடியவை. அதில் சிறந்த ரடார் வசதிகளும் உண்டு.
இப்படிப்பட்ட ரஷ்ய விமானத்தை அமெரிக்கத் தயாரிப்பான F–16 விமானத்தைப் பாவித்து துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. விமானத்திலிருந்து இரு விமானிகள் பரசூட்டின் உதவியுடன் தரையிறங்க முற்பட்ட வேளையில் துருக்கிக்கு ஆதரவான சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் அவர்களில் ஒருவரை ஜெனீவா உடன்படிக்கைக்கு மாறாக சுட்டுக் கொன்றனர்.
மற்றவருக்கு என்ன நடந்தது என அறியச் சென்ற ரஷ்ய எம்ஐ – 17 உழங்கு வானூர்தி, சிரியாவில் உள்ள துருக்கிப் படையணியால் அமெரிக்கா வழங்கிய தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
Russia equips fighter jets in Syria with air-to-air missiles
குழம்பிய சிரியாவில் மேலும் குழப்பம்
சிரிய ஆட்சியாளருக்கு எதிராக பல அமைப்புக்கள் போர்புரிகின்றன. சில போராளி அமைப்புகளுக்கு ஐக்கிய அமெரிக்கா, துருக்கி, சவூதி அரேபியா, கட்டார். ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகள் உதவி செய்கின்றன.
அல்கைதாவின் கிளை அமைப்பான ஜபத் அல் நஸ்ரா, ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளும் சிரிய அரச படைகளுக்கு ஆதரவாகவும் அமெரிக்க ஆதரவு பெற்ற அமைப்புக்களுக்கு எதிராகவும் போராடுகின்றன.
குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பும் தமது சுதந்திரத்துக்காகப் போராடுகின்றது. சிரியாவில் வாழும் துருக்கியர்களும் போராடுகின்றார்கள்.
இவர்கள் துருக்கியை ஒட்டிய சிரியப் பிரதேசத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்கின்றார்கள். துருக்கியர் படையணி என்ற படைக்கலன்கள் ஏந்திய அமைப்பும் சிரிய அதிபர் அல் அஸாத்திற்கு எதிராகப் போராடுகின்றது.
சிரியாவில் 22 இலட்சத்திற்கு மேற்பட்ட துருக்கியர்கள் வாழ்கின்றார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக குர்திஷ் மக்களைப் போலவே பல துருக்கியர்களும் அரபுக்களாக்கப்பட்டுள்ளனர்.
அளவோடு அடிக்கும் அமெரிக்கா
துருக்கியப் படையினர் ஐ.எஸ். அமைப்பின் மீது குண்டுகள் வீசுவதிலும் பார்க்க ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது குண்டு வீசுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ. எஸ். அமைப்பினரை ஒழித்துக் கட்டுவது அங்கு வாழும் ஸுன்னி இன முஸ்லிம்களை அடிமைகளாக்கும் என துருக்கி, சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், கட்டார் போன்ற நாடுகள் கருதுகின்றன.
இதனால் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையே மேற்கொள்கின்றது.
ஐ. எஸ்ஸை விட்டு அனைத்திற்கும் அடிக்கும் ரஷ்யா?
ரஷ்யப் போர் விமானங்கள் ஐ. எஸ். அமைப்பினர் மீது குண்டு வீசுவதிலும் பார்க்க அதிகளவு குண்டு வீச்சுக்களை அமெரிக்க ஆதரவு அமைப்புகள் மீதும் துருக்கியர் படையணி மீதும் வீசுகின்றன.
இதனால் ஐ. எஸ். அமைப்பினரிடமிருந்து குறிப்பிடத்தக்க நிலப்பரப்பு எதையும் சிரிய அரச படையினரால் கைப்பற்ற முடியாமல் இருக்கின்றது.
துருக்கியர் படையணி மீது ரஷ்ய விமானங்கள் வீசும் குண்டுகளால் பல அப்பாவிகள் கொல்லப்படுவதாகத் துருக்கி சொல்கின்றது. இது துருக்கியின் பல குடிமக்களை ஆத்திரமடைய வைத்தது.
தான், படைக்கலன்களும் பயிற்சியும் வழங்கிய படைக்குழுக்கள் மீது ரஷ்யா விமானத் தாக்குதல்கள் நடத்துவது அமெரிக்காவையும் மாற்று வழியைத் தேட வைத்தது.
மேற்காசியாவில் ரஷ்ய ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கும் நிலையில் ரஷ்யாவிற்கு எதிராகக் காய்களை நகர்த்த வேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏற்பட்டது.
அதற்கு முன்னர் சிரியாவில் தனது நேச நாட்டுப் படைகளைக் களமிறக்குவதற்கு ஒரு பன்னாட்டு ஆணை தேவைப்பட்டது. அதற்கு பாரிஸ் நகரக் குண்டுத் தாக்குதலை சாட்டாக வைத்து ரஷ்யாவின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துருக்கி, ரஷ்ய விமானத்தை வீழத்திய பின்னர் அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்திருந்தால் ரஷ்யா அதற்கு ஆதரவு வழங்காமல் இருந்திருக்கும்.
அமெரிக்காவின் முன்கூட்டிய அனுமதியுடனேயே துருக்கி ரஷ்ய விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என்பது எவராலும் ஊகிக்கக்கூடிய ஒன்றே.
ரஷ்யா தனது இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியான துருக்கியுடன் மோதலில் ஈடுபடுவது அமெரிக்காவிற்கு மேலதிக நன்மையுமாகும்.
துருக்கிய அதிபர் ரிசெப் தயிப் எர்டோகன் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது ரஷ்யா மேற்கொள்ளவிருந்த சிரியத் தலையீடு பற்றி எதுவும் விளடிமீர் புட்டின் தன்னுடன் உரையாடவில்லை என்பதும் எர்டோகனை கடும் விசனத்திற்கு உள்ளாக்கியிருந்தது.
உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்ததிலிருந்து ரஷ்யப் படையினருடன் யாரும் சீண்ட மாட்டார்கள் என்ற எண்ணம் விளடிமீர் புட்டினிடம் இருந்தது. அவரது அரசுறவியலாளர்கள் அடிக்கடி ஒரு அணுப் படைக்கலப் போர் வெடிக்கும் எனவும் மிரட்டிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், ஐக்கிய அமெரிக்காவை கதிர்வீச்சுக்கள் நிறைந்த ஒரு சாம்பல் மேடாக்க ரஷ்யாவால் முடியும் என்று கூடச் சவால் விட்டிருந்தார்.
புட்டீனின் இறுமாப்பிற்கு ஓர் அடி போடும் வாய்ப்பிற்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காத்திருந்தன. குறைந்தளவு ரஷ்யப் படையினரைக் கொண்ட சிரியா அதற்கு உரிய இடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம்.
துருக்கியின் தாக்குதலுக்கு ரஷ்யா எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக பல மேற்கு நாட்டுப் படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
துருக்கியின் செய்கை ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டல் என்கின்றது ரஷ்யா. அத்துடன் தவிர்க்க முடியாத விளைவுகள் நிச்சயம் தொடரும் என்கின்றது ரஷ்யா.
சீன அரச முதலாளித்துவவாதிகளின் ஊடகம், ரஷ்யா துருக்கியின் ஒரு விமானத்தைச் சுட்டு வீழ்த்தும் என எதிர்வு கூறியுள்ளது. துருக்கி, ஐ. எஸ். பயங்கரவாதத்தின் ஆதரவாளர் எனக் குற்றம் சாட்டுகின்றது.
ஐ.எஸ். திருடும் எரிபொருள்களை துருக்கி வாங்குவதாகவும் ஆரம்பத்தில் இருந்தே ஐ.எஸ்ஸிற்கு படைக்கலன்களும் பணமும் வழங்குவதாகவும் ரஷ்யா குற்றம் சுமத்துகின்றது.
ரஷ்யாவிற்கு எதிரான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளா?
ஒரு புறம் துருக்கி ரஷ்ய விமானத்தைச் சுட்டு வீழ்த்த, மறுபுறம் உக்ரேன் தனது வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறப்பதைத் தடை செய்ததுடன் ரஷ்யாவில் இருந்து எரிபொருள் வாங்குவதையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இவற்றிற்கு மூன்று நாட்களின் முன்னர் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாப் பகுதிக்கு உக்ரேனிலிருந்து செல்லும் மின்பரிமாற்றிகள் குண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டன.
உலகமயமாகுமா ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்?
முப்பதினாயிரம் போராளிகளைக் கொண்ட ஐ.எஸ். அமைப்பில் பதினையாயிரம் பேர் வெளிநாட்டுப் போராளிகளாகும். ஐ. எஸ். அமைப்பில் சதாம் ஹுசேனின் ஆட்சிக்காலத்தில் இருந்த படைத் துறை நிபுணர்கள் இருக்கின்றார்கள். அதன் வசம் ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள எண்ணெய் வளமிக்க பிரதேசங்கள் இருக்கின்றன.
ஈராக்கில் அது கைப்பற்றிய பிரதேசங்களில் இருந்த ஈராக்கிய அரச படையினரிடமிருந்து கைப்பற்றிய பாரிய படைக்கலன்கள் இருக்கின்றன.
இவற்றை வைத்துக் கொண்டு ஈராக்கிலோ அல்லது சிரியாவிலோ ஒரு சிறு நிலப்பரப்பையாவது தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க அதனால் முடியும்.
சிரியாவிலும் ஈராக்கிலும் தன் மீது கடுமையான தாக்குதல் செய்யப்படுமிடத்து, அதனால் தனது 15,000 வெளிநாட்டுப் போராளிகளை உலகின் எப்பாகத்திற்கும் அனுப்பி தீவிரவாதத் தாக்குதல்களைச் செய்ய முடியும்.