ஊரில் நிலவு காலங்களில் நாய்கள் கூடி நின்று ஊளையிடும். ஏன் எதற்கு என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கக் கூடும்.
சில நேரம், சூரிய(தேவ)னைப் பார்த்து தாங்கள் குலைப்பதை கேவலமாகப் பேசும் மனித இனம் பற்றி தங்கள் தேசியத் தலைவன் ‘சந்திரதேவனிடம்’ முறையிடுகின்றனவோ என்னவோ? ஊரில் உள்ள எல்லா நாய்களும் ஒன்று திரண்டு ஊளையிட்டு முடிந்ததும் தன் பாட்டுக்குப் போய் மூலையில் அனுங்கிக் கொண்டு கிடக்கும்.
உலகெங்கும் மாவீரர் தினக் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது. முதல் நாள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம், மறுநாள் கூலிக்கு மாரடிக்கும் நீலிக்கண்ணீர் ஒப்பாரி என்று, இனிப்பாய் ‘கேக்’கும், உறைப்பாய் கொத்து ரொட்டியும் சாப்பிட்டு ‘சிரித்துக் கொண்டே அழுது’ முடிந்து, தமிழுணர்வாளர்கள் தங்கள் தங்கள் பாட்டைப் பார்க்கப் போய் விட்டார்கள்.
இந்த தமிழுணர்வாளர்கள் கூடி ஊளையிட, குறைந்தது வருடத்திற்கு மூன்று சந்தர்ப்பங்கள் வரும்.
மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலம் என்று ஒரு கூத்து நடக்கும். முகப்புத்தகத்தில் கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு, யுத்தக் குற்றம் பற்றி சர்வதேச விசாரணை நடத்தி, இன அழிப்பாளர்கள் கழுவில் ஏற்றப்பட வேண்டும் என்று கூச்சல் நடக்கும். ஒரு போதும் அதில் இறந்த தங்கள் தலைவனை நினைவு கூர்வது பற்றி கதையே வராது.
அது முடிய, செப்டம்பர் கணக்கில் சுவிஸில் ஐ.நா மனித உரிமை அமர்வுக்கு முன் சனல் 4 வீடியோ விட்டு கொடியேற்ற, அடுத்த திருவிழா நடக்கும்.
அது முடிந்து, நவம்பரில் அகவைக் கேக் வெட்டுதல்…
இந்த மூன்று நேரங்களிலும் பார்த்தால், ஏதோ இவர்களின் உணர்ச்சிக் கொதிப்பில் ஏடாகூடமாக எதையாவது செய்யப் போய்… வணங்காமண்ணில் ஏறிப் போய், அங்கே இறங்கி ஈழத்தைப் பிடித்து விடுவார்களோ என்ற எண்ணம் கூட வரும்.
இவை முடிந்த பின்னர் வழமை போல, மூலையில் போய் அனுங்கிக் கொண்டிருப்பார்கள்… சாமத்தியச் சடங்கு, புதுப்படத்திற்கு முண்டியடிப்பு, கொத்துரொட்டித் திருவிழா, நல்லூர்த் தேர் செல்பி… அவர்கள் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனை இருக்கும்! இனி அடுத்த மே மாதம் வரைக்கும் அவர்களுக்கு இந்த தமிழுணர்வு வராது.
லண்டனில் குவிந்த கூட்டத்தைப் பார்க்கும் போது, விழா அமைப்பாளர்கள் கொஞ்ச நாளைக்கு கவலையே படத் தேவையில்லை என்றது தெரிந்தது.
இப்படி ஒரு கூட்டம், கேட்டுக் கேள்வியில்லாமல் நல்லூர்த் திருவிழா மாதிரி வந்திறங்கினால், கோயில் முதலாளிகளுக்கும், திருவிழா உபயகாரர்களுக்கும், வியாபாரிகளுக்கும் என்ன கவலை? வருமான வரிக்கு (இளிச்சவாயர்களுக்கும்!) நட்டம் காட்ட, எத்தனை தடவையும் மதிலை இடித்து இடித்தே கட்டலாம்!
விழாவை முடித்த பின்னால் வரவு செலவு காட்டாமல், கல்லறை உண்டியலையும் கொத்து ரொட்டிக் கல்லாவையும் எண்ணுவதற்கு முன்பாகவே நட்டம் காட்டுகின்ற திருக்கூத்து, இந்த பக்தகோடிகளின் பகுத்தறிவை நம்பித் தானே!
இப்போதும் கதவைத் தட்டிக் கேட்கும் போதும் பணத்தைக் கொடுக்க ஒரு கூட்டம் இருந்தால்… கொத்துரொட்டியோடு கார்த்திகைப் பூவும் வந்து சேர்ந்திருக்கிறது. காட்டில் மழை தான்! தொடரட்டும் போராட்டம், மாவீரர்களே!
ஒரு இனத்தின் விடுதலைக்காகவும், நாட்டைப் பாதுகாக்கவும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவது நாகரிக உலகின் கடமை.
வாழுகின்ற தங்களுடைய சுதந்திரமான வாழ்வை உறுதி செய்ய, தன்னலமில்லாமல் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களுக்கு அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் மனிதர்கள் மதிப்பளிக்க வேண்டும்.
அதைப் போல, போராளிகளாக இறந்த தங்களுடைய பிள்ளைகளின் உயிர் வீணாகப் போகவில்லை, ஒரு இனத்தின் விடுதலைக்காகவே இழக்கப்பட்டது, அதை எமது இனத்தவர்கள் நினைவு கூர்கிறார்கள் என்ற பெருமையோடு அவர்களின் குடும்பத்தினர் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் புரிந்து கொள்ளப்படக் கூடியது.
அவ்வாறு உயிரை இழந்தவர்கள் விரும்பிச் சேர்ந்தார்களா, இல்லை, இழுத்துச் செல்லப்பட்டு பலியிடப்பட்டார்களா என்ற கேள்விகள் எல்லாவற்றுக்கும் அப்பால், இழந்த உயிர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியது என்பது நாகரிக உலகில் எதிர்பார்க்கப்படும் பண்பாடு.
ஆனால், இந்த அர்த்தபூர்வமான நினைவுகூரலை, ஒரு களியாட்டமாகவும், பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவும் மட்டுமே பயன்படுத்துவது எந்தச் சமுகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.
ஆனால் தமிழினத்தில் மட்டும் இது வெறும் உணர்ச்சியால் உந்தப்பட்ட சம்பிரதாயமாகவும் வெறும் கேலிக்கூத்தாகவும் மாறியிருக்கிறது.
அதிலும், ஒரு குறித்த இயக்கத்தில் இறந்தவர்கள் மட்டும் தான், பாம்பு கடித்து இறந்தால் என்ன, கிணற்றில் விழுந்து இறந்தால் என்ன, மாவீரர்கள், மற்ற இயக்கங்களில் விடுதலைக்காக சேர்ந்து போராடியவர்கள் துரோகிகள் என்று வரையறை செய்து, இன்று எல்லாம் இழந்த நிலையிலும், தங்கள் மாவீரர் ஆலயங்களுக்குள் அவர்களை பிரவேசிக்க விடாமல், தீண்டாமையை அமுல்படுத்தும் கேவலமான இயல்பு கொண்டவர்கள் தான் இன்றைக்கு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாமே போய் பூச்சியமாய் இருக்கும் இன்றைக்குக் கூட இவர்களால், ‘போராட்டத்திற்காக தங்கள் உயிரை ஈகை செய்த அனைத்துப் போராளிகளுக்கும்’ என்ற வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை!
அள்ளுப்பட்டு வந்த கூட்டம் இன்னொரு மேய்ப்பனுக்காக அலைவது தெளிவாகவே தெரிந்தது.
காணாத கடவுளை விசுவசிப்பது போல, தலைவர் வருவார் என்று நம்பிக் கொண்டிருக்கும் கூட்டம் தற்காலிகமாக இந்தப் பூசாரிகளை நம்பிக் கொண்டிருக்கிறது.
தற்போதைக்கு நம்பிக்கை எல்லாம் ‘வேலோடு வினை தீர்க்கும்’ விக்னேஸ்வரனோடு இருந்தாலும், சரியான மேய்ப்பன் கிடைத்தால் அள்ளிக் கொடுக்க இந்தக் கூட்டம் தயாராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது மந்தைக் கூட்டமாக இல்லாதிருந்திருந்தால், இன்றைக்கு இந்த திருவிழா உபயகாரர்களை கையும் மெய்யுமாகப் பிடித்து, ‘போராட்டத்திற்காக நாங்கள் தந்த பணம் எங்கே?’ என்று கேட்டிருக்கும்.
‘எங்கள் தலைவனைக் காப்பாற்ற பணம் தேவைப்பட்ட போது கொடுக்காமல் எங்கே வைத்திருக்கிறீர்கள்? இன்றைக்கு இத்தனை போராளிகளும் வாழ வழியில்லாமல் உடலை விற்கும் அளவுக்கே போகும் நிலையில், இங்கே இத்தனை லட்சம் செலவிட்டு இந்தக் கூத்து தேவையா?’ என்று கேட்டிருக்கும்.
அதையெல்லாம் கேட்கும் அளவுக்கு இதற்கு பகுத்தறிவு இருந்திருந்தால், இன்றைக்கு பணம் கொடுத்து கார்த்திகைப் பூ வாங்கி இந்த ஏமாற்றுக் கூட்டத்தின் கல்லாவை நிரப்பியிருக்குமா?
இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது, புலிகளின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும்… வீழ்ச்சிக்கும் அழிவுக்குமான காரணம் தெளிவாகத் தெரிந்தது.
கேட்டுக் கேள்வி இல்லாமல் பின்னால் போகும் இப்படியான ஒரு மந்தைக் கூட்டம் இல்லாமல் புலிகளால் வளர்ச்சி பெற்றிருக்கவே முடியாது.
தங்களுடைய அகதிக் கோரிக்கை வெற்றி பெற அங்கே சண்டை நடக்க வேண்டும் என்பதற்காக புலிகளுக்கே பணம் கொடுத்து வளர்த்தவர்களிடம்… ஏவுகணை வாங்க என்பது முதல் இறுதி யுத்தத்திற்கு என்பது வரை பணத்தைக் கறப்பதில் சிரமம் இருக்கவில்லை. அதையும் மீறினால், ‘ஊருக்கு வா, கவனிக்கிறம்’ என்ற மிரட்டலுடன்!
ஆனால் மந்தைக் கூட்டம் பின்னால் வருவது உங்களை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குத் தான் கொண்டு செல்ல முடியும். மந்தைக் கூட்டம் என்ன, குதிரை, யானை, நாய் போல… யுத்த களத்திற்கா வரும்? அவை பலிக்களத்திற்கு மட்டுமே போய்ப் பழக்கமானவை.
போராடிப் பழக்கப்பட்டவை அல்ல! மேய்ப்பனில் பின்னால் மட்டுமே போகவே பழக்கப்பட்டவை. முன்னால் பாய்ந்து சென்று தடைகளை உடைத்து முன்னேறப் பழக்கப்பட்டவை அல்ல.
யுத்தத்தில் பலியாவோம் என்று தப்பியோடி வந்து, மிரட்டலுக்கு பயந்து பணத்தைக் கொடுத்து, வெளியே நின்று விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்ததாக பெருமிதப்பட்ட கூட்டம் இது.
அந்த மண்ணில் வாழும் மக்களை நம்பாமல், அவர்களின் பிள்ளைகளை இழுத்துச் சென்று பலி கொடுத்தபடி… புலிகள் நம்பியது இந்த மந்தைக் கூட்டத்தைத் தான்!
அங்கே நடத்தப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் இங்கே உணர்வைக் கிளப்பி, பணத்தைத் திரட்டுவதற்காகச் செய்யப்பட்டவையே! எந்தப் பாதிப்புமே இல்லாமல் எட்ட நின்று பார்த்த, இந்த விசிலடி ரசிகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, நடத்தப்பட்ட போராட்டம் இப்படி மண் கவ்வியதில் ஆச்சரியம் ஏது?
வெறுமனே பணத்தைக் கொடுத்து விசிலடித்த கூட்டம், கறுப்புக் கொடி பிடித்தென்ன, பாதையை மறித்தென்ன, தலைவரின் படத்தோடு போய் உள்ளதையும் கெடுத்தது.
இதை மனித அழிவாகக் காட்டாமல், புலிகளின் தலைமையை அங்கீகரிக்க வைப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்த முயன்றதன் விளைவு, இந்த புலன் பெயர்ந்தவர்கள் வாழுகின்ற அதே நாடுகளின் உதவியுடன் புலிகள் அழிக்கப்பட்டார்கள்.
அந்த மண்ணில் வாழும் மக்களை நம்பி, அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தால், தங்கள் தலைவனைக் காக்க அந்த மக்களே உயிரைக் கொடுத்திருப்பார்கள். இந்த மந்தைக் கூட்டத்தை நம்பியதால் வந்த வினை!
தலையோடு போய் விட்டது!
(மாவிரர் தினத்துக்கு விருந்தாளியாக வந்த உணர்வாளர் (என்ன உணர்வாளரோ??) ஓவியர் திரு.வீரசந்தானம் வித்தியாசமாக வீர வணக்கம் (மரியாதை) செய்கிறார் )
இறுதி நேரத்தில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைகிறோம் என்று பகிரங்கமாக அறிவிக்காமல் போனதற்கும், இந்த மந்தக் கூட்டம் தங்களையும் முன்னைய தலைவர்கள் போல துரோகிகள் என்று காறித் துப்பும் என்ற பயமும் ஒரு காரணம் தானே!
விஜேவீரவைப் போல, கைது செய்து, தொலைக்காட்சியில் தேசியத் தலைவரையும் உரையாற்ற வைத்திருந்தால்… இந்த மந்தைக் கூட்டத்தின் சுயரூபம் தெரிந்திருக்கும்.
இராமநாதன் முதல் மாத்தயா வரைக்கும் மந்தைகள் போல பின்னால் போய், பின்னர் துரோகி என்று திட்டித் தீர்த்ததைப் போலவே, தேசியத் தலைவரையும் இந்தக் கூட்டம் திட்டித் தீர்த்திருக்கும்.
ஆனால், முன்னையவர்கள் போன போது, அதற்குப் பின்னால் இடத்தை நிரப்ப ஆளிருந்ததால், அடுத்த மேய்ப்பனைத் தேட அவசியமில்லாதபடிக்கு, இன்னொரு மேய்ப்பன் தயாராக இருந்தார்.
ஆனால், இம்முறை அடுத்த மேய்ப்பன் யாருமே தனக்குப் பின்னால் இல்லாதபடிக்கு தேசியத் தலைவர் வழி செய்து விட்டுப் போனதால்… இன்றைக்கு மேய்ப்பனைத் தேடி இந்த மந்தைகள் அலைகின்றன… ஆட்டிறைச்சிக் கொத்து ரொட்டி சாப்பிட்டபடி!
இறந்து போன தலைவனுக்கு அஞ்சலி செலுத்த வக்கில்லாமல், பிறந்த நாள் கொண்டாடி கேக் வெட்டும் திருக்கூத்து இந்தக் கூட்டத்தைத் தவிர, வேறு யாரை நம்பி நடக்கும்?
போராட்டத்திற்கு தங்களை அர்ப்பணித்து, இன்று வாழ்வைத் தொலைத்து நிற்கும் முன்னாள் போராளிகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், இறந்து போதல் என்பது மட்டுமே மாவீரர்களுக்கான தகுதி என்ற எண்ணத்தில் விளக்குக் கொழுத்தும் கூட்டத்தைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது?
தாங்கள் பிறந்த நாள் கொண்டாடும் தலைவன் கடைசியில் தன் உயிரைக் காக்க காலை வாரிய போராளிகளை எல்லாம், சயனைட் கடித்து இறந்து மாவீரர்கள் ஆகவில்லை என்பதற்காகவே கையைக் கழுவி விட்டவர்கள் இவர்கள்.
இன்றைக்கு இறந்து போனவர்களுக்கு மாலையும் விளக்கும் கொழுத்தி தெருக்கூத்து நடத்தும் போது கோபம் கொள்ளாமலா இருக்க முடியும்?
இவர்கள் உண்மையாகவே விடுதலையில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தால், அங்கு வாழும் போராளிகளுக்குத் தான் உதவ வேண்டும்.
அவர்களுக்குத் தான் உள்ளுக்குள் போராட்ட உணர்வு இருக்கும். இன்றைக்கு தங்கள் தியாகம் வீணாகி விட்டதே என்ற எண்ணத்தில், விரக்தியோடு வாழும் அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியிருந்தால், என்றோ ஒரு நாள் அவர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுக்கத் தயாராக இருப்பார்கள். அவர்களைக் கை கழுவி விட்டு, இறந்து போனவர்களுக்கு மட்டும் இவர்கள் நடத்தும் கூத்து…?
இவர்களைப் பார்க்கும் போது சிரிப்புத் தான் வருகிறது.
கடைசியில் தலைவர் ‘இனிமேல் போராட்டம் புலன் பெயர்ந்தவர்கள் கையில் தான்’ என்பதை இவர்கள் உண்மையாகவே நம்பி விட்டார்கள் போலிருக்கிறது. தலைவர் போராட்டத்தை தங்கள் கையில் ஒப்படைத்ததால் அதை நடத்தும் வலிமை தங்களுக்கு இருக்கிறது என்று, தங்களைப் போராளிகளாகவே இவர்கள் நம்புகிறார்கள்.
கூத்தின் முடிவில் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள்… ஹிட்லரின் ஆதரவாளர்கள் கையை உயர்த்தி, ஹிட்லருக்கு வாழ்த்துச் சொன்னது போல, நெஞ்சில் ஒரு கையை வைத்து… தேசியத்திற்கான கடமையைச் செய்வேன்! (சொல்லி முடிய கையை ஏன் உதறுகிறார்கள்?)
யுத்தம் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு மாவீரர் தினத்திற்கும் வாறீங்க… உறுதிமொழி எடுக்கிறீங்க… போறீங்க…
என்ன செய்தீர்கள் இதுவரைக்கும்?
ரௌடி வடிவேலுவைப் போல, ‘நானும் போராளிதான்!’ என்று நெஞ்சிலே கை வைத்து விசுவாசப் பிரமாணம் செய்ததைத் தவிர!
சும்மா போங்கப்பா, கொமெடி பண்ணாமல்!
-மூலம்- தாயகம்-