ISIS என்ற இஸ்லாமிய விரோதிகளின், கலியுக கால வருகை குறித்து, 1400 வருடங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்த முகமது நபியின் தீர்க்கதரிசனம்.
விவிலிய நூலின் இறுதி அத்தியாயமான வெளிப்பாடு, இறுதிக் காலத்தில் ஆண்டவரின் தீர்ப்பு வழங்கும் செயல்களை குறிப்பிடுகின்றது. பைபிளுக்கும், குரானுக்கும் இடையிலான ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று.
இஸ்லாத்தின் இறைதூதரான முகமது நபி வார்த்தைகளை குறிப்பிடும் ஹதீஸ் நூலின் ஒரு பகுதி உள்ளது. அந்த தீர்க்கதரிசனத்தை நாம் நம்புவதும், நம்பாததும் வேறு விடயம்.
ஆனால், அதிலிருக்கும் சில வாசகங்கள், நமது காலத்தில் இயங்கும் ISIS என்ற தீய சக்தியை இனங் காட்டுவதாக எழுதப் பட்டுள்ளன என்பது சுவாரஸ்யமானது.
//அல்லாவின் தூதுவர் சொல்வதைக் கேட்டேன்: இறுதிக் காலத்தில் பக்குவப்படாத சிந்தனை கொண்ட, இளைஞர்கள் தோன்றுவார்கள். ஆனால், படைப்புகளில் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பேசிக் கொள்வார்கள்.
அவர்கள் குரானை ஓதினாலும், அது அவர்களது தொண்டைக் குழிக்குள் இறங்காது. நீங்கள் அவர்களை சந்தித்தால் கொன்று விடுங்கள். இந்தக் கொலைக்காக, தீர்ப்பு வழங்கும் நாளன்று அல்லா உங்களுக்கு பரிசளிப்பார். // (The Book of Zakat, Chapter 48: Exhortation to kill the Khawarij. http://sunnah.com/muslim/12/206, http://sunnah.com/bukhari/61/118)
அதே நூலில் Kitaab Al Fitan இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிவிக்கின்றது. ISIS தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை “இஸ்லாமிய தேசம்” என்று பிரகடனம் செய்துள்ளனர். அதை அரபியில் “டாவ்லா” (Dawla) என்கிறார்கள்.
Kitaab Al Fitan நூல், இரும்பு மனம் படைத்த, “டாவ்லாவின் (தேசத்தின்) கையாட்கள்” பற்றி எச்சரிக்கை செய்கின்றது. அவர்கள் நீண்ட முடி வளர்த்திருப்பார்கள்.
கருப்புக் கொடி ஏந்தி இருப்பார்கள் என்று கூறும் வாசகங்கள், இன்றைய ISIS அமைப்பினருக்கு கச்சிதமாகப் பொருந்துகின்றது. அது மட்டுமல்லாது ஒப்பந்தங்களை மீறுவார்கள் என்றும், ஊரின் பெயரை வைத்திருப்பார்கள் என்றும் கூறுகின்றது.
ISIS தலைவர் அபுபக்கர் அல் “பாக்தாதி”, பாக்தாத் என்ற ஊர்ப் பெயரை வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத் தக்கது. (ISIS and the End of Times; http://splendidpearls.org/2014/07/04/isis-and-the-end-of-times/)
ISIS, ஓர் இஸ்லாமிய விரோத சக்தி என்பதை, ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும், இன்னமும் ISIS “இஸ்லாத்தின் பெயரால்” போராடுவதாக, அதன் உறுப்பினர்களும், ஆதரவாளர்கள் மட்டுமே நம்புகிறார்கள்.
அவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமிய எதிர்ப்பாளர்களான தீவிர வலதுசாரிகளும், ISIS இன் இருப்பை நியாயப் படுத்துவதற்காக, அதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இருப்பது போன்ற கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
லெபனான் கம்யூனிஸ்ட் கட்சியின் கெரில்லா இராணுவம், ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னர், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி (LCP) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை நடத்தி இருந்தது.
கம்யூனிஸ்ட் கெரில்லாக்கள், தற்போது சிரியா நாட்டு எல்லையோரம் உள்ள பகுதிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லாவும், கடந்த சில வருடங்களாக ISIS எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. (https://www.youtube.com/watch?v=UD_IbVi9eyo)
இருப்பினும், லெபனான் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு மதச் சார்பற்ற அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. சுன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம், கிறிஸ்தவர்கள், டுரூசியர்கள் போன்ற அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும், கட்சி உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக உள்ளனர். (http://www.aljazeera.com/news/2015/09/lebanese-communist-fighters-gear-battle-isil-150919100740425.html)
இஸ்லாமிய மதத்தின் பெயரில் இயங்கும், ISIS போன்ற தீவிரவாதக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கு, “உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று என்று அறிவுரை கூறும் மேதாவிகளுக்கு ஒரு விண்ணப்பம்.
உலகில் உள்ள எல்லா மதத்தவரையும் போன்று, முஸ்லிம்கள் எல்லோரும் மதவாதிகள் அல்லர். மேற்கத்திய பண்பாட்டை பின்பற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
சோஷலிசத்தில், கம்யூனிசத்தில் அல்லது ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதைத் தாங்கள் அறிவீர்களா? நீங்கள் அப்படியான முஸ்லிம்களை ஆதரிக்கலாமே?
உதாரணத்திற்கு, கடந்த மூன்று வருடங்களாக, சிரியாவின் வடக்கில் உள்ள குர்திய படையணிகள் ISIS தீவிரவாதிகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை காலமும் நடந்த யுத்தத்தில், ஆயிரக் கணக்கான ISIS தீவிரவாதிகளை கொன்றுள்ளனர்.
பெரும்பான்மையான குர்தியர்கள், மதத்தால் முஸ்லிம்கள் தான். ஆனால், மதச்சார்பற்ற, சமதர்ம கொள்கையை நம்பும் முஸ்லிம்கள். ஆகவே, அப்படியான முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு உங்களுக்கேன் தயக்கம்?
“முஸ்லிம்கள் எல்லாம் மதவெறியர்கள்” என்று ஒரு பக்கச் சார்பான கதைகளை கூறி புலம்புவதை விட்டு விட்டு, மதச் சார்பற்ற முஸ்லிம்களை ஆதரிக்கும் ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கலாமே?
-கலையரசன்-