எங்கிருந்தாலும் மும்பையை கண்ட்ரோலில் வைத்திருந்த தாவூத்! (தாதா தாவூத் இப்ராஹிம்: தொடர்- 12
தாவூத்திற்கு பல்வேறு வழிகளில் பணங்கள் குவிய ஆரம்பித்தன. துபாய் நகரத்தில் தனியாக ஒரு மன்னரைப்போல ஆட்சி செய்துகொண்டு இருந்தான் தாவூத்.
அதோடு இந்தோனிசியா, ரஷ்யா, கம்போடியா, மலேசியா, ஹாங்காங் உள்பட பல்வேறு நாடுகளிலும் அவனது தொழில் தொடர்புகளை கொண்டு போனான்.
அதனால் பிசினஸ் தொடர்புகளும் உயர்ந்தது. அவன் விரும்பிய நாடுகளில் எல்லாம் தொழில் செய்ய அவனுக்கு இருந்த தொடர்புகள் உதவின. துபாயில் இருந்து கொண்டே மும்பையை ஆட்டிப் படைத்தான்.
மும்பையில் நடக்கும் எந்த ஒரு முக்கிய நிகழ்வும் தாவூத்திற்கு தெரியாமல் நடக்காது. ஆக்டோபஸ் போல அவனது அதிகாரங்கள் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களை ஆக்கிரமைப்பு செய்தது.
அதே நேரத்தில் சோட்டா ராஜனிடம் இருந்த ஒட்டுமொத்த அதிகாரங்களையும் பறிக்க திட்டமிட்ட சோட்டா ஷகில் ஆட்கள், தாவூத்திடம் பல்வேறு விஷயங்களை போட்டுக்கொடுத்தனர். மும்பையில் தனியாக ஆட்சி நடத்தி வருகிறான் தாவூத்.
அவனுக்கு தனியாக ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், கட்டுமான நிறுவனங்கள் என்று பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக போட்டுக் கொடுத்தனர்.
அதோடு, அதிக அளவில் அவனது ஆட்களை கொண்டு வந்து ‘டி’ கம்பெனி ஆட்கள் என்று சொல்லாமல் சோட்டா ராஜனின் ஆட்கள் என்று சொல்லியே வசூல் செய்வதாகவும், தனியாக ஆட்களை வைத்து வேலை செய்து வருவதாக சொன்னார்கள்.
சோட்டா ராஜன் தனியாக சொத்துகள் வாங்கியதை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருந்த தாவூத், தனியாக ஆட்களை வைத்து வேலை செய்வதாக தெரிந்ததும் உடனடியாக சுதாரித்துகொண்டு, சோட்டா ரஜனிடம் இருந்த முக்கியமான பொறுப்புகளை எல்லாம் சோட்டா ஷகில் உள்பட நான்கு நபர்களுக்கு பிரித்துக்கொடுத்தான்.
முன்பு சோட்டா ராஜனை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது. அடிதடி தவிர வேறு ஒரு விஷயங்களை செய்வது என்றாலும் சோட்டா ராஜன்தான் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், அதோடு அந்த திட்டத்திற்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுப்பது எல்லாமே சோட்டா ராஜன் மட்டும்தான்.
ஆனால், இந்த முறை அப்படி இல்லை. பல்வேறு குழுக்களுக்கு வேலைகளை பிரிதுக்கொடுத்து விட்டான் தாவூத். இருந்தாலும் முக்கிய நிர்வாக வேலைகளை மட்டும் செய்து வந்தான் சோட்டா ராஜன்.
சோட்டா ஷகில் டி குரூப்பில் தனியாக வளர்ந்து வர ஆரம்பித்தான். மும்பையில் வேலை இல்லாமல் சுற்றி திரிந்த பதின் வயது இளைங்கர்களை தேடிப்பிடித்து, அவர்களை மத ரீதியான புள்ளியில் இணைத்தான்.
அதோடு விடவில்லை, அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கி கொடுத்து பயிற்சி கொடுத்தான். அந்தப் பயிற்சி அவர்களுக்கு மிக அதிகமாக உதவியது.
உள்ளூர் எதிரிகளை சமாளிப்பது எளிதாக போனது. வேட்டை நாய்களை வளர்ப்பது போல அவர்களை வளர்த்து வந்தான் ஷகில். யாரை கடிக்க வேண்டும் என்று சொல்லி நாயின் கழுத்து கயிறை அவிழ்த்து விட்டால் எப்படி பாயுமோ அதைப்போல பாய்ந்தார்கள் ஷகிலின் ஆட்கள்.
ஷகிலின் ஆட்களுக்கு பணம் இல்லையென்றால் பல்வேறு ஆட்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தனர். இதனால் ஏரியா விட்டு, ஏரியா போனதால் பிரச்னை வெடித்தது. உள்ளூர் அடியாட்களுக்குள் மோதல் உண்டானது.
சின்னச் சின்ன சண்டைகளுக்கு கூட துப்பாக்கிகளை எடுத்து சுட்டுக்கொண்டார்கள். இன்று சென்னையில் நடக்கும் வார இறுதி பார்ட்டிகளைப்போல, அன்று மும்பையில் வெள்ளி இரவு நேரங்களில் பார்ட்டிகள் நடக்கும்.
அந்த பார்ட்டிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த தாதாக்களுக்கு மரியாதைகள் கிடைக்கும். அதற்காகவே பல்வேறு மும்பையில் இருந்த இருபது வயதை கடக்காத சிறுவர்கள் கூட தாதாக்களின் பிடியில் இருந்தார்கள். இவர்களை வைத்து பெரிய தலைகளை சாய்த்து காரியம் சாதித்து வந்தான் ஷகில்.
அதில் தாவூத்தின் ஆட்களுக்கும். அருண் காவ்லியின் ஆட்களுக்கும் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. அப்படி ஒரு மோதல் இருவரின் தலைமை வரை மேலும் பகைமையை உண்டாக்கியது.
அருண் காவ்லியின் ஆட்கள் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டி வந்தனர். அதனால் பல்வேறு சண்டைகள் வந்தன. அருண் காவ்லி சார்பில் அவனது தளபதியாக இருந்த மும்பை பைகுலா பகுதியை சேர்ந்த பாபு கோபால் என்பவன் ஆதிக்கம் செலுத்தி வந்தான்.
அவனது எல்லை தாண்டி அவன் பல்வேறு கொலைகளை செய்து வந்ததால் தாவூத்தின் ஆட்களுக்கு பெரும் தலைவலியை கொடுத்தான். இதுபோன்ற சின்னச் சின்ன செயல்களை செய்ய சோட்டா ராஜனோ, ஷகிலோ இறங்கி வருவது இல்லை.
சமயம் பார்த்து கிடைக்கும் கேப்பில் சிதைத்து விட்டு செல்வது சோட்டா ராஜனின் வழக்கம். பாவுவை சாய்க்க வாய்ப்பு வரும் வரை காத்துக்கொண்டு இருந்தான் சோட்டா ராஜன்.
பாபுவை கொலை செய்வதற்கு உதவி வேண்டும் என்று எந்த குரூப்பையும் சேராத ஒரு இளைங்கன் பல்வேறு ரவுடிகளின் உதவிகளை நாடி இருந்து இருக்கிறான்.
அவனைப்பற்றி அறிந்து கொண்ட சோட்டா ராஜன் உடனடியாக அவனை சந்திக்க ஏற்பாடு செய்தான். எதற்காக அவனை கொலை செய்ய வேண்டும் என்று கேட்டான் சோட்டா ராஜன்.
அவனும்அவனது ஆட்களும் அருண் காவ்லி பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பததோடு, அவர்கள் பகுதி பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக குமுறினான்.
அதற்காக பாபுவை மூன்று முறை கொலை செய்ய திட்டமிட்டு, அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக சொன்னான். அடுத்த முறை கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு வரும், நம்பி போ என்று வாக்குறுதி கொடுத்தான் சோட்டா ராஜன்.
கொலை வழக்கு ஒன்றில் கைதாகி ஜே சர்க்கிள் காவல் நிலைய போலீஸ் ஸ்டேசனில் அடைக்கப்பட்டு இருந்தான் பாவு கோபால். இந்த விஷயம் விஜய்க்கு தெரியப்படுத்தப்பட்டது.
துணைக்கு நான்கு நபர்களுடன் ஜே சர்க்கிள் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சிறையில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் போனார்கள்.
அவர்கள் காவல் நிலைய சிறையில் வைத்து பாபுவை போட்டுத்தள்ள ஆயத்தமாக வந்தார்கள். இவர்கள் வருவதை அறியாத உயர் போலீஸ்கார்கள் யாரும் இல்லை. பாதுகாப்புக்கு மிக குறைந்த அளவிலான போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்தனர்.
முடிவுகள் எடுக்க கூடிய உயர் அதிகாரி பாதுகாப்புக்கு இல்லை என்பதால், விஜய் குரூப்க்கு அது வசதியாக போய்விட்டது. ஆரம்பத்தில் சாப்பாடு கொடுப்பதாக சொல்லி உள்ளே இரண்டு நபர்களை அனுப்பினான் விஜய். இவர்கள் வந்ததை முதலில் பார்த்த காவலாளி தகவலை சொல்லுவதற்குள் காவல் நிலையத்திற்குள் போய் விட்டனர்.
நள்ளிரவில் இரண்டு கார்களில் வந்து இறங்கியதை சிறையின் வாசலில் இருந்த காவலாளி உஷாரானான். அதற்குள் சிறையின் கதவுகளை வெடி குண்டுகளை வீசி தகர்த்தான் விஜய். வெடிகுண்டின் புகை மறைவதற்குள் சிறையின் அறைக்கு உள்ளே புகுந்த விஜய், அதிர்ச்சியில் சிறையின் மூலையில் பயந்து ஒட்டி நின்று கொண்டு இருந்த பாபுவை துப்பாகியால் துளைத்து எடுத்தான்.
முப்பது நொடிகள் கூட ஆகவில்லை பாபு இறந்து சரிந்துவிட்டான். ஆனாலும் ஆத்திரம் அடங்கவில்லை விஜய்க்கு. பிணத்தின் அருகில் சென்று விஜய் உடலை எட்டி உதைத்து விட்டு, அவனது மார்பில் ஏறி அமர்ந்து கொண்டு, சுத்தியலால் பாபுவின் தலையில் மாறி மாறி அடித்தான்.
ஐந்து நிமிடங்களில் அவனது தலையின் மண்டை ஓடு வெடித்தது. உள்ளே இருந்த மூளை சிதறியது. விஜய்க்கு ஆத்திரம் தீர்ந்த பொழுது அந்த இடத்தில் மண்டை முழுவதும் சிதைக்கப்பட்டு ஒழுங்கில்லாத முண்டம் மட்டும் இருந்தது.
அந்த சிறையின் சுவர்களில் ரத்தமும், மண்டையின் உள்ளே இருந்த மூளையும் கலந்த சதைகள் சிதறிப்போய் பிசுபிசுத்து ஒட்டியிருந்தன. அங்கு நடந்த கொடூர கொலைக்கான ஆதாரங்களுடன்.
அந்த தாக்குதல் நடந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஜய்யும், அவனது ஆட்களும் அங்கிருந்து தப்பித்து போய்விட்டனர். அந்த சம்பவத்தை தடுக்க வந்த மூன்று போலீஸ்காரர்களை துப்பாக்கியால் தாக்கியதில் மருத்துவமனையில் அட்மிட் ஆன ஒரு கான்ஸ்டபிள் இறந்து போனார்.
இந்த சம்பவம் மும்பையை உலுக்கியது. எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத ஒருவனால் இப்படி சிறைக்குள் வந்து கொடூரமாக எப்படி கொலை செய்ய முடியும் என்பதை மட்டும் ஆராய்ந்தனர்.
பத்திரிகைகளில் இந்த சம்பவத்தை ரத்தத்தில் மிதக்கும் சிறைச்சாலை, தூங்கும் மும்பை போலீஸ் என்று மிக கடினமான வார்த்தைகளில் எழுதித்தள்ளினார்கள்.
காவல்துறையில் இந்த கொலைக்கான காரணத்தை கண்டு பிடிப்பதை விட உடனடியாக இந்த சம்பவத்திற்கு காரணமான விஜய்யை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று விஜய்யை குறி வைத்து துரத்தியது மும்பை போலீஸ்.
இரண்டு வாரங்கள் கழித்து ஹோட்டல் ஒன்றில் வைத்து இரண்டு போலீஸ்காரர்கள் விஜய்யை சுட்டுக்கொலை செய்த பிறகே நிலைமை ஓரளவிற்கு ஓய்ந்தது.
மீதம் இருந்த அவனது நண்பர்கள் போலீஸில் சரணடைந்தனர். அதற்கு பிறகு அந்த வழக்கை சி.ஐ.டி போலீசார் கவனித்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்ததாக காவல்துறையின் குற்ற ஆவணம் தெரிவிக்கிறது.
இந்த சம்பவத்தை பின்புலமாக இருந்தது தாவூத் என்கிற உண்மை பின்னாளில்தான் தெரிந்தது. அருண் காவ்லியின் ஆட்களை சம்பந்தமே இல்லாத ஒருவனை வைத்து, சிறைக்குள்ளே வைத்து கொடூரமாக சிதைத்த சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் உண்டாக்கியது.
தாவூத் எங்கிருந்தாலும் மும்பையை தனது கண்ட்ரோலில் வைத்து இருப்பதற்காக அடிக்கடி இதுபோன்ற செயலில் சத்தமில்லாமல் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது மும்பை அரசுக்கு.
சத்தமில்லாமல் இந்த சம்பவங்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அரசு தாவூத்தை வேட்டையாட ‘ஸ்கெட்ச்’ போட்டது.
அது என்ன?
சண்.சரவணக்குமார்