சென்னை: ஏழைகளை கவனிக்க ஆளிருக்கு, மிடில் கிளாசை கண்டுகொள்வார் இல்லை என்ற கூக்குரல்கள் சென்னையில் எழுகின்றன. சில பகுதிகளில் இறந்த சடலத்தை கூட தூக்கிச்செல்ல ஆளில்லாமல் உள்ள நிலையும் இருக்கிறதாம்.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த பெண்மணி ஒருவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம், கூறுகையில், “நிவாரண முகாமில் தங்குவதற்காக சென்றோம். ஆனால், ஏழைகள் மட்டுமே தங்க வேண்டும் என்று போலீஸ்காரர்கள் வெளியே விரட்டிவிட்டுள்ளனர்.
நாங்கலெல்லாம் மிடில் கிளாசாம். நாங்க, எங்கங்க போவோம். நாங்கல்லாம் மனுஷங்க கிடையாதா? ஒரு மனுசனும் வந்து எங்களை பார்க்கவில்லை. ஏழைகளைத்தான் பார்ப்போம் என்கிறார்கள்.
நாங்கள் குடிமக்கள் இல்லையா.. நாங்க ஓட்டு போடலியா. சோறு இல்லை… தண்ணி இல்லை… ஹெலிகாப்டர்ல போறாங்க. கீழ வந்து யாரும் எங்கள பார்க்கவில்லை.
இவ்வாறு அந்த 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி, கணவரோடு முட்டி அளவு நீரில் நடந்து சென்றபடி குமுறுகிறார். இன்னொரு புறமோ, திடீரென படகு சேவையை நிறுத்திவிட்டார்கள் என்ற கூக்குரல் எழுந்துள்ளது.
30 வயது மதிக்கத்தக்க பெண்மணிகள் சிலர் கூறுகையில், படகுகளை நிறுத்திவிட்டார்கள். ஒருவரும் எட்டிப்பார்க்கவரவில்லை. அவ்வளவு ஏன், எங்களது ஏரியாவில் ஒரு நபர் இறந்துள்ளார். அவரை அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். போக்குவரத்து இல்லாமல் பிணத்தை அப்படியே போட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.