தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் சட்டம் ஒரு பிரச்சினையாகவோ அல்லது தடையாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக அரசியல் ரீதியிலான பிரச்சினையே அவர்களின் விடுதலைக்கு
தடையாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டமானது மிகவும் கொடூரமானது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் அச்சட்டம் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர் இப்படியானதொரு சட்டத்தின் கீழ் விசாரணைகளின்றி தமிழ் அரசியல் கைதிகளாக தடுத்து வைத்திருப்பது எந்த அடிப்படையில் நியாயம் என்றும் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இங்கு மேலும் உரையாற்றுகையில்
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பாரதூரமான பிரச்சினையாக இருந்து வருகின்றது. அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் அது இடம்பெறாத காரணத்தால் எமது மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர்.
அமையப்பெற்றுள்ள புதிய அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. துரிதமாக எதனையும் செய்வதற்கு முற்படவில்லை.
இவர்களின் விடுதலை பாதுகாப்புக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது. எனினும் அது தவறாகும். வடக்கு- கிழக்கு மக்கள் தெற்குடன் இணைந்து வாழவே விரும்புகின்றனர்.
வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் அதே நேரம் உறுதியுடனும் வாழ்வதற்கே விரும்புகின்றனர். இப்படியான எண்ணங்கள் அவர்களிடத்தில் இருக்கின்ற போதிலும் அங்கு எமது மக்கள் ஓரம் கட்டப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.
வடக்கு- கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எமது மக்களின் நிலைப்பாடுகள் விடயத்தில் அரசாங்கம் துணிகரமாக செயற்படவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் இந்நிலையை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜே.வி.பி.யினருக்கு பிரச்சினை இருந்தது. அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிணக்கு இருந்தது. அதனால் அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆயுதம் ஏந்தினர்.
எனினும் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி.யினர் பிற்காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி பொலிஸ் நிலையங்களைத் தாக்கி அரச வளங்களுக்கு சேதங்களை விளைவித்த அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில் மாத்திரம் அரசாங்கம் தயக்கம் காட்டிவருவது ஏன் என்பது எமக்குப் புரியவில்லை.
புலிகள் அமைப்பில் இருந்தவர்கள், ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் கூட இன்று விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அப்படியானால் அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யாதிருப்பது எவ்வாறு நியாயமாகும்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது மிகவும் கொடூரமானது என்றும் அது நீக்கப்படவேண்டும் என்றும் அதேநேரம் அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின்றி இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் மனித உரிமைகள் பேரவையே வலியுறுத்தியுள்ளது.
அது மாத்திரமின்றி பயங்கரவாத தடைச்சட்டமானது மிகவும் கொடூரமானது என்பதை இன்றைய அரச தரப்பினரே கூறியிருக்கின்றனர். அப்படியானால் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்காது நீடித்து வைத்திருப்பது ஏன் எனக் கேட்க விரும்புகிறேன்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்காது அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதானது சட்டப்பிரச்சினையுடன் தொடர்புபட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.
மாறாக இது ஒரு அரசியல் ரீதியிலான பிரச்சினையாகவே பார்க்கப்பட்டிருக்கின்றது. எனவே சட்டத்துறையுடன் அல்லது அரசியல் தேவை கருதிய வகையில் தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.
யுத்தத்தை முன்னின்று நடத்தி முடித்து வைத்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருக்க வேண்டாம் என்றும் அவர்களை விடுதலை செய்யுமாறும் கேட்டுள்ளார்.
புலிகள் அமைப்பு ஒடுக்கப்பட்டுவிட்டது. இன்று இந்நாட்டில் புலிகள் இல்லை என்பது புரிந்து கொள்ளப்படுதல் வேண்டும். தமிழ் மக்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் தமது நிலைப்பாடுகளை மிகத் தெளிவாகவே வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர்.
ஆகையால் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை புரிந்துகொள்ளுமாறு அரசாங்கத்திடம் மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.
34 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேருக்கு புனர்வாழ்வு வழங்கப்படவுள்ளது. இருப்பினும் இவர்கள் மீது மேலும் பல வழக்குகள் உள்ளன.
217 பேர் அரசியல் கைதிகள் எனும் போது 17 பேர் தொடர்பான வழக்குகளே இருந்து வருகின்றன. இதுதொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பயங்கரவாதச் சட்டம் கொடூரமானது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகின்ற அரசாங்கம் அதனூடாக கைது செய்யப்பட்டவர்களை எந்த அடிப்படையில் தடுத்து வைத்திருக்க முடியும். அவர்கள் குற்றவாளிகள் என்றால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் என்றார்.