நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு தலைதூக்கும் “ஆபத்து” உருவாகியுள்ளது. எனவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று சபையில் தெரிவித்தார்.
பிரித்தானியாவிடம் பணம் பெற்று எமது படையினரை மீளிணைப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம். அது எமது நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் என்றும் அவர் சபையில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு–செலவுத் திட்டத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
உலகிலேயே கடுமையாக பயங்கரவாதிகள் என பட்டியலிடப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை நாம் தோல்வியடையச் செய்தோம். யுத்த ரீதியாக ஒழித் தோம். ஆனால் அதன் பின்னர் மூன்று தடவைகள் புலி
கள் தலைதூக்க முயற்சித்தார்கள். எமது உளவுப் பிரிவினர், படையினரின் நடவடிக்கையினால் தடுக்கப்பட்டது.
ஆனால் இன்று வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஈழம் சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. பல்கலைக்கழகத்திலும் நினைவுக் கூரல்கள் இடம்பெற்றன.
இவை தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு 18 வயது மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். உண்மையில் இது தற்கொலையா? அல்லது தூண்டிவிடுதலில் இவ்வாறான செயல் மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும்.
எனவே இந்த மரணத்தின் பின்னணி விசாரிக்கப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். இந்த சம்பவங்கள் அனைத்தையும் பார்க்கும் போது விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கும் ஆபத்து தென்படுகின்றது.
எனவே அரசாங்கம் இவ்விடயம் தொடர்பிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வெளிநாடுகளில் இயங்கிய விடுதலை புலி அமைப்புகளின் நபர்களை நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி சர்வதேச பிரஜை பிரகடனத்திற்கு அமையவே தடை செய்தோம்.
ஆனால் அரசாங்கம் இன்று இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் நபர்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளது. இவர்களில் சிலர் புலிக் கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தியவர்கள்.
அரசு பயங்கரவாதிகளை விடுதலை செய்கிறது. ஆனால் பயங்கரவாதச் தடைச் சட்டத்தை பயன்படுத்தி எமது படையினர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது அநீதியான செயற்பாடாகும்.
வெளிநாடுகள் இன்று எமது படையினரை குறைப்பது எப்படி, படையினர் எப்படி செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றன.
இதனை அரசு பெற்றுக் கொள்ளக் கூடாது. நிராகரிக்க வேண்டும். இதனால் எமது நாட்டின் இறையான்மை பாதிக்கப்படும்.எமது பாதுகாப்பு படை நடவடிக்கைகள் தொடர்பில் நாமே தீர்மானிக்க வேண்டும். அதைவிடுத்து வெளிநாடுகள் தீர்மானிக்க முடியாது.
ஜனாதிபதியை சந்தித்த பிரிட்டன் பிரதமர் கெமரூன் இலங்கை இராணுவத்தை மீளக் கட்டியெழுப்ப நிதி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இவ்வாறு பிரிட்டனின் நிதியை பெற்று எமது படையினரை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் கிடையாது.
யுத்தத்திற்கு பின்னர் நாங்கள் வடக்கில் மக்களை மீள குடியேற்றினோம், அடிப்படைவசதிகளை மேம்படுத்தினோம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் இவையெதனையும் செய்யாது நல்லிணக்கம் தொடர்பாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதை விடுத்து வேறு எதனையும் செய்யவில்லை.
எமக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் விவாதத்திற்கு வந்துள்ள நிலையில் யுத்தத்திற்கு பங்களிப்பு செய்த முதன்மை படை அதிகாரிகளுக்கு ஓய்வு வழங்கவும் வெளியேற்றவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
இதனை நிறுத்துங்கள். அவர்களுக்கு உயிராபத்து உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் வேண்டாம் என்றார்.