தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் ஆலோசனை ஒன்றை ஏற்படுத்துவதில் பிரித்தானிய தமிழர் பேரவை முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
ஏனைய அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும் தமிழ்நாட்டிலுள்ள அமைப்புக்களுடனும் இணைந்து பேரவை இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தென்னாபிரிக்காவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. கடந்த மாதம் தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் இவ்விடயம் தொடர்பில் ஆராய பெரும்பாலான புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அந்தச் சந்திப்பின் இறுதியில் டேர்பன் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுவதென்ற முடிவெடுக்கப்பட்டது.
அந்த முடிவின்படி தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் வி. ரவிக்குமார் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு முதலில் அவர்களின் ஆலோசனைகளை எழுத்து வடிவில் பெறுவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க அரசின் நல்லிணக்கத்திட்டம் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை தென்னாபிரிக்க அரசே ஒத்துக்கொண்டதாக பிரித்தானிய தமிழர்பேரவைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மையான கறுப்பினத்தவரை சிறுபான்மையினரான வெள்ளையர்கள் அங்கு ஆக்கிரமித்து வந்தனர். கறுப்பு இனத்தோரின் விடுதலை அங்கு சிறுபான்மையினரை பெரிதாகப் பாதிக்கவில்லை.
ஆகையால் அங்கு ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கத்திட்டம் முற்றிலும் வேறுபட்டது. ஆனால், இலங்கையில் சிறுபான்மை தமிழர்கள் பெரும்பான்மையினரால் ஆக்கிரமிக்கப்படுவதாகவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ்மொழி கொண்ட தமிழ் மாநிலமொன்று தொடர்பில் பல தசாப்தங்களாக பேசப்பட்டுவருகின்றது. ஆனால் அவ்வாறான மாநிலம் ஒன்றை அமைப்பதற்கு சிங்களத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்ட ஆலோசனையொன்றையே தென்னாபிரிக்க அரசு எதிர்பார்க்கின்றது. அவ்வாறான ஆலோசனை கிடைப்பின் அந்நாடு ஏனைய நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசிடம் அதனை சமர்ப்பிக்க முன்வரலாம்.
தென்னாபிரிக்க அரசு இலங்கை பிரச்சினை தொடர்பாக பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. மஹிந்த ஆட்சிக்காலத்தில் இருந்தே தென்னாபிரிக்கா இவ்விடயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றது.
இலங்கையில் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் விதத்தில் புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என ஜனாதிபதியும் அடிக்கடி கூறி வருகிறார். எனவே அந்த அரசியல் யாப்புக்குரிய யோசனை தெரிவிக்க தென்னாபிரிக்கா முயன்று வருகின்றது.
பிரித்தானியாவிலுள்ள தென்னாபிரிக்க தூதுவராலயம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய தமிழர்பேரவை சகல புலம்பெயர் தமிழர்களுடனும் இணைந்து செயற்படுவதையே விரும்புகின்றதென அதன் தலைவர் ரவிகுமார் குறிப்பிட்டார். இலங்கை அரசு அண்மையில் வெளியிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான தடை அறிவித்தலுக்கு அவர் தமது கண்டனத்தையும் வெளியிட்டார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. அவற்றைத் தடை செய்வதால் இலங்கை அரசுக்கு அபகீர்த்தியே ஏற்படும். இது ஒரு அறிவுபூர்வமற்ற செயல் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
அனைத்து தமிழ் அமைப்புக்களினதும் தனிப்பட்ட நபர்களினதும் தடை உத்தரவு உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தடை செய்ததற்கான காரணமோ தடை நீக்கப்பட்டதற்கான காரணமோ இதுவரை இலங்கை அரசால் வெளியிடப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு கடந்த தமிழீழ அரசு (TQTE) அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு. அதேபோன்று பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் (TCC) கனடாவில் உலகத்தமிழர் இயக்கமும் (W.T.M) தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை தமது செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் மேற்கொண்டுவருகின்றன.
சர்வதேச ரீதியில் அவர்களின் வேலைத்திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை தமிழருக்கான போராட்டங்களில் அந்த அமைப்புக்களும் ஜனநாயக ரீதியில் ஈடுபடுகின்றன. அவற்றை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்க்க முடியாது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டங்களில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஈடுபட்டதன் காரணமாக அவை முன்னைய இலங்கை அரசால் தடை செய்யப்பட்டன. ஆனால், புதிய நல்லாட்சி அரசு அவற்றை முற்றாக நீக்காமல் இருப்பது நல்லிணக்கத்துக்கு பாதிப்பாகவே அமையும் என பிரித்தானிய தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
வடமாகாணத்தில் மாத்திரம் இராணுவம் தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றிய 65 ஆயிரம் ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள் பேரவையிடம் பதிவாகியுள்ளது. ஆனால் இவற்றில் 400 ஏக்கர் நிலம் மாத்திரமே மீளக் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது மேலும் ஆறாயிரம் ஏக்கர் நிலம் கையளிக்கப்பட இருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால் அதையும் விடப் பத்து மடங்கு காணி இராணுவத்தினர் வசம் உள்ளதையும் பேரவை குறிப்பிடுகின்றது.
சர்வதேசத்தின் கவனத்தை கவர வெளிநாட்டமைச்சர் இந்த தகவலை குறிப்பிட்டாலும் தமிழ் மக்களின் காணிகளை வழங்க அரசு இதுவரை முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அந்தக்காணிகளில் இராணுவம் நீச்சல் தடாகம், விளையாட்டு, மைதானம் மற்றும் களியாட்ட விடுதிகளை அமைத்து வருகின்றது.
காணி மீள் கையளிக்கப்படாமை, அரசியல் கைதிகள் விடுதலையில் தாமதம் காட்டப்பட்டு வருதல் போன்றவை குறித்து தமிழர் மனித உரிமை அமைப்புக்கள் ஐ.நா. மனித உரிமை ஆணையகத்திற்கு அறிவித்து வருகின்றன.
அதேநேரத்தில் இலங்கை அரசு வாக்குறுதியளித்தபடி இன்னமும் போர்க்குற்ற உள்நாட்டு விசாரணை தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இவை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எனவே மார்ச் மாதம் சில நல்லிணக்க நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது. அதிலும் அரசாங்கம் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் மீண்டும் கால அவகாசம் கேட்கும் நிலையும் அரசுக்கு ஏற்படலாம்.
போர்க்குற்ற விசாரணைக்கு விசேட நீதி மன்றம் அமைக்கப்பட்டாலோ அல்லது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டாலோ தமிழருக்கான தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டாலோ உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசு தோல்வியடையலாம்.
எனவே, சர்வதேசம் இலங்கை அரசுக்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்க வேண்டி ஏற்படலாம் என்றும் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.