யாழ். வேலணை, புளியங்கூடலில் கடற்படையினரின் வாகனம் மோதி உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புளியங்கூடல் சந்திக்கு அருகில் கடற்படையினரின் பேரூந்து மோதியதில் கடந்த வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியியைச் சேர்ந்த உ.உசாந்தி என்ற மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து குறித்த விபத்தினை நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்ய வேண்டாம் என புலனாய்வாளர்கள் அச்சுறுத்தி வருவதுடன், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு பணம் கொடுத்து பேரம் பேசி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாளாந்தம் கூலி வேலைக்குச் செல்லும் தந்தையும், தாயும் கொண்டுவரும் சிறு ஊதியத்திலேயே உயிரிழந்த மாணவியின் குடும்பம் வாழ்க்கைச் செலவினை கொண்டு நடத்தியுள்ளது.

இதனை அறிந்து கொண்ட புலனாய்வாளர்கள் நீதிமன்ற வழக்கினை தள்ளுபடி செய்யுமாறு குடும்பத்தினருடனும்,  உறவினர்களுடனும் பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு  வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இழப்பீடாக எவ்வளவு பணத்தினையும் கடற்படையினரிடம் இருந்து பெற்றுத் தருவதாகவும்,  சடலத்தினை வைத்தியசாலையில் இருந்து இலகுவான முறையில் மீளப்பெற்று இறுதிக் கிரியைகளுக்கான பணத்தினைத் தருவதாகவும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் புலனாய்வாளர்களின் கோரிக்கையினை குடும்பத்தினர் மறுத்த நிலையில், உயிரிழந்த மாணவியின் வீட்டினை அண்மித்த பகுதியில் நிலை கொண்டிருந்த புலனாய்ளர்கள் வீட்டிற்குச் செல்பவர்களிடம் நீதிமன்ற வழக்குத் தொடர்பாக மாணவியின் குடும்பத்தினர் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து கேட்டறிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply