காவிரிப் பிரச்சினை, வறட்சி, இலங்கைத் தமிழர் விவகாரம், கடும் மழை வெள்ளம்… இப்படி எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதலில் நடிகர்களின் கைகளை எதிர்ப்பார்ப்பதே மக்களின் மனநிலையாகிவிட்டது.

நடிகர்கள் என்ன கொடுத்தார்கள்… என்ன செய்தார்கள்? உங்க தலைவர் என்ன செய்தார்.. என் தலைவரைப் பாத்தியா.. கொட்டிக் கொடுத்தார் என்றெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு வாதம் செய்வது இரசிகர்களின் வேலையாகிவிட்டது.

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர்.

அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே… மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமா என பேச ஆரம்பித்தனர்.

முன்னதாக நடிகர் சித்தார்த் மற்றும் பாலாஜி ஆகியோர் மக்களுக்கு நேரடியாக களத்துக்கு சென்றே உதவிகளை வழங்கினர். பின்னர் சில தினங்களில் நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளிப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தனர்.

சில நடிகர்கள் அடுத்தடுத்து நிவாரணத் தொகை வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு பத்து இலட்சம் ரூபாவை வழங்கினார் டிசம்பர் 1-ம் திகதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம்.

இவருக்குத் தான் தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய இரசிகர் மன்றம் எல்லாம் உண்டு. அவர்கள் இந்த வெள்ள நிவாரணம் எதிலும் ஈடுபட்டதாக தகவலே இல்லை. தலைவர் மாதிரியே இவர்களும் அமைதியாகிவிட்டனர்.

அதன் பிறகு இந்த நடிகர் அவ்வளவு தந்தார்… அந்த நடிகர் இவ்வளவு தந்தார் என்று அளந்துவிட்டார்கள் அவரவர் இரசிகர்கள். வாட்ஸ் ஆப், பேஸ்புக், ட்விட்டர் புண்ணியத்தால் வழங்காத பணமெல்லாம் நிவாரண நிதியாகக் குவிந்ததுதான் சோகம்.

நடிகர் விஜய் ரூ 5 கோடியுடன் காத்திருக்கிறார்… தன் கல்யாண மண்டபங்களையெல்லாம் மக்களுக்கு திறந்துவிட்டார் என்றெல்லாம் தகவல் பரப்பினர்.

விசாரித்ததில் அவர் எந்த நிதியும் தரவில்லை… மண்டபங்களையும் திறக்கவில்லை என தெரியவந்தது. அதுவும் அந்த திகதிகளில் அந்த மண்டபங்களில் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தனவாம்.

அடுத்து அஜீத் 60 இலட்சம் ரூபாவை அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டைக் கூட மக்களுக்காக திறந்து வைத்தார் என்று றெக்கை கட்டிப் பறந்தது இன்னொரு செய்தி.

ஆனால் அவரும் அப்படி எதுவும் தரவில்லையாம். பெருமழை நாளன்று அவர் வீடு பூட்டப்பட்டிருந்ததாம்! கமல் எந்த நிதியும் வழங்கவில்லை. மாறாக அரசைக் கேள்வி கேட்டு, முதல்வரின் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்.

இப்படி வழங்காத நிதிக்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டி. இதற்கு முதல் காரணம் அந்தந்த நடிகர்களின் இரசிகர்கள்தான். இந்த பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு, இவரே இவ்வளவு கொடுத்துவிட்டார்… அவர் ஏன் கொடுக்கவில்லை என்று இணையத்தில் சண்டை வேறு!

Share.
Leave A Reply