இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்துள்ள தகவல்களையடுத்து அந்நாட்டு கடற்படை அப்பகுதியில் திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தேடுதலில் ஈடுபட்டுள்ளது.
இந்த சடலங்கள் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள இராமேஸ்வரம் மீனவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளபோதிலும், அதனை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.
திருகோணமலை கடலில் 10 மைல்களுக்கு அப்பால் சில சடலங்கள் மிதந்து கொண்டிருப்பதாக உள்ளுர் மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக துறைமுக பொலிஸாரால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கடற்படையின் மூன்று டோரா படகுகள் தற்போது அந்த பகுதியில் தேடுதலில் ஈடுபட்டுள்ளன.
இருந்தபோதிலும் இதுவரை சடலங்கள் எதுவும் மீட்கப்படவில்லை என இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு கூறுகின்றது.
சீரற்ற கால நிலை காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் பணிகளில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆயினும் தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்படை தெரிவிக்கிறது.
இதேவேளை மற்றுமோர் சம்பவத்தில் திருகோணமலை நிலாவெளி கடலோரம் இந்தியப் பிரஜை என சந்தேகிக்கப்படும் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் சட்டைப் பையிலிருந்து சென்னை முகவரியிடப்பட்ட வாடகைக் கார் ஓட்டுநர் அடையாள அட்டை இருந்தது.
சடலம் தற்போது திருகோணமலை அரச மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.