சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதான செய்திகளில் உண்மையில்லை என்று மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தற்போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு 102 இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இவர்களில் 80 பேர் பாதுகாப்பு கடமையிலும். 22 பேர் நிர்வாக பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 500 இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான விடுதலைப் புலிகளையும் அரசாங்கம் விடுதலை செய்யத் தொடங்கியுள்ளது.

ராஜபக்ச அரசாங்கம் 11 ஆயிரம் விடுதலைப் புலிகளை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தது.

எனினும், தீவிரமான 200 தொடக்கம் 300 புலிகளை மட்டும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தடுத்து வைத்திருந்தது.

இவர்களை விடுதலை செய்வதாக மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

இந்த நிலையில், மேலதிக படையினரை நியமித்து அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

500 இராணுவத்தினரைக் கொண்ட மகிந்தவின் பாதுகாப்பு அணியை விலக்க மைத்திரி உத்தரவு

makinthaaaa

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த- 500 இராணுவத்தினரைக் கொண்ட அணியினரை- உடனடியாக விலகிக் கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த அறிக்கையை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக 130 காவல்துறை அதிகாரிகள் தவிர, 5000 இராணுவத்தினரும் பணியாற்றுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு அனுமதியளிப்பதற்கான ஆவணம் காவல்துறை தலைமையகத்துக்கு வந்ததையடுத்தே, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனினும், இராணுவத் தலைமையகத்திடமோ, பாதுகாப்பு அமைச்சிடமோ, படையினர் ஒதுக்கப்பட்டது குறித்த எந்த முறையான ஆவணங்களும் இல்லை என்று அரசாங்க தகவல் ஒன்று கூறுகிறது.

முன்னதாக,முன்னாள் அதிபருக்கான அரசாங்கம் எவ்வளவு நிதியை செலவிடுகிறது என்பது பற்றிய அறிக்கை ஒன்றை அமைச்சரவையிடம் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமையவே ரவி கருணாநாயக்க இந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து, மற்றொரு முன்னாள் அதிபரான சந்திரிகாவுக்கு வழங்குவதற்கு இணையான பாதுகாப்பு மற்றும் சலுகைகளையே மகிந்தவுக்கும் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.

Share.
Leave A Reply