எவன்கார்ட் அரச உடமையாக்கப்பட்ட ஆறு நாட்களில் பாதுகாப்பு சேவையினூடாக மாத்திரம் அரசாங்கத்துக்கு 05 இலட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
இந்நிறுவனம் மூலம் உழைக்கப்பட்ட பெருந்தொகையான பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்டவர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்கிலக்கங்களை சோதனையிட தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது எவன்கார்ட் நிறுவனம் மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்த வருமானம் குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்படி தெரி வித்தார்.
எவன்கார்ட் நிறுவனம் மூலம் நாளொன்றுக்கு ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா வருமானமாக கிடைக்கின்றது. ஆனால் இதுவரை காலமும் 25 இலட்சம் ரூபா வுக்கான கணக்கே அரசாங்கத்துக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் மிகுதி ஒரு கோடி ரூபாவை யார் பதுக்கியிருப்பார்கள் என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எந்தவொரு கடற்படை அதிகாரியும் ஒருகோடி ரூபாவினை வருமானமாக பெறுமளவிற்கு விட்டுக்கொடுத்து சந்தோஷமடயக் கூடியவர் அல்ல.
எனவே நிச்சயம் எவன்கார்ட்டின் வருமானத்துடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்குமென்றே நாம் சந்தேகிக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எவன்கார்ட் விவகாரத்திற்கு மறுத்து பேசுமாறு கோத்தாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்தியுள்ளமை குறித்து நாம் அறிந்து கொண்டோம் என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.
மேலும் இந்த நிறுவனத்தினால் சுமார் 6 ஆயிரம் பேருக்கு தொழில் இழக்கப்பட்டதாக கூறுவது அப்பட்டமான பொய் என சுட்டிக்காட்டிய அமைச்சர் இங்கே இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களும் ஓய்வூதியம் பெற்றவர்களுமே சேவை செய்கின்றனர்.
உண்மையில் பாதிக்கப்பட்ட 34 பேரும் தற்போது வேறு இடங்களில் தொழில் புரிவதாகவும் அவர் கூறினார்.
லக்ஷ்மி பரசுராமன்