குடும்பத்தினரின் வேண்டு  கோளுக்கு இணங்க உறவுப்பெண்ணை மணந்தார், சத்யராஜ்.

சினிமாவில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்த பிறகே திருமணம் செய்து கொள்வது என்ற எண்ணத்தில் இருந்த சத்யராஜ் மனதை குடும்பத்துப் பெரியவர்கள் மாற்றினார்கள். அதனால், தனது 25-வது வயதில் உறவுப் பெண் மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் நடந்த சூழ்நிலை குறித்து, சத்யராஜ் கூறியதாவது:-

“எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வீட்டில் முடிவெடுத்ததுமே, விஷயம் என் காதுக்கும் வந்தது.

‘இப்போதுதானே நடிகனாக தெரிய ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்து, நடிகனாக நிலைத்து நின்று விடலாம் என்ற நம்பிக்கை வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று நான் எண்ணியிருந்தேன்.

“உனக்கு பணம்தானே பிரச்சினை! குடும்ப வாழ்வுக்குத் தேவையான பொருளாதார நிலையையும் பெண் வீட்டார் பார்த்துக் கொள்வார்கள். கல்யாணத்துக்கு நீ சரி என்று சொன்னால் போதும்” என்று உறவினர்கள் கூறினார்கள். என் அம்மாவும் இதையே சொல்லி வற்புறுத்தினார்.

இதற்கிடையே “கண்ணன் ஒரு கைக்குழந்தை” படப்பிடிப்பின்போது என் திருமணம் தொடர்பாக பேச்சு வந்தது. அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் சுருளிராஜன் என்னிடம், “25 வயது என்பது திருமணத்துக்கு சரியான வயது.

அப்போதுதான் 50 வயதில் தாங்கிப்பிடிக்க 25 வயதில் பிள்ளைகள் வந்துவிடுவார்கள். வேலையிலோ, தொழிலிலோ பொறுப்பு நிலைக்கு அவர்கள் வந்துவிடுவதால், 50 வயதாகும்போது ரிலாக்ஸ் நிலையை அடைந்து விடலாம். இப்போது செய்து கொள்ளும் திருமணத்தால் உங்கள் சினிமா வாய்ப்பு எதுவும் பாதிக்கப்போவதில்லை. எனவே, திருமணத்தை தள்ளிப்போட்டு விடாதீர்கள்” என்றார்.

அவர் சொன்னது நியாயமாகப்பட்டது. திருமணத்துக்கு சம்மதித்தேன்.

இப்போது எனக்கு 54 வயது ஆகிறது. சமீபத்தில் ஒரு பிரிவியூ தியேட்டருக்கு படம் பார்க்க நானும், மகன் சிபியும் போனோம். சிபி காரை ஓட்ட, நான் பின்சீட்டில் உட்கார்ந்து இருந்தேன். சுருளிராஜன் சொன்ன வாழ்க்கைத் தத்துவம் எந்த அளவுக்கு சரியானது என்பதை உணர்ந்தேன்.

திருமணம் கோவையில்தான் நடந்தது. அப்போது வளரும் நிலையில் இருந்த நடிகன்தானே. அந்த நேரத்திலும் நடிகர் சிவகுமார், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், கேமராமேன் பாபு ஆகியோர் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

திருமணத்துக்குப் பிறகு, மாதம் மூவாயிரம் ரூபாய் வாடகையில் வீடு எடுத்துக் கொடுத்தார்கள். மாமனார் வீட்டில் இருந்து கார், பைக் ஆகியவையும் வந்தன.

என்றாலும், நானாக சம்பாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற ஆசையில், நடிப்பு தவிர வேறு ஏதேனும் தொழிலையும் தொடங்கலாமே என்று விரும்பினேன்.

நானும் மனைவி மகேஸ்வரியும் ஒரு நாள் பைக்கில் ‘பீச்’சுக்கு போய்விட்டு மைலாப்பூர் வழியாக திரும்பிக் கொண்டிருந்தோம். ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் அருகில் இருந்த ஒரு ஐஸ்கிரீம் கடையில் பைக்கை நிறுத்தி, இருவருமே ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். எங்களை மாதிரியே மற்றவர்களும் ஆர்வமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டார்கள்.

நான் அந்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளரிடம், “இதில் உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?” என்று கேட்டேன். அவரும் உற்சாகமாக “ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானால் 250 ரூபாய் லாபம் கிடைக்கும். அதாவது 25 சதவீத லாபம் நிச்சயம். எனக்கு தினமும் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும். 750 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்” என்றார்.

அதோடு, “தாசபிரகாஷ் ஓட்டலில் இருந்து கேட்கிற அத்தனைவித ஐஸ்கிரீம் வகைகளையும் அனுப்பி விடுவார்கள். அதனால் இதை தயாரிப்பது தொடர்பான பிரச்சினையும் இல்லை” என்றும் சொன்னார்.

எனக்குள் அப்போதே ‘ஐஸ்கிரீம் குளிர்’ தாக்கத் தொடங்கிற்று. வீட்டுக்கு வந்ததும் இது தொடர்பாக மனைவியிடம் விவாதிக்கத் தொடங்கினேன்.

நடிப்பும் தடைப்படாமல் கடையையும் நடத்துவது என்று முடிவு செய்தோம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நானும், மற்ற நேரத்தில் மனைவியுமாக ஐஸ்கிரீம் கடை தொடங்கி நடத்துவது முடிவாயிற்று.

இதற்காக கடை தேடியபோது சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பார்சன் காம்ப்ளக்சில் ஒரு கடை கிடைத்தது. தாசப்பிரகாஷில் இருந்து ஐஸ்கிரீம் தருவித்தோம்.

வியாபாரம் பெரிய அளவில் இருக்கும் என்ற நம்பிக்கைக்கு பெரிய அடி ஆரம்பத்திலேயே விழுந்தது. தினமும் 70 ரூபாய் 80 ரூபாய்க்கு மேல் விற்பனை அதிகரிக்கவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 150 ரூபாய்க்கு விற்பனையானது. இது முதலுக்கே மோசம் வைக்கிற தொழிலாக அமைந்து விட்டதால் தொடர்ந்துகடை நடத்தும் ஆசையை விட்டோம். கடையையும் வாடகைக்கு விட்டு விட்டோம்.

திருப்பூர் மணியிடம் மக்கள் தொடர்பாளராக இருந்தவர் ராமநாதன். இவர் பின்னாளில் தயாரிப்பாளராகி என்னை கதாநாயகனாக “நடிகன்”, “வாத்தியார் வீட்டுப்பிள்ளை” போன்ற படங்களில் நடிக்க வைத்தவர்.

ராமநாதன் எனக்கு நண்பரானபோது அவருடன் ஒருநாள் ஒரு ஓட்டலுக்கு சாப்பிடப்போயிருந்தேன். அப்போது அந்த ஓட்டல் உரிமையாளர் முதலில் செய்தது பழைய இரும்பு வியாபாரம் என்றும், அதில் ஏற்பட்ட லாபத்தில்தான் இப்படி ஒரு பெரிய ஓட்டலை தொடங்கியிருக்கிறார் என்றும் தெரிந்து கொண்டேன்.

பழைய இரும்பு வியாபாரத்தில் அவ்வளவு லாபம் கிடைக்குமா? ஆசை யாரை விட்டது? மாமனார் பணத்தில் ஒரு லட்சம் முதலாக போட்டு பழைய இரும்பு கடை போட்டாயிற்று. வட்டிக்கும் கொஞ்சம் பணம் வாங்கி போட்டோம். இதில் கிடைத்த அனுபவம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் நஷ்டம்.

நமக்கு அனுபவம் இல்லாத தொழிலில் ஆர்வக்கோளாறு காரணமாக தலையை நுழைத்தால் என்னாகும் என்பதற்கு ஐஸ்கிரீம் வியாபாரமும், பழைய இரும்பு வியாபாரமும் எடுத்துக்காட்டாக அமைந்தன.

இத்தோடு நின்றிருக்க வேண்டாமா? இல்லையே! பள்ளியில் என்னுடன் படித்த குப்புசாமி என்ற நண்பர் என்னிடம், “உயர் ரக விதைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் அதிக லாபம் நிச்சயம்” என்றார்.

அவர் அப்படிச் சொன்ன பிறகு அவரை விட்டு விடமுடியுமா? அவருடன் கூட்டாக சேர்ந்து அந்த பிசினசையும் செய்தேன். அதில் கரைந்தது 30 ஆயிரம் ரூபாய்.

உயர் ரக சோள விதைகளை பிளாஸ்டிக் பையில் பக்குவமாக கட்டி வைத்து ஏற்றுமதி செய்தோம். இதிலும் என் அனுபவமின்மைதான் நஷ்டத்துக்கு வழிவகுத்ததாக எண்ணினேன். கஷ்டப்பட்டு, பிறகு திருந்தும் அனுபவம் என்பது எத்தனை வலி நிறைந்தது! என் வரையில் அந்த வலியையும் அனுபவித்தேன்.

இப்படி ‘வியாபார’ நிலை தொடர்ந்தபோது நடிப்பிலும் சின்னச்சின்ன கேரக்டர்கள் வரவே செய்தன. எல்லாமே இரண்டு மூன்று நாள் வேலையாக இருக்கும். இப்படி ரஜினி சாருடன் “பாயும் புலி”, “மூன்று முகம்” போன்ற படங்களில் நடித்தேன்.

நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடித்த “சாமந்திப்பூ” என்ற படத்தில், நானும் விஜயகாந்தும் சின்ன கேரக்டர்களில் நடித்தோம்.

இந்தக் கட்டத்தில், வியாபார ஆசை முழுமையாகப் போய்விட்டது. இதற்கிடையே மகள் திவ்யா, மகன் சிபி பிறந்தார்கள். என்னுடைய பொறுப்பு இன்னும் கூடியது. நடிப்பில் வரும் சின்ன வாய்ப்புகளை மட்டும் நம்பிக் கொண்டிருப்பது இனியும் சரியாகுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

தொடரும்..

கமல் நடித்த சட்டம் என் கையில்: வில்லனாக சத்யராஜ் அறிமுகம் (சினிமா தொடர்-3)

சினிமா தயாரிப்பு நிர்வாகி ஆகிய சத்யராஜ் (சினிமா தொடர்-2)

Share.
Leave A Reply