மனைவிக்கு பொய் கூறி வேறொரு பெண்ணை திருமணம் முடித்த கணவனொருவர் தேனிலவில் வைத்து மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் நிறுவனமொன்றில் உயர் பதவியொன்றில் இருக்கும் குறித்த நபர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

நுகேகொடையை அண்மித்த பிரதேசத்தில் வசித்து வரும் அவர் தனது மனைவியிடம் , தான் நண்பனொருவரின் கல்யாணத்துக்கு செல்வதாகவும் , திரும்ப 2-3 நாட்களாகும் என பொய் கூறி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

ஆனால் அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டே வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இதன்படி அவரது திருமணமும் ,கொழும்பில் பெரிய ஹோட்டலொன்றில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

அவர் திருமணம் செய்த பெண் , தனியார் நிறுவனமொன்றில் அதி உயர் பதவியொன்றில் இருப்பவர் எனவும் அவர் கோடீஸ்வர வர்த்தக குடும்பமொன்றைச் சேர்ந்த 24 வயதான ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது புதுக் கணவன் , ஏற்கனவே திருமணமாகியிருந்தமையை அப்பெண் அறிந்திருக்கவில்லை.

அவர்களுடையிலான தொடர்பு தொழில் நிமித்தம் தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போதே ஆரம்பமாகியுள்ளது.

பின்னர் நட்பு காதலாக மாறி பின்னர் கல்யாணம் வரை சென்றுள்ளது. குறித்த நபர் வெறொரு பெண்ணை தனது தாயெனக் கூறி, குறித்த பெண்ணின் வீட்டுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் உயிரோடு இருக்கும் தந்தை உயிரழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நபரின் உண்மை நிலை தெரியாமலேயே திருமணம் நடந்துள்ளதுடன், முழுச் செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுள்ளனர்.

திருமணத்திற்கு வந்த குறித்த நபரின் முதல் மனைவியை தெரிந்த ஒருவர் , இது தொடர்பில் அவருக்கு அறியப்படுத்தியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அம் முதல் மனைவி , உறவினர்களுடன் சென்று ஹோட்டலில் தேன் நிலவு கொண்டாடிக்கொண்டிருந்த கணவனை கையும் களவுமாக பிடித்துள்ளார்.

மேலும் அந்நபர் தனது இரண்டாவது மனைவியுடன் மாற்றிக்கொண்ட மோதிரமும் தங்கம் இல்லையெனவும் தெரியவந்துள்ளது.

தற்போது குறித்த மோசடி பேர்வழி மீது வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தாயாக நடித்த பெண்ணையும் பொலிஸார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply