வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் கட்சித் தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமையாகும். இதனைத் தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும். இந்த விடயத்தில் நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக குப்பைத்தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம் பலமும் இருக்கின்றனர்.
இதனால், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று தமிழரசுக் கட்சி மாவட்டக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
இதன்போது சுமந்திரன் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள நிலைகுறித்து தமிழரசுக் கட்சியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பொன்.செல்வராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலையே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திர குமார், முன்னாள் எம்.பி. அரியநேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
கட்சிக்குள் முரண்பாடு உள்ளதுதான். இல்லை என்பதற்கு இல்லை. ஆனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது.
அனைத்து விடயங்களும் உள்ளுக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும். ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அது ஒருபெரிய விடயமல்ல. ஆனால் அவைகள் வெளியில் ஊடகங்களில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சுமந்திரனைப் பற்றியும் முதலமைச்சரைப்பற்றியும் இங்கு பேசப்பட்டது. அவர்களுக்குள் முரண்பாடுகள் உள்ளதுதான். இல்லை என்பதற்கில்லை.
அது தற்போதும் இருக்கின்றது. ஏற்பட்டமைக்கான காரணம் என்னவென்றால் கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை என்பதாகும்.
செய்யவில்லை
அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அந்த கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்கு ஒரு கடமை இருக்கின்றது.
ஆனால் அவர் ஆதரிக்கவில்லை. ஆதரிக்காமல் விட்டது மாத்திரமல்ல நான் மௌனியாகப் போகின்றேன், ஊமையாகப் போகின்றேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு அவர் விடுத்த அறிக்கைகள் வேறொரு கட்சிக்கு ஆதரவளிப்பதாக அமைந்ததாக ஒரு கருத்து இருக்கின்றது.
இந்த காரணத்தின் நிமித்தம்தான் இந்த முரண்பாடு ஏற்பட்டது. அது பற்றிய விமர்சனங்கள் எமது தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் சுமந்திரன் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தினை கூட முன்வைத்திருந்தார். இதனை நான் பேசித்தீர்த்துக் கொள்வோம் என கூறியிருந்தேன்.
தவறு
இந்நிலையில் சுமந்திரன் அவுஸ்ரேலியாவுக்கு சென்றபோது இவ்விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவ்வாறு ஊடகத்தில் பதிலளித்திருக்கக் கூடாது. அவர் கட்சிக்குள் முரண்பட்டவர். அதற்கு கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய பிறகு அவர் அதனை ஊடகத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் முடிவெடுக்க வேண்டும். சில சமயம் ரணில்விக்கிரமசிங்கவோ,அல்லது ஆட்சியில் உள்ளவேறு நபர்களோ எங்கள் மத்தியில் சிறு சிறு விடயம் சம்பந்தமாக வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது. அவதானமாக இருக்க வேண்டும்.
ஏற்கலாம்
விக்கினேஸ்வரன் கட்சித்தலைமைப் பொறுப்பினை ஏற்கலாம். அது அவரது உரிமை. இதனை தீர்மானிப்பது கட்சியும் மக்களுமேயாகும். நாங்கள் ஆத்திரப்பட வேண்டிய அவசியம் இல்லை.
அவருக்கு ஆதரவாக குப்பைத் தொட்டியில் போடப்பட்ட ஆனந்தசங்கரியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இருக்கின்றனர். இதனால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.
அவரை முதலமைச்சராக்கியது நான், அவரை முதலில் போய் கேட்டது நான். எமது கட்சி கூடி முதன்முதலாக பேசியபோது அவருக்கு கட்சிக்குள் எவரும் ஆதரவாக இருக்கவில்லை.
மாவை சேனாதிராஜா மௌனம் சாதித்தார், அவரின் பெரும் தன்மை இறுதி நேரத்தில் அண்ணனின் கருத்தோடு நீங்கள் அனைவரும் ஏற்று வந்தால் அவரைத்தான் நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் அனைவரும் கூடி எடுத்த முடிவின் பிரகாரமே நாங்கள் நியமித்தோம். ஆனால் அவர் தற்போது தனி வழியில் போய்க் கொண்டு இருக்கின்றார்.
நான் அவரை நிறுத்த மாட்டேன். இது மக்களின் முடிவு. நான் இந்த பதவியில் இருப்பது மக்களின் முடிவு. ஐயா நீங்கள் போக வேண்டும் விக்னேஸ்வரனை வைக்கபோகின்றோம் என்றால் உடனடியாக அதனை நான் ஏற்றுக் கொள்வேன்.
அரசியல் கைதிகள்
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளது. இது தொடர்பில் பிரதமருடனும் பேச்சுகளை நடாத்தியுள்ளோம்.எங்களது நிலைப்பாட்டுக்கு மாறான நிலைப்பாடுகளை அவர்கள் எடுக்கவில்லை.
அவர்களை விடுவிக்கவேண்டும் என்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் எந்த முரண்பாட்டினையும் கொண்டிருக்கவில்லை.சாதகமான முடிவினை அவர்கள் எடுத்தபோதிலும் இன்னும் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படவில்லை.தாமதம் ஏற்படவேண்டிய அவசியமில்லை.
சம்பூர்
சம்பூரில் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவருகின்றார்கள். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட காணிகள் மீளப்பெறப்பட்டு அங்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளும் கையளிக்கப்பட்டுள்ளதுடன் இன்னுமொரு பகுதியையும் கையளிப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதுபோன்று வலிகாமத்திலும் ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன். எதிர்வரும் சில வாரங்களில் வலிகாமத்தில் சில காணிகள் விடுவிக்கப்படலாம்.
மகிந்த ராஜபக்ஸவின் காலத்தில் படையினரால் காணிகள் சுவீகரிக்கப்பட்டு பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவரின் தேவைக்காக பாரிய மாளிகை கூட கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அவர்கள் இராணுவ அதிகாரிகளாக இருக்கலாம் சிவில் அதிகாரிகளாக இருக்கலாம்.
எனினும் அந்த நிலையில் இருந்துவிடுபடுவது கஷ்டமான விடயமாகும். அந்த நிலையில் இருந்து அவர்களை மீட்பதிலும் புதிய அரசாங்கத்திற்கு அசௌகரியமான நிலையே உள்ளது. அரசாங்கம் அதனை வேகமாக செய்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றி சிந்திக்கவேண்டிய தேவையும் உள்ளது.
இன்னுமொரு பக்கம் ரணில் விக்ரமசிங்க தனது செல்வாக்கினை வளர்த்துக்கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை புறக்கணிக்கின்றாரா?
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கும் வாக்குறுதியை வழங்கமுடியாத காரணத்தினால் அவரின் செல்வாக்கு சரியும் என்று அவர் நினைக்கின்றாரா? இவ்வாறான பல கேள்விகள் இன்று எழுந்துள்ளன. எதுவும் நடைபெறவில்லையென கூறிவிடமுடியாது. பல விடயங்கள் நடைபெற்றுள்ளன.பல செயற்பாடுகள் நடைபெறவுள்ளது.
அரசியல் தீர்வு
அரசியல் தீர்வு விடயத்தில் நாங்கள் மிகவும் உறுதியான நிலைப்பாட்டினையே கொண்டுள்ளோம். அரசியல் சாசன திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுபோது அதில் அரசியல் தீர்வு தொடர்பான பிரேரணைகளும் கொண்டுவரப்படவேண்டும்.
முழு அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டு அது மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்புக்காக கொண்டுசெல்லப்படவேண்டும்.அரசியல் சாசனம் உருவாக்கப்படும்போது அதில் அரசியல் தீர்வும் இடம்பெறவேண்டும் என கோரியுள்ளோம்.
அவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால் எதிர்வரும் ஆண்டு அரசியல் தீர்வு கிடைக்ககூடிய வாய்ப்பு ஏற்படும். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளோம்.
அவர்கள் இது தொடர்பில் பல செயற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தெரிவித்தனர்.அவற்றினை பகிரங்கப்படுத்தமுடியாத நிலையே உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இருந்ததைப்போன்று ஒரு பாதகமான நிலை தமிழர்களுக்கு இல்லை. அந்த நிலைமை மாறியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் கள நிலைமையும் அரசியல் தீர்வு தொடர்பான நிலைமையும் மிக மோசமாக இருந்தன. தமிழர்களுக்கு விமோசனம் இல்லாத நிலையே இருந்தது.
ஆனால் இன்று கள நிலைமை ஓரளவு மாற்றம்பெற்றுவருகின்றது.ஆனால் நாங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றங்கள் ஏற்படவில்லை.
நிதானமாக செயற்படுவோம்
நாங்கள் பக்குவமாக, நிதானமாக செயற்படவேண்டிய தேவை இன்று உள்ளது. இன்று சர்வதேச சமூகத்தின் முழுமையான அனுதாபம் எங்கள் பக்கம் வந்துள்ளது.
எமக்கு சாதகமான நிலையினை ஏற்படுத்தியுள்ளது. எமது கஷ்டங்களையும் நிலைமைகளையும் சர்வதேசம் நன்றாக புரிந்துள்ளது. நாங்கள் சமாதானமாகவும் பக்குவமாகவும் செயற்படுகின்றோம் என்பதையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் புலிகள் கொண்டிருந்த கருத்துகளின் அடிப்படையில் தற்போது செயற்படவில்லை,அவர்கள் நிதானமான போக்கினை கடைப்பிடிக்கின்றார்கள்.
நியாயமான அதிகாரப்பகிர்வு மூலமாக ஒற்றுமையாக வாழக்கூடிய வகையில் தீர்வினை முன்வைக்கவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்துவருகின்றது.
சரியான திசையில் மைத்திரி
மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரையில் சரியானதை செய்யவிரும்புகின்றார். சரியானதை செய்யும்போதே இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கம் ஏற்படும் சமாதானம் ஏற்படும் நாடு முன்னேறும் என அவர் நினைக்கின்றார்.
அவ்வாறான நிலைப்பாடுகள் காரணமாக சர்வதேசம் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகரிக்கின்றது. அவரது செல்வாக்கு அதிகரிக்கும் அளவுக்கு எமக்கு நன்மையளிக்கும்.அப்போது சர்வதேச சமூகத்தின் கருத்திற்கு அவர் இடமளிப்பார்.
பொறுமைகாக்கவேண்டும்
ஆகையினால் நாங்கள் பொறுமைகாக்கவேண்டும். சில விடயங்களில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும். வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது ஈ.பி.ஆர்.எல்.எப்.பை சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு சமூகம் தரவில்லை.
ஏனைய 14 உறுப்பினர்களும் கலந்துகொண்டு வாக்களித்தனர். நானும் வரவு செலவுத்திட்டத்தினை விமர்சித்தேன். அனைவரும் விமர்சித்தோம்.
அதற்காக நாங்கள் அதனை எதிர்க்கவேண்டிய அவசியம் இல்லை.முதல்முறையாக நீண்டகாலத்திற்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது.ஆதரிக்கவேண்டிய தேவை எமக்குள்ளது.
பயணம் நீண்டது
நாங்கள் நிதானமாக, பக்குவமாக செயற்படுகின்றோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. எமது பயணம் நீண்டது.
நாங்கள் இன்னும் செல்லவேண்டியுள்ளது.பல பாலங்களை தாண்டவேண்டியுள்ளது.அரசாங்கத்திற்கும் எமக்கும் உள்ள தொடர்புகளை தற்போதே துண்டித்துவிடமுடியாது.அதனைப்பயன்படுத்தி நாங்கள் முன்னேறவேண்டும்.அதன்காரணத்திற்காகவே வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்.
ஜனாதிபதி பிரதமரை சந்திப்போம்
எதிர்வரும் வாரத்தில் நாங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளோம். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பான பல விடயங்கள் வௌிவரும்.
சில தினங்களுக்கு முன்னர் பிரதமரினால் என்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசியல் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றிற்கு கொண்டுசெல்வதற்கு முன்னர் அது தொடர்பில் மக்களின் கருத்துகளை அறியவேண்டியுள்ளது.
அது தொடர்பில் எங்கள் பங்களிப்பினையும் வழங்குமாறு கேட்டிருந்தார். நான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளேன்.அதற்காக நமது மக்களை அறிவூட்டுவதற்கு தேவையான நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யும்.
இணைந்த வடக்கு கிழக்கு
மிகமுக்கியமாக இந்திய இலங்கை ஒப்பந்ததத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இணைந்த வடகிழக்கு கபடமான உயர்நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இணைப்பு முறையற்றது, இணைக்கமுடியாது என தீர்ப்பளிக்கவில்லை. ஜனாதிபதி இணைப்பினை நிறைவேற்றிய முறை தவறு என்றே கூறியுள்ளனர்.அந்த நிலைப்பாட்டினை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இதுவரையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாங்கள் இதனை கூறியுள்ளோம். இது மொழி ரீதியான விடயம். தமிழ் பேசும் மக்கள் தனித்துவமாக வடகிழக்கில் வாழ்ந்துவருகின்றனர்.
ஏனைய மாகாணங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நாடு பிரிக்கப்படாமல் ஒருமித்த நாட்டுக்குள் தீர்வுகாணப்படவேண்டும். தமிழ் பேசும் மக்கள் பிரிக்கப்படக்கூடாது.
தமிழ் பேசும் பிரதேசங்கள் ஒன்றாக இருக்கவேண்டும். இது எங்கள் நிலைப்பாடு.இதில் எந்த மாற்றமும் இல்லை.
இதுவே பண்டா–-டட்லி ஒப்பந்தம், இந்திய – இலங்கை ஒப்பந்தம், சர்வதேச ஒப்பந்தம். இதனை ஒருபோதும் தன்னிச்சையாக மாற்றியமைக்கமுடியாது. இது சிக்கலான விடயம்.ஆனால் அவற்றினை நாங்கள் கையாளவேண்டும் என்றார்.
–