லெறியில் வெடிமருந்து:
செப்படம்பர் மாதம் 23 ஆம் திகதி 1985 நல்லிரவு 12மணியளவில் கிளிநொச்சி பொலிஸ்- இராணுவ கூட்டு முகாம் முன்பாக ஒரு லொறி வந்து நின்றது.
லெறியைச் செலுத்தியவர் இறங்கி ஓடிவிட்டார். லெறியில் வெடி மருந்து நிரப்பப்பட்டிருந்த்து. சாரதி இறங்கிச் சென்றதும் லொறி வெடிக்க வைக்கப்பட்டது.பாரிய சத்தத்தோடு லொறி வெடித்தபோது பொலிஸ் நிலைய கட்டிடங்கள் சேதமாகின.
பொலிஸ் நிலையத்திலும், அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது.
லொறியில் பெற்றோல், டீசல் நிரப்பிய பீப்பாய்களும் வைக்கப்பட்டிருந்தமையால் குண்டு வெடிப்போடு அவையும் பற்றியெரியத் தொடங்கின.
அதே வேளையில் பொலிஸ் நிலையம் மீது குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.
தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பெற்றோல் நிரப்பப்பட்ட பவுசர் ஒன்று வந்து பொலிஸ் நிலையம் முன்பாக நின்றது. அதிலிருந்தும் சாரதி இறங்கி ஓடிவிட்டார்.
பவுசரை வெடிக்க வைக்க முயன்றார்கள். பவுசர் வெடிக்கவில்லை.
பொலிஸ்- இராணுவ கூட்டுப்படை நிலையத்துக்கு அருகேதான் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் குதம் இருந்தது.
பவுச்சர் வெடித்திருந்தால் அந்தப் பெற்றோல் குதமும் பற்றியெரிந்திருக்கும். நகரெங்கும் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கும்.
பவுசரை வெடிக்க வைத்து பெற்றோல் குதத்தையும் நாசம் செய்வதே தாக்குதல் நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்றாக இருந்த்து.
ஆனால் பவுசர் வெடிக்கவில்லை. அதனையடுத்து மீண்டும் மோட்டார் ஷெல் தாக்குதல் தொடர்ந்தது. பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிசார் தப்பிச் சென்றதால் பலத்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
தாக்குதல் நடைபெற்றபோது கிளிநொச்சி பொலிஸ், இராணு கூட்டு முகாமில் 57 இராணுவ வீர்ர்களும், 39 பொலிசாரும் ஒரு உயரதிகாரியும் இருந்தனர்.
தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் காயமடைந்தனர். அதில் நான்கு பேர் இராணுவ வீர்ர்கள். நான்கு பேர் பொலிஸ்கார்ர்கள். ஒருவர் அதிகாரி
தாக்குதல் நடவடிக்கைக்கு தமிழீழ இராணுவம் (TEA)உரிமை கோரியது. தம்பாபிள்ளை மகேஸ்வரன்தான் லொறியில் வெடி மருந்து
நிரப்பியும், எரி பொருள்களை வைத்தும் வெடிக்கவைக்கும் தெழில்நுட்ப நேரடியாக்க் கவனித்தார்.
இலண்டனில் கற்றுகொண்ட தெழில் நுட்ப அறிவை பயன்படுத்தி பார்த்தார் தம்பாபிள்ளை மகேஸ்வரன் (பனாகொடை மகேஸ்வரன்)
முதன்முதலில் வெடிமருந்து நிரப்பிய லொறியை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலும் அதுதான்.
தயாரிப்புக்கு பாராட்டு
கிளிநொச்சி தாக்குதல் படைத்தரப்பு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த்து. கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயளார் ஜெனரல் சிறில் ரணதுங்கா ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
“ கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தாக்குதலில் தீவிரவாதிகள் “நோம்” குண்டுகளைப் பாவித்துள்ளார்கள்.
இது ஜெனிவா சமாதான உடன்பாட்டுக்கு மாறானது” என்று குற்றம் சாட்டினார் அமைச்சர்.
தீப்பற்றும் இராசயன குண்டுதான் “நோம்” குண்டு என்றழைக்கப்படும்.
அவ்வாறான குண்டுகளை பாவித்த்தாக குற்றம் சாட்டியதன் மூலம் தீவிரவாத இயக்கங்களுக்கு வெளியுலகில் கண்டனம் ஏற்படும் என்று அமைச்சர் அத்துலத் முதலி நினைத்தார்.
“இந்து” மீது பாய்ச்சல்
ஜே..ஆர். ஜெயவர்த்தனா அரசுக்கு எரிச்சலை கொடுத்த இன்னொரு விஷயம் வெளிநாட்டு பத்திரிகைள்.
சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தை அரசுக்கு இல்லாமல் செய்யுமளவுக்கு வெளிநாட்டு பத்திரிகைளில் இலங்கை நிலவரச் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்தியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கில தினசரி “இந்து”
இலங்கையில் இருந்த தமிழ் இயக்கங்களிடையேயான புலிகள் அமைப்பை பலமாக ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தது “இந்து”.
“இந்து” பத்திரிகையின் ஆசிரியரான ராம் போராளிகள் அமைப்புகளில் புலிகள் மட்டுமே சிறந்த கெரில்லா அமைப்பாகும் என்னும் கருத்தை கொண்டிருந்தார்.
புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மீத மதிப்பு கொண்டிருந்தார். நேரடியாகவும் பல தடவைகள் பிரபாகரனை சந்தித்து நெருக்கமான உறவையும் வைத்திருந்தார்.
“இந்து” பத்திரிகையின் நிலைப்பாட்டால் எரிச்சலடைந்த ஜே.ஆர்.தனது அதிதிருப்தியை வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்தார்.
ஜப்பான், இலங்கை நட்புறவுச் சங்கத்தின் மூன்று மாடி விகாரை கட்டித் திறப்பு விழவில் கலந்துகொண்டு ஜே.ஆர் உரையாற்றினார்.
அக் கூட்டத்தில் ஜே.ஆர் சொன்னது: “இலங்கை பிரச்சனை பற்றி அறிய வேண்டுமானால் என்னை கேளுங்கள். “இந்து” வை நம்பவேண்டாம். அதில் வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை”
ஜே.ஆரின் கடும் எரிச்சலை அப்போது சந்தித்த “இந்து” தற்போது என்னசெய்துகொண்டிருக்கிறது?
புலிகள் அமைப்பை கடுமையாக சாடிக்கொண்டிருக்கிறது.
ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தின் பின்னர் “இந்து” தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
ராம்
“இந்து” ராம் தற்போது ‘புரன்லைன்’ ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியராக இருக்கிறார். தீவிர புலி எதிர்ப்பாளர்.
ராஜீவ் கொலை விவகாரத்தில் ஒற்றைக் கண் சிவராசன் என்னும் பாக்கியசந்திரன் பற்றிய விபரங்களை முதலில் வெளியிட்டதும் புரன்லைன் சஞ்சிகைதான் என்பதும் குறிப்பிடதக்கது.
வங்கிகள் நிலை
யாழ்-குடநாட்டில் நிலவிய சூழலைக் காரணம் காட்டி அங்கு வங்கிகளின் நடவடிக்கைகள் இடைநிறுத்தியது பாதுகாப்பு அமைச்சு.
நகைகளை அடகு வைத்தோருக்கு மீளப்பெற முடியவில்லை. பாதுகாப்புக் கருதி நகைகள் வேறிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன.
அதனையடுத்து நகைகளை அடகுவைத்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“அடகுவைத்த நகைகளை திருப்பி தா’ என்று கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையையும், போராட்டத்தையும் கவனித்த பாதுகாப்பு அமைச்சருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
நகை அடகுவைத்தோர் என்ற போர்வையில் இயக்கங்கள்தான் போராட்டங்களை தூண்டிவிடுகின்றன.
வங்கிகள் திறக்கப்பட்டால் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்டது பாதுகாப்பு அமைச்சு.
பாதுகாப்பு அமைச்சால் ஒரு அறிக்கை விடுக்கப்பட்டது.
அந்த அறிக்கை பின்வருமாறு கூறப்பட்டது.
“நகைகள் அடகு வைக்காதோரும் அவற்றை திரும்பப் பெறக்கோரும் போராட்டத்தின் பின்னால் இருந்திருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளும் அதேவேளையில், நகைகளை யாழ்பாணத்துக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கத் தேவையான பாதுகாப்பை வங்கிகளுக்கு அரசாங்கம் வழங்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது,
நகைகளை திரும்ப வழங்கும் நடவடிக்கையில் இறுக்கமான பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன.
அதனால் வங்கிகளில் தமது நகைகளை அடகுவைக்க யாழ். குடாநாட்டு மக்கள் தயங்கினார்கள்.
தனியார் நகை அடகு கடைக்காரர்ளுக்கு அதனால் நல்ல சந்தோசம்.
இடம்பெயர்ந்தவர்கள்
போர் நிறுத்தம் முடிவடைந்த அடுத்து 1012பேர் அகதிகளாக வந்து சேர்ந்தனர் என்று தமிழக அரசு அறிவித்த்து.
1983ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு செல்லும் அகதிகள் தொகை அதிகரித்த்து.
அகதிகளை கொண்டுசென்று தமிழக கடலோரப் பகுதிகளில் இறக்கிவிடுவதற்காகவே படகுச்சேவைகள் நடத்தப்பட்டன.
மீன்பிடிப் படகுகளிலும் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், இங்கிருந்து நம்மூர் மீன்பிடிபடகில் சென்று, இந்திய கடல் எல்லையின் பின்னர் இந்திய மீன்பிடிப் படகுகளில் ஏற்றிச் செல்வதும் உண்டு.
இந்திய மீனவர்களில் பலர் அனுதாப உணர்வோடு அகதிகளை ஏற்றிச்சென்றனர். அவர்களுக்கு துணிவகைகள், சவர்க்காரம் போன்ற பொருட்களை அகதிகள் கொடுப்பார்கள்.
ஒரு சில மீனவர்கள் அநாகரிகமாக நடந்துகொள்வதும் உண்டு. அகதிகள் தமது செலவுக்காக விற்பனை செய்யக்கொண்டு செல்லும் பொருட்களை கொள்ளையடித்த சம்பவங்களும் நடைபெற்றன.
தமிழக மக்களை பொறுத்தவரை இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் மிகவும் வாஞ்சையுடன் நடந்துகொண்டார்கள்.
போராளி அமைப்புக்களது உறுப்பினர்களை மரியாதையோடு நோக்கினார்கள்.
1983 யூலை முதல் 1985 செப்டம்பர் மாதம் வரை சுமார் 85ஆயிரம் அகதிகள் தமிழகம் வந்துசேர்ந்தனர். என்று புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தன.
கணக்கெடுப்புக்கு உள்ளாக்கப்படாமலும் மேலும் பல ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்குள் பிரவேசித்திருந்தனர்.
தீவிரவாதிகளின் கடும்போக்கும் இந்தியாவின் மனப்போக்கும்
இலங்கையில் இனப்பிரச்சனை என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை போன்றே அங்கு முக்கியத்துவம் பெற தொடங்கியிருந்த்து.
தமிழக அரசியில்கட்சிகளின் நிலைப்பாடும், தமிழகத்தில் குவிந்த அகதிகளின் எண்ணிக்கையும், திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய அரசு வெளிப்படையாக மத்தியஸ்த பாத்திரம் வகிக்க தொடங்கியமையும் இலங்கை பிரச்சனை இந்திய பிரச்சனைகளில் ஒன்று போல மாறிவிடக்காரணமாகியது.
1985 செப்டம்பர் 27ம் திகதி இந்திய ஜெனாதிபதி மாளிகையில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உரையாற்றினார்.
“பஞ்சாப் உடன்படிக்கையை முன்ணுதாரணமாக கொண்டு, இலங்கையின் இனப்பிரச்சனையை தீர்த்து வைப்பதில் இலங்கையரசு அக்கறையுடன் செயற்படவேண்டும்.
இலங்கையின் இனப்பிரச்சனைக்கு குறுகியகால தீர்வொன்று பயன்தராது. நீண்டகால அடிப்படையில் இறுதியான இணக்கத்தீர்வு காணப்படவேண்டும்.
இது முற்றிலும் ஒரு அரசியல் பிரச்சனை இராணுவ மார்க்கங்கள் நாடப்பட்டால் நிலைமை சிக்கல்லடையும்” என்றார் ராஜீவ் காந்தி.
‘இந்து’ பத்திரிகை பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. ‘இந்து’ பத்திரிகையின் பிரபல விமர்சகர் ஜி.கே.ரெட்டி.
இந்திய அரசியல் தலைவர்களோடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த விமர்சகர்.
இலங்கை இனப்பிரச்சனையின் போக்கைப் படம்பிடித்து காட்டுவது போல ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
அதிலிருந்து சில முக்கியமான பகுதிகள் இவை (தற்காலத்திற்கும் பொருத்தம்)
‘அரசியல், சமூக இலக்குகளை எய்துவதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ள தீவிரவாத இயக்கம் ஒன்று முரணான சூழ்நிலைகளில் பலவந்தப்படுத்தப்பட்டாலன்றி, தனது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்கும் வகையிலான பேச்சுவார்த்தைகளில் நாட்டமோ விருப்பமோ கொள்வதில்லை.
தமது இலட்சிய நோக்கத்தை அடைவதற்காக, பரந்த அடிப்படையில் தீர்க்கமாக மேற்கொள்ளப்படும் கிளர்ச்சியை இடைநடுவில் கைவிடுவது அத் தீவிரவாத இயக்கத்தின் கருத்துப்படி புரட்சிகரப் பாதையை முற்றிலும் சரணாகதியாக்குவதாகவே கொள்ளப்படும்.
அத்தகைய ஜீவ மரண போராட்டத்தின் நடுவில் தளர்வது போன்று காணப்படும் தோற்றப்பாடு எதுவும் இயக்கத்தில் உள்ளவர்களின் உறுதிப்பாட்டையும், உட்சாகத்தையும் மிகவும் பயங்கரமான விளைவுகளுடன் இல்லாதொழிக்கவே வகைசெய்வதாக அமைந்துவிடும்.
இத்தகைய இக்கட்டான நிலையில்தான் ஈழம் குழுக்கள் இன்று இருக்கின்றன.
சமனான சலுகை அடிப்படையிலான இணக்கத் தீர்வை காண்பது என்ற இந்திய அரசின் அழைப்புக்கு செவி மடுப்பதா? அல்லது பிரிவினைக்கான போராட்டத்தை மேலும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதா என்பதே இக் குழுக்களைக் குழப்பிக் கொண்டிருந்த்து.
மிதவாத தலைவர்கள்
இந்திய மண்ணில் இருந்து இக்குழுக்களின் தலைவாகள் இயங்குவதால் இந்தியாவின் கருத்துமிக்க ஆலோசனைகளை தமிழ் தீவிரவாதிகள் தட்டிக்கழித்து அசட்டை செய்துவிட முடியாது.
இலங்கை அரசாங்கம் நம்பகதன்மையான யோசனை எதனையும் தெரிவிக்காத நிலையில் தமது இயக்கத்திற்குள் இருக்கும் தீவிரவாதிகளால் ‘கடதாசிப் புலிகள்’ என்று நாமகரணம் சூட்டப்பட்டு அபாயத்திலிருந்தும் தீவிரவாதத் தலைவர்கள் தப்பமுடியாது.
தீவிரவாதிகளிலும் பார்க்க தேசப்பக்தியில் குறைந்தவர்களல்லாத தமிழ் மிதவாத தலைவாகள் (கூட்டணி தலைவாகள்) இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவாத்தனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதால் எந்த ஆபத்தும் நிகழ்ந்து விடாது என்று கருதுகின்றனர்.
ஐக்கியப்பட்ட இலங்கை அரசியலமைப்புக்கு போதுமான அதிகாரப் பரவலாக்கரைலயும், பாதுகாப்பையும் வழங்கக்கூடிய தீர்வொன்றை, தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் நியாயமான சுயாட்சி மூலம் பெறமுடியுமாயின் தமிழ் மக்களுக்கு அநாவசிய இழப்புகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதப் போராட்டத்தை தொரடவேண்டிய அவசியமில்லை என்பது தமிழ் தலைவர்களின் எண்ணமாக உள்ளது.
இந்திய நிலைப்பாடு
பிரிவினைக்கு சமமான வகையில் அமையக்கூடிய முற்று முழுதான சுயாட்சிக்கு குறைந்த எதற்கும் இணங்குவதில்லை என்ற தீவிரவாதிகளின் அடம்பிடிப்பின் இலாப – நட்டங்களை தீவிரவாதிகளிடமே விட்டுவிட புதுடில்லியில் உள்ள சில வட்டாரங்கள் தயாராகவே உள்ளன.
அடம்பிடித்த நிலையில், அரைமனதுடன் ஜனாதிபதி ஜெயவர்த்தனா இணங்கிக் கொண்ட வரையறுக்கப்பட்ட சுயாட்சித் தீர்வுக்கு அப்பால் அவர் வழங்குவதற்கு தயாராக இல்லாதவரை, தீவிரவாதிகளின் விடாப்பிடியான நிலை தொடர்வதை அனுமதிப்பதில் எதுவித ஆபத்தும், சங்கடங்களும் ஏற்படபோவதில்லை என்று அந்த வட்டாரங்கள் கருதுகின்றன.
தனது ஆயுதப்படையை பலப்படுத்தி சீரமைக்கவும், இந்தியாவை சாந்தப்படுத்தவுமே ஜே.ஆர். மேற்படி சுயாட்சியை வழங்க உடன்பட்டார்.
தமிழர்களின் கிளர்ச்சியை கண்டிப்பதோ, அல்லது ஈழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை அடக்குமளவுக்கு நடவடிக்கை எடுப்பதோ இந்தியாவின் தற்போதைய கொள்கையல்ல.
தமிழர்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பூரணப்படுத்தக் கூடிய வகையில் இலங்கை அரசாங்கம் நடந்துகொள்ளாவிட்டால், ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கும் உரிமையைக் கைவிடத் தேவையில்லை என்ற அடிப்படையில், இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு சாத்தியமான முயற்சிகளை இந்தியா செய்கிறது.
வீரபுருசர்கள்
தமது இயலாமையை மறைப்பதற்காக வீர புருசர்கள் போன்ற தோற்றப்பாட்டைக் காட்டும் தீவிரவாதிகள் தொடர்பாக புதுடில்லி வட்டாரங்களில் பொறுமையின்மையும், கவலையும் காணப்படுகிறது.
இலங்கை நெருக்கடிக்கு விரைவான திடீர் தீர்வொன்று சாத்தியமில்லை என்பது இந்திய அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் உணரப்பட்டுவருகிறது’
ஜி.கே.ரெட்டி தனது கட்டுரையில் கூறிய மேற்படி கருத்துக்கள் இலங்கைப்பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை மிகத் துல்லியமாக விளக்கியிருந்தன.
இந்திய அரசின் தவறுகள் பற்றியும் ஜி.கே.ரெட்டி குறிப்பிட்டிருந்தார். தற்போதும் பொருந்தக்கூடியவை அவை.
தொடரும்..
எழுதுவது அற்புதன்
87இல் புலிகளால் வெள்ளோட்டம் விடப்பட்ட விமானம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை-51)
“