எனது மகளின் குடும்பம் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை உறவினர்கள் பலர் கண்டும், பயம் காரணமாக சாட்சி சொல்ல அவர்கள் முன்வரவில்லையென நல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் இளங்கோதை சாட்சியமளித்தார்;.
அதற்குப் பதிலளித்த காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் ‘பரணகம, வட்டுவாகல் பகுதியில் காணாமற்போன மக்களுக்கு என்ன நடந்தது, அவர்களின் நிலைமை என்ன என்பது தொடர்பில், ஆணைக்குழுவால் தனியாக முழுமையான ஒரு விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.
அந்த விசாரணைக்குழு உங்களின் வீடுகளுக்கு வருகை தரும் போது, புகைப்படப் பிரதிகள் உள்ளிட்டவற்றை கையளித்து விசாரணைக்கு ஒத்தழைக்க வேண்டும்’ என்றார்.
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்டவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றதுபோது அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
‘எனது மகள் ப.சசிகலா, மருமகன் பரமேஸ்வரன், பேரப்பிள்ளைகளான ப.பிரதீபன், ப.பிரயாளினி மற்றும் 7 மாதக்குழந்தையான ப.பிறையழகன் ஆகியோர், கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.
அவர்கள் சரணடையும் போது, அங்குள்ளவர்கள் அதனைக் கண்டுள்ளனர். மேலும் சிலர், வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதையும் கண்டுள்ளனர். ஆனால் பயம் காரணமாக எவரும் சாட்சி சொல்ல வரமாட்டோம் எனக் கூறுகின்றனர்.
எனது மகளின் குடும்பத்தை எந்த நலன்புரி முகாம்களிலும் கண்டதில்லையென முகாம்களில் இருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறினர். எனக்கு என் மகள் குடும்பம் வேண்டும்’ என அந்தத் தாயார் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
‘மரணச்சான்றிதழ், நட்டஈடு வேண்டாம்’
எனது இருமகன்கள் காணாமற்போனமை தொடர்பில் மரணச்சான்றிதழ் மற்றும் நட்டஈடு எதனையும் இதுவரையில் பெறவில்லை. இனியும் எமக்கு அவை வேண்டாம். எனது இரு மகன்களும் வேண்டும் என மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கறுப்பன் நாகம்மா கண்ணீர் மல்கக் கூறினார்.
எனது மூத்த மகன் கறுப்பன் பாலகிருஸ்ணன், 1996ஆம் ஆண்டு ஜூன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போனார். அதனைத் தொடர்ந்து, எனது இரண்டாவது மகன் கறுப்பன் சுரேஸ் அதே ஆண்டு, ஜூலை மாதம் கடற்றொழிலுக்குச் சென்று திரும்பும் போது, கொழும்புத்துறை இராணுவ முகாம் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டார்.
எனது மூத்த மகனை இராணுவத்தினர் பிடித்துச் சென்றதை சித்தப்பா கண்டுள்ளார். அவர் சாட்சியமளிக்கவும் தயாராகவும் உள்ளார். ஆனால், இரண்டாவது மகனைப் பிடித்துச் சென்றமைக்கான சாட்சியங்கள் இல்லை. அனைத்து இடங்களிலும் தேடியும் எனது பிள்ளைகள் கிடைக்கவில்லை என்றார்.
விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக பிடித்துச் மகளை காணவில்லை என கதறிய அழுத தாய்