சென்னை: கன்னியாகுமரி, களியக்காவிளை பள்ளியில் இருந்து மாயமான ஆசிரியையும், 10ம் வகுப்பு மாணவரும் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பிஜூ சந்திரலேகா என்ற ஆசிரியை கடந்த 2 ஆம் தேதி திடீரென மாயமானார்.
அவர் மாயமான நாளில் அதே பள்ளியில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர் கிருஷ்ணகுமார் என்பவரும் மாயமாகி உள்ளார். 2 பேர் மாயமானது குறித்தும் களியக்காவிளை போலீசில் அவர்களது பெற்றோர் தனித்தனியாக புகார் செய்துள்ளனர்.
புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். ஆசிரியைக்கும், மாணவருக்கும் பழக்கம் இருந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து மாயமானார்களா?
அல்லது தனித்தனியாக மாயமானார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்றும் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி மாணவர் கிருஷ்ணகுமார், பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் உங்கள் மனதை புண்படுத்த எனக்கு விருப்பமில்லை.
எனக்கு சொத்து, வீடு, கார் எதுவும் தேவையில்லை. நான் உங்களை விட்டு பிரிந்து செல்கிறேன் என எழுதி இருந்தார். எந்த நோக்கத்தில் இந்த கடிதத்தை கிருஷ்ணகுமார் எழுதி இருந்தார் என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மாணவர் கிருஷ்ணகுமார், தாயாரின் செல்போனுக்கு பேசினார். அப்போது தான் சென்னையில் இருப்பதாக கிருஷ்ணகுமார் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் மாயமான பள்ளி ஆசிரியை உன்னுடன் இருக்கிறாரா என உறவினர்கள் கேள்வி எழுப்ப உடனடியாக போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
போலீசாரும், உறவினர்களும் தன்னை கண்டுபிடித்து விடாமல் இருக்க கிருஷ்ணகுமார் பொது தொலைபேசியில் இருந்து பேசி இருக்கிறார்.
எனினும் அவர் சென்னையில் பதுங்கி இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே அவரை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர். அதேசமயம் கிருஷ்ணகுமாருடன் ஆசிரியை உள்ளாரா என்பது தெரியவில்லை. அவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

Share.
Leave A Reply