டைரக்டர் மணிவண்ணன் இயக்கிய “நூறாவது நாள்” படத்தில் மொட்டைத்தலை வில்லனாக நடித்து பிரபலமானார் சத்யராஜ். இதைத் தொடர்ந்து, அவருக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. ஒரே ஆண்டில் 27 படங்களில் நடித்தார்.
தனது கலைப்பயணத்தின் வளர்ச்சி குறித்து சத்யராஜ் கூறியதாவது:-
“வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக இருந்த நேரம். அப்படிக் கிடைத்தாலும், திறமையை வெளிப்படுத்த முடியாத சின்ன ரோல்கள்தான் வந்து கொண்டிருந்தன.
இப்படி உள்ளும் புறமுமாய் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜனின் அறிமுகம் கிடைத்தது.
ஆர்.சுந்தர்ராஜன் அப்போது “பயணங்கள் முடிவதில்லை” என்ற பெரிய வெற்றிப்படம் கொடுத்திருந்தார். என்னை ஒரு நடிகனாக மட்டுமின்றி ஒரே ஊர்க்காரன் (கோவை) என்ற அளவிலும் என்னை அவர் தெரிந்து வைத்திருந்தார். ஒருமுறை கோவைக்கு ரெயிலில் போனபோது, மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம், அடுத்து எடுக்கப்போகும் படத்தின் கதையைக் கூறினார். நான் அந்தக் கதை தொடர்பாக எனது கருத்துக்களைக் கூறினேன்.
அப்போது அவர், ‘உங்களுக்கும் நல்ல கதை ஞானம் இருக்கிறதே’ என்று சொல்லி வியந்தார். அதோடு, ‘நீங்கள் ஏன் கதை விவாதத்தில் கலந்து கொள்ளக்கூடாது’ என்றும் கேட்டார்.
கதை விவாதத்தில் கலந்து கொண்டால், அதற்கென்று தனி சன்மானம் எதுவும் கிடையாது. என்றாலும் டைரக்டர் சொன்னது என்னை உற்சாகப்படுத்தி விட்டது. என்னாலும் கதையை உருவாக்க முடியும் என்று அவர் கருதியதால், மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த சந்தோஷ வேகத்தில், சினிமாவுக்கான ஒரு கதையை நானே தயார் செய்தேன். கிரைம் -ஆக்ஷன் கதை. இதே காலகட்டத்தில் எனக்கு நண்பராகி இருந்த டைரக்டர் மணிவண்ணனிடம் இந்தக் கதையை சொன்னேன்.
அவர் என்னிடம் ‘நன்றாகத்தான் இருக்கிறது. இதை பிறகு திரைக்கதையாக தயார் செய்யலாம். என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை கேளுங்கள்’ என்று கூறி, ஒரு கதையை சொன்னார்.
ஆர்.சுந்தர்ராஜன் என்னிடம் ரெயிலில் சொன்ன கதை மோகன், நளினி, விஜயகாந்த் நடிக்க “சரணாலயம்” என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருந்தது. மணிவண்ணன் சொன்ன கதையை படமாக்க எஸ்.என்.திருமால் முன்வந்தார்.
இப்போது, எனக்குள் நடிப்பைவிட டைரக்ஷன் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஒரு கதை தயார் செய்யும் அளவுக்கு வந்துவிட்டேனே! இந்தக் கதையை டைரக்ட் செய்து, டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்று நினைத்தேன்.
நண்பர் மணிவண்ணன் சொன்ன கிரைம் சப்ஜெக்ட்தான் “நூறாவது நாள்” என்ற பெயரில் படமானது. இந்தப்படத்தின் கதை விவாதத்துக்கு மணிவண்ணன் என்னையும் அழைத்திருந்தார்.
படத்தின் கிளைமாக்சில் ஒரு மொட்டை வில்லன் வருவதாக காட்சி வைத்திருந்தார். இந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என்ற பேச்சு வந்தபோது, அந்த வேடத்தில் நான் நடிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.
நான்தான் டைரக்ஷன் கனவில் இருக்கிறேனே! அதனால் கொஞ்சம் தயங்கவே செய்தேன். விஜயகாந்த் “சரணாலயம்” படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரிடமும் நான் உருவாக்கிய கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடித்துப்போய், அதைப் படமாக்கலாம் என்று சொல்லி விட்டார்.
இந்த நேரத்தில்தான் நூறாவது நாள் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தது. நான் தயங்கினாலும் மணிவண்ணன் விடவில்லை. எனக்கு மேக்கப் போட்டுப் பார்த்தார். “ஆலிவுட் நடிகர் மாதிரி இருக்கீங்க, தலைவா!” என்றார்.
இதனால் நம்பிக்கை வந்தது, சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு சலூனில் மொட்டை அடித்துக் கொண்டேன். மொட்டை கெட்டப்பில் என் கேரக்டர் படமாக்கப்பட்டபோதே, அந்த கேரக்டர் பேசப்படும் என்பது தெரிந்தது. படம் வெளியானது. பெரிய வெற்றி. என் மொட்டை கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்தப்படம் வெளிவந்த சமயத்தில், ஜெயப்பிரகாஷ் என்பவர் 7 கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர், “நூறாவது நாள் படத்தைப் பார்த்த பிறகே இப்படி கொலை செய்யும் எண்ணம் வந்தது” என்று சொல்லப்போக, படத்துக்கு இன்னும் ‘பப்ளிசிட்டி’ ஆகிவிட்டது!
இந்தப்படம் வெளியான சமயத்தில் குழந்தைகள் என்னை நெருங்கவே பயப்பட்டார்கள்!
இந்த வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் மணிவண்ணன் சூட்டோடு சூடாக அதே நிறுவனத்துக்கு, “24 மணி நேரம்” என்று ஒரு படம் பண்ணினார்.
இதிலும் மோகன் -நளினிதான் ஜோடி. ஆனால் இதன் கதையமைப்பு வில்லனுக்காகவே உருவான கதை மாதிரி அமைந்திருந்தது. இந்தக் கதையில் வரும் வில்லன் கேரக்டரில் முதலில் நான் நடிப்பதாகவே இல்லை.
நான் மணிவண்ணன் சாரிடம், “படத்தின் ஜீவனே இந்த வில்லன் கேரக்டர்தான். ‘வீணை’ பாலச்சந்தர் நடித்தால் நல்லா இருக்கும்” என்றேன்.
மணிசார் என்னைப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பது புரியாமல், “வீணை பாலச்சந்தர் இல்லாவிட்டால் நம்ம நம்பியார்சாமி நடிக்கட்டும்” என்றேன்.
அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்து நான் இப்படி சொல்லிக் கொண்டிருக்க, அவரோ, ‘நீங்களே நடிச்சிருங்க தலைவா’ என்றார். அந்த கேரக்டரில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என்று அவர் எண்ணினாலும், அவர் என் மீதான அக்கறையில்தான் அப்படிச் சொல்கிறார் என்று நான் நினைத்தேன்.
அதனால் அவரது விருப்பத்தை மறுக்கும் விதமாக, ‘தயாரிப்பாளர் திருமால்சார் அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டார். அந்த அளவுக்கு இது ஹீரோவுக்கு இணையான கேரக்டர்’என்றேன்.
அப்போதும் டைரக்டர் மணிவண்ணன் என்னை விடவில்லை. நேராக தயாரிப்பாளரை போய்ப் பார்த்தவர், ‘படத்தில் வரும் வில்லன் கேரக்டரில் சத்யராஜை நடிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொன்னார்.
தயாரிப்பாளரும், ‘தாராளமாக நடிக்கட்டும்’ என்று பச்சைக்கொடி காட்டினார். வில்லனுக்கு புது இலக்கணம் வகுத்த அந்த கேரக்டர்தான் என்னை ரசிகர்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது.
இந்தப் படத்தில் நான் அடிக்கடி பேசும், “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே” என்ற வசனம், பட்டித்தொட்டிவரை கூட பிரபலம் ஆனது. இந்த படத்துக்குப் பிறகு நான் பிஸி நடிகனாகி விட்டேன்.
காலை 7 மணி தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை தினமும் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பிஸியாகி விட்டேன். 1985-ம் ஆண்டில் மட்டும், நான் நடித்து 27 படங்கள் ரிலீஸ் ஆயின. இப்படி பிஸியாக இருந்தாலும் நான் உருவாக்கி வைத்திருந்த கதையை ‘அம்போ’ என்று விட்டுவிட முடியவில்லை.
டைரக்டர் மணிவண்ணன் தெலுங்கில் படம் இயக்கப்போன நேரத்தில் என் கதையை இயக்கினார். ‘தர்ஜா தொங்கா’ என்ற பெயரில் (தமிழில் ‘கவுரவத் திருடன்’) உருவான அந்தப் படத்தில் சுமன் -விஜயசாந்தி நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் கதாசிரியர் மட்டுமே. படம் வெளியாகி 6 சென்டர்களில் நூறு நாட்களை தாண்டி ஓடியது.
இந்த வகையில், ஒரு சினிமா கதாசிரியராகவும் ஜெயித்த சந்தோஷம் எனக்கு. இந்தப்படத்தின் கதைக்காக டைரக்டர் மணிவண்ணன் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். தமிழில் ‘மர்ம மனிதன்’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியானது.”
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.