சண்டிகர்: சண்டிகரில் மொபைல் விற்பனை கடை ஒன்றில் புகுந்து, அக்கடை உரிமையாளர்களான வயதான தம்பதியரை குடிபோதையில் வாலிபர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சண்டிகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மொபைல் போன் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வரும் அந்த வயதான தம்பதியரின் மகனுடன், மொபைல் போன் வாங்கியதில் அந்த வாலிபருக்கு ஏற்கனவே ஏதோ பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் அவரது மகனை கேட்டபடியே குடிபோதையில் நேற்று அந்த கடைக்கு உள்ளே நுழைந்த அந்த வாலிபர், அந்த வயதான பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் திடீரென அந்த பெண்ணை பலமாக ஓங்கி அடித்தார். அந்த பெண் வலியில் அலறியபடி நிற்கும்போதே, அடுத்ததாக அந்த பெண்ணின் கணவரை அடிப்பதற்காக அவரை நோக்கி சென்றார்.
உடனே அந்த வாலிபரை அந்த பெண் தடுக்க முயன்றும், அவரை தள்ளிவிட்டுவிட்டு பெண்ணின் கணவரான முதியவரை தனது தலையால் ஓங்கி முட்டித்தள்ளி தாக்கினார் அந்த வாலிபர்.
இந்த சம்பவம் நடந்தபோது அந்த கடையிலும், கடை அருகேயும் நின்றிருந்தவர்கள் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர, யாருமே அந்த வயதான தம்பதியரை காப்பாற்ற முன்வரவில்லை.
இந்த தாக்குதலில் அந்த வயதான பெண்ணின் தாடையிலும், முதியவரின் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் அந்த கடையில் இருந்த சிசிடி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, கடையில் புகுந்து தாக்கிய அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.