மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தாங்கள் நடத்தவுள்ள தாக்குதல் தொடர்பான புதிய வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடங்கியுள்ளன.
அதேவேளையில் ஐ.எஸ். அமைப்பினரும் தங்களது பதில் தாக்குதலை தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தாங்கள் நடத்தவுள்ள தாக்குதல் தொடர்பான வீடியோவை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
மீட்டிங் அட் தாபிக்(Meeting at Dabiq) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், பீரங்கிகளில் இருந்தவாறு ஐ.எஸ். தீவிரவாதிகள் இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள புகழ்பெற்ற கொலொசியம் (Colosseum) நோக்கி ஆயுதங்களுடன் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் வெனிஸ் நகரில் உள்ள செயிண்ட் பீட்டஸ் பேராலயமும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. வீடியோவின் பின்னணியில் பேசும் தீவிரவாதி ஒருவன், இது தான் உங்களுடைய கடைசி சிலுவைப்போர் அடுத்த முறை உங்கள் நாட்டில் நாங்கள் போர் நடத்துவோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.
சுமார் 60 நாடுகளின் தேசிய கொடிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மேலும், தற்கொலை தாக்குதலுக்கு தயாராவது, போருக்கான பயிற்சி எடுப்பதும் போன்றவையும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மேற்கத்திய நாடுகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.