சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது.

அமெரிக்கா செல்வதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரண்டு வாரங்களுக்கு முன்னர், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் நுழைவிசைவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

எனினும், இதுவரை அமெரிக்கத் தூதரகத்திடம் இருந்து பதில் வரவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில், சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதை தொடர்புபடுத்தியே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவரது நுழைவிசைவு விண்ணப்பத்தை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நுழைவிசைவு வழங்க கொழும்பிலுள்ள தூதரகம் சரத் பொன்சேகாவுக்கு மறுப்பதற்கு வேறு காரணங்கள் இல்லை என்றும், அந்த தகவல்கள் கூறுகின்றன.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இதனால் அவரது கிறீன் அட்டையும் காலாவதியாகியுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள்களைப் பார்க்கவும், அங்குள்ள இலங்கையர்களைச் சந்திக்கவுமே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நுழைவிசைவுக்கு விண்ணப்பித்திருந்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நுழைவிசைவு பெற்றுக் கொடுப்பதற்கு, அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம், இராஜாங்கத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளதாக, அவரது கட்சியின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply