கோவை: கோவை சுங்கம் பைபாசை சேர்ந்தவர் சத்யா (வயது 25). இவருக்கும் கோவை கணபதி பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் என்பருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஷ்குமார் லண்டனில் என்ஜினீயராக உள்ளார்.
திருமணத்தின்போது 150 பவுன் நகை வரதட்சணையாக பேசப்பட்டது. ஆனால் 70 பவுன் மட்டுமே வரதட்சணை கொடுக்கப்பட்டதாகவும் மீதமுள்ள 80 பவுன் பிறகு கொடுப்பதாகவும், ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.
திருமணத்திற்கு பின்னர் சதீஷ்குமார் மனைவி சத்யாவை லண்டன் அழைத்து சென்றார். 1 வருடம் கழிந்து கோவை வந்த சத்யா கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
திருமணத்துக்கு பின்னர் என்னை எனது கணவர் லண்டன் அழைத்துச் சென்றார். ஆரம்பத்தில் என்னிடம் நன்றாகத்தான் நடந்து கொண்டார். நாட்கள் செல்லச்செல்ல அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவரை நான் கண்காணிக்க ஆரம்பித்தேன்.
எனது கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது வரதட்சணையாக பேசப்பட்ட நகையில் மீதியுள்ள 80 பவுன் நகை மற்றும் ஒரு கார் வாங்கி வரும்படி என்னை உடலாலும் மனதாலும் கொடுமை படுத்தினார்.
எனவே கள்ளக்காதலி மற்றும் கணவர் மீதும் வரதட்சணை கொடுமைக்கு உடந்தையாக இருந்த மாமியார், நாத்தனார் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.