கமலஹாசன் நடித்த “காக்கிச்சட்டை” படத்தில் வில்லனாக நடித்த சத்யராஜ், மேலும் புகழ் பெற்றார். படத்தில் அவர் பேசிய ‘தகடு தகடு’ வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
“24 மணி நேரம்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, சத்யராஜின் வில்லன் நடிப்பை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிறகு அவருக்கு ‘ஜாக்பாட்’டாக அமைந்த படம்தான் “காக்கிச்சட்டை.”
தனது கலையுலக வாழ்க்கை பற்றி சத்யராஜ் கூறியதாவது:-
“சினிமாவில் நான் அதுவரை போராடிய போராட்டம், “24 மணி நேரம்” படத்திற்குப் பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு, என் கேரக்டர்களில் நான் பேசவேண்டிய வசனத்தை சொல்லும் இயக்குனர்கள், “இதுதான் வசனம்.
இதை உங்க ஸ்டைலில் பேசிக்கொள்ளுங்கள்” என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்கள். எனக்குத் தெரிந்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா இருவரும்தான் காட்சிக்கேற்ப தங்கள் சொந்த டயலாக்கையும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த சினிமா ஜாம்பவான்களுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது நிஜமாகவே சந்தோஷமாயிருந்தது.
இந்த சந்தர்ப்பத்தில், கமல் சார் நடித்த “காக்கிச்சட்டை” படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ‘வில்ல’ பாஸாக வரும் நான் என் சகாவிடம், ‘தகடு எங்கே?’ என்று கேட்க வேண்டும். நான் வசனம் பேசிய வேகத்தில் ‘தகடு தகடு’ என்று இரண்டு முறை சொல்லிவிட்டேன்.
இந்தக் காட்சியில் என் நடிப்பை பார்த்த டைரக்டர் ராஜசேகர், “ஆஹா! அற்புதம். இப்படியே பண்ணுங்க” என்றார். கமல் சாரும் என் நடிப்பை ரசித்துவிட்டு, “இதே மாதிரி படம் முழுக்க பேசினால், நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள். ஏற்கனவே அதற்கு முன் எடுத்த சில காட்சிகளை, மீண்டும் “தகடு தகடு” என்று பேச வைத்து திரும்ப எடுத்தார்கள்.
டைரக்டர் நினைத்திருந்தால் “ஒரு தடவைதானே தகடு என்று சொல்ல வேண்டும். ஏன் இரண்டு முறை சொன்னீர்கள்?” என்று கூறிவிட்டு ‘ரீடேக்’ எடுக்கலாம்.
ஆனால், நான் இருமுறை கூறியதை அவர் ரசித்தார்; அதுமாதிரியே பேசவேண்டும் என்றார். படத்தின் கதாநாயகன் கமல் சாரும் என் வசன உச்சரிப்பை ரசித்தார். இதனால் படம் முழுக்க, நான் “தகடு தகடு” என்று பேசினேன். “காக்கி சட்டை” பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனக்கும் நல்ல பெயர்.
இந்த சமயத்தில் என்னை சந்தோஷப்படுத்திய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அப்போது சென்னை தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் எல்லா தியேட்டர்களிலுமே நான் நடித்த “காக்கிச்சட்டை”, “நான் சிகப்பு மனிதன்”, “பிள்ளை நிலா”, “நீதியின் நிழல்” முதலிய படங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
நானும் என்னைத் தேடிவந்த படங்கள் எதையும் விட்டுவிடவில்லை. 6 வருஷ சினிமா பசியாயிற்றே! ‘காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லையில் விழுந்த கதையாக’, தேடிவந்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்று இரவு – பகலாக நடித்துக்கொண்டிருந்தேன்.
ஏற்கனவே நான் எடுத்திருந்த ஒரு முடிவுகூட, என் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது. சின்னச்சின்ன வேடங்களில் நான் போராடிக்கொண்டிருந்தபோது, ஒரு முறை பட அதிபர் சின்னப்பதேவரை சந்தித்தேன்.
அவர் எங்கள் ஊர்க்காரர். திறமையால் படிப்படியாக வளர்ந்து, சினிமாவில் உயரத்துக்கு வந்தவர். அவரை வீட்டில் சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டேன்.
அவர் எடுத்த எடுப்பில், “பல்டி அடிக்கத் தெரியுமா?” என்று கேட்டார். நமக்குத்தான் நாலைந்து படங்களில் பல்டி அடித்த அனுபவம் இருக்கிறதே! அவர் வீட்டு போர்டிகோ முன்பிருந்த சிமெண்ட் தரையிலேயே பல்டி அடித்துக் காட்டினேன்.
நான் அடித்த ‘பல்டி’யில் திருப்திப்பட்டவர், பிறகுதான் “எந்த ஊரு?” என்று கேட்டார். “கோயமுத்தூர்” என்று சொன்னதுதான் தாமதம். “முருகா முருகா” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
“ஏன் முருகா உனக்கு இந்த வேலை?” என்று கேட்டார். நான் அவரிடம், “இல்லீங்க! நாலைஞ்சு படம் நடிச்சாச்சு. இனிமே இதை விட்டுட்டுப் போக முடியாது” என்றேன்.
சிறிது நேரம் யோசித்தவர், “இப்போது நான் ரஜினியை வைத்து ‘அன்புக்கு நான் அடிமை’ என்று ஒரு படம் எடுத்துக்கிட்டிருக்கிறேன். அதில் மோகன்பாபு வில்லன். அவர்கூட நாலு பேர் வருவாங்க. அதுல ஒருத்தனா உன்னை போடச் சொல்லவா?” என்று கேட்டார்.
‘நம்ம ஊர்க்காரனாக இருக்கிறான். நடிக்க வந்து சிரமப்பட்ட மாதிரி தெரியுது. அதனால் நம்ம படத்திலும் ஒரு வேஷம் கொடுப்போமே’ என்று அவர் மனதில் எழுந்த பரிதாப உணர்வின் அடிப்படையில்தான் தனது படத்தில் எனக்கு அப்படியொரு கேரக்டரை சொன்னார்.
அந்த அன்பைப் புரிந்து கொண்ட நானும், “இல்லீங்க! இதுக்கு மேல, கூட்டத்தில் நிற்கிற மாதிரி நடிச்சா சரியா இருக்காது” என்று சொல்லி பெரிய கும்பிடு போட்டு வந்துவிட்டேன்.
இதை இப்போது எதற்காகச் சொல்கிறேன் என்றால், கூட்டத்தில் ஒரு ஆளாக நடிக்க நான் ஒப்புக் கொண்டிருந்தால் தொடர்ந்து அதுமாதிரி வாய்ப்புகள்தான் வந்திருக்கும். நானும் சினிமாவில் இருந்தபடியே காணாமல் போயிருப்பேன்.
தேவர் சாரிடம் எனக்கு இப்படியான அனுபவம் என்றால், சிவாஜி சாரிடம் வேறு மாதிரி! என் சித்தப்பா துரைராஜ் சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர்.
நான் சினிமாவுக்கு வர விரும்பிய நேரத்தில் சிவாஜி சாரை மட்டும் பார்க்கப் போயிருந்தால், என் சித்தப்பாவிடம் அவருக்கு இருக்கும் உரிமையில் என்னை ஊருக்கு அனுப்பி வைத்திருப்பார்.
ஆக, நான் யாரென்று சொல்லாமலே படங்களில் ரசிகர்கள் பேசுகிற அளவுக்கு வந்த நேரத்தில், என் 10-வது படமாக அவருடன் ‘ஹிட்லர் உமாநாத்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்தப் படத்தின் முதல் இரண்டு நாட்கள் அவரைப் பார்த்ததும் மரியாதை செய்வேன். நடிப்பேன். மூன்றாவது நாள், கொஞ்சம் அவருடன் பேசுவதற்கு கிடைத்த இடைவெளியில் எங்கள் குடும்ப பின்னணி பற்றி அவரிடம் சொல்லிவிட்டேன்.
“ஊரில் தொழில் பண்ணி ஓஹோன்னு இருக்கலாம். அதை விட்டுட்டு படவா இங்கே என்ன சுத்திக்கிட்டிருக்கே?” என்று சிவாஜி சார் திட்டினார். நான் சிவாஜி சாருடன் நடிக்கும் இந்தப்படம்தான் என் முதல் படம் என்று நினைத்ததால் இந்த திட்டு.
நான் அவரிடம், “10 படம் வரை நடிச்சாச்சு. இனிமேல் வேறு தொழில் பண்ண முடியாது. நான் ஆரம்பத்தில் உங்களை பார்க்க வந்திருந்தா அப்பவே சித்தப்பாவுக்கு தகவல் சொல்லி என்னை ஊருக்கு அனுப்பியிருப்பீங்க. அதனால்தான் உங்களை பார்க்க வராமல் இருந்தேன்” என்றேன்.
என் கலை ஆர்வத்தை சிவாஜி சாரும் புரிந்து கொண்டார். அதன் பிறகு அவரது படங்களில் எனக்கும் சிபாரிசு செய்யத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து அவரது ‘நீதியின் நிழல்’, ‘சிரஞ்சீவி’ போன்ற படங்களில் வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன.
அதன்பிறகு சிவாஜி சாரின் ‘அன்னை இல்லம்’ வீட்டுக்கு உரிமையுடன் போக ஆரம்பித்தேன். சிவாஜி சாரின் பிள்ளைகள் ராம்குமாரும், பிரபுவும் எனக்கு நல்ல நண்பர்களாகி விட்டார்கள். இந்த வகையில் நானும் ‘அன்னை இல்ல’த்தின் புதல்வன் ஆகிவிட்டேன்.
நடிப்பில் எனக்கென்று ஒரு பாணி அமைந்து, அதையே ரசிகர்களும் ரசிக்கத் தொடங்கியிருந்தபோது, டைரக்டர் மணிரத்னத்தின் ‘பகல் நிலவு’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் என் பாணியில் நடிக்கப்போக, அவரோ “எனக்கு இது வேணாம்! வேற மாதிரி வேணும்” என்கிறார்.
“என்ன இது? இவர் என் கேரியரையே மாற்றி விடுவார் போலிருக்கிறதே! இனி புதுசாக ஒரு படத்தில் வித்தியாசமாக நடிக்கத்தான் வேண்டுமா!” என்கிற அளவுக்கு மணிரத்னத்தின் அந்த கேரக்டர் என்னை யோசிக்க வைத்தது.
தயாரிப்பாளர் சத்யா மூவீஸ் தியாகராஜனிடம் கூட இது விஷயமாய் என் மனக்குறையை வெளியிட்டேன். அவர் என்னிடம், “இவர் ரொம்பத் திறமையான டைரக்டர்! அவர் கேட்கிற மாதிரி நடிச்சுக் கொடுங்க! அப்புறம் பாருங்க!” என்றார்.
கதர் சட்டை, கதர் வேஷ்டியில் அரசியல் தலைவராக நான் அந்தப் படத்தில் நடித்தேன். அதாவது மணிரத்னம் சார் விரும்பிய பாணியில் என் நடிப்பு அமைந்தது. படம் வெளியானபோது, மிரட்டலான அந்த கேரக்டரையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். “ஒரு டைரக்டரின் நடிகன்” என்ற முறையிலும் நான் வெற்றி பெற்றேன்.”
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
தொடரும்…
மொட்டைத் தலையுடன் சத்யராஜ் நடித்த நூறாவது நாள் மகத்தான வெற்றி (சினிமா தொடர்-5)