ரியாத்: உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக செளதி அரேபியா தலைமையில் எகிப்து, துருக்கி உள்ளிட்ட 34 இஸ்லாமிய நாடுகள் அணிதிரள உள்ளன.

இருப்பினும் இந்த கூட்டணியில் ஈரான் இடம்பெறவில்லை. சிரியா, ஈராக்கின் பெரும்பகுதியை கைப்பற்றி தனி இஸ்லாமிய நாட்டை பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ். இயக்கம்.

அத்துடன் பிற மதத்தினர், வெளிநாட்டினரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்வதையும் அரங்கேற்றி வருகின்றனர் ஐ.எஸ்.

தீவிரவாதிகள். Saudi Arabia forms alliance of 34 Muslim nations to fight ISIS ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக ரஷ்யாவும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான உக்கிர யுத்தம் நடத்தி வருகின்றன. சர்வதேச சமூகத்தின் இந்த கடுமையான நடவடிக்கையைத் தொடர்ந்து பாரீஸில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்.

அதேபோல் ரஷ்யாவின் பயணிகள் விமானத்தையும் வெடிகுண்டு மூலம் தகர்த்தது. இந்த சம்பவங்களில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் புதிய திருப்பமாக ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கை கோர்த்துள்ளன. செளதி அரேபியாவின் தலைமையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா பிராந்தியங்களைச் சேர்ந்த 34 இஸ்லாமிய நாடுகள் இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

இருப்பினும் இந்த கூட்டமைப்பில் இஸ்லாமிய நாடான ஈரான் இடம்பெறவில்லை. இது குறித்து செளதி பாதுகாப்புத்துறை அமைச்சரான இளவரசர் முகமது பின் சல்மான் அல் செளத் கூறுகையில், இஸ்லாமிய நாடுகளின் பிரதான பிரச்சனையே பயங்கரவாதம்தான்… இதை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

இந்தோனேசியா உள்ளிட்ட மேலும் 10 இஸ்லாமிய நாடுகள் செளதி அரேபியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. செளதியின் இந்த அணியில் துருக்கி, எகிப்து, லிபியா, ஏமன், மாலி, சாட், சோமாலியா, நைஜீரியா, மாலத்தீவு, பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதாவது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாடுகள் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான செளதி தலைமையில் அணியில் இணைந்திருக்கின்றன. ஈரானுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிரியாவும், ஈராக்கும் இந்த கூட்டணியில் இடம்பெறவில்லை.

Share.
Leave A Reply