புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10ஆவது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இந்தநிலையில் வித்தியாவின் வீட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 10ஆவது சந்தேகநபரான 26 வயதுடைய ஒருவர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். வித்தியாவின் சகோதரனினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்தே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது கையடக்கத் தொலைபேசியில் மற்றுமொரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் புகைப்படம் மற்றும் அவரின் தொலைபேசி இலக்கங்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் எஸ். லெனின் குமார் முன்னிலையில் 10 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களில் 10வது சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறு அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டதரணி நீதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே அவர் வித்தியா வீட்டிற்கு அருகில் சென்றிருக்கலாம் எனவும் சட்டதரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
மேலும் அவர் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகள் கடந்த 1997ம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெயர்வின் போது தொலைந்து போயுள்ளதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
எனினும், அவரது கோரிக்கையினை நிராகரித்த நீதிபதி எஸ். லெனின் குமார் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், இறுதியாக கைதானவர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குறித்த மூவரையும் கொழும்பிலுள்ள மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.