யுத்தம் உக்கிரமடைந்தமையால் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் நானும் கணவரும், மூன்று பிள்ளைகளும் சென்றிருந்தபோது சோதனைச்சாவடியில் வைத்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான சபேசன் என்பவரே இராணுவத்தினருக்கு கணவரை அடையாளம் காட்டினார்.
அதன்பின்னர் மூன்று இராணுவத்தினர் சகிதம் வந்து எனது கணவனைப் பிடித்துச்சென்றனரென தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உள்ளகப்பாதுகாப்புப்பிரிவு முக்கியஸ்தரான வண்ணக்கிளி மாஸ்டர் என அழைக்கப்படும் விஜயகுமாரின் மனைவி இளவிஜினி சாட்சியமளித்தார்.
மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவதும் இறுதியுமான அமர்வு நேற்று புதன்கிழமை தெல்லிப்பழை பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது. இதன்போது சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில், எனது கணவர் விஜயகுமார். எனக்கு ஒரு பெண்பிள்ளையும் இரண்டு ஆண்பிள்ளைகளுமாக மூன்றுபேர் உள்ளனர்.
2009ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமடைந்த நிலையை எட்டியபோது 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியன்று நாம் கால்நடையாக வட்டுவாகல் ஊடாக இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் சென்றோம். அதன்போது சோதனைச்சாவடியில் வரிசையில் நின்றோம்.
அதனைத்தொடர்ந்து சோதனைக்காக இராணுவத்தினர் அருகேசென்றபோது எனது இரண்டாவது மகனை கையில் வைத்துக்கொண்டிருந்த கணவரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து காவற்றுறைப்பிரிவில் செயற்பட்டு பின்னர் அதிலிருந்து விலகி இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்த சபேசன் என்பவர் இராணுவத்தினரிடம் காட்டிக்கொடுத்தார்.
எனது கணவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு முதலில் கிட்டு பீரங்கி படைப்பிரிவில் கேணல் பானுவுக்கு அடுத்த பதவிநிலையில் செயற்பட்டிருந்தார்.
அதன் பின்னர் உள்ளகப்பாதுகாப்பு பிரிவில் முக்கியஸ்தராக செயற்பட்டிருந்தார். ஆகவே, அவரை நன்கறிந்த சபேசன் இராணுவத்தினரிடம் காட்டிக்கொடுத்தார்.
அதனைத்தொடர்ந்து சபேசன் மற்றும் மூன்று இராணுவத்தினர் வருகைதந்து எனது கணவரை பிடித்துச்சென்றனர். கணவர் மூத்தமகனை என்னிடத்தில் கையளித்துவிட்டு அவர்களுடன் சென்றிருந்தார்.
அதன் பின்னர் இடைத்தங்கல் முகாமிற்கு கொண்டு செல்வதற்காக என்னையும் பிள்ளைகளையும் சில நாட்கள் தடுத்துவைத்தனர். அந்த நேரத்தில் இரண்டு இலட்சம் ரூபா பணத்தை வழங்கினால் உங்களின் கணவரை விடுதலை செய்வோமென சபேசன் என்னிடத்தில் கூறினார்.
எமது பொருட்களை சோதனையிடும்போது பொதியில் காணப்பட்ட இரண்டு இலட்சத்தை அவர்கள் கண்டபின்னரே அவ்வாறு கோரியிருந்தனர்.
எனவே எதுவும் செய்யமுடியாத இக்கட்டான நிலைமையில் நான் அப்பணத்தை அவர்களுக்கு வழங்கியிருந்தேன். அதன்பின்னர் எனது கணவனை அவர்கள் விடுதலை செய்யவே இல்லை.
அதேநேரம், எனது கணவரைப்போன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரை சபேசனே இராணுவத்தினரிடத்தில் காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.
அதற்கடுத்த ஓரிரு நாட்களில் எம்மை இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் கணவர் தொடர்பான விபரங்கள் எதனையுமே நான் அறியவில்லை.
ஆறுமாத முகாம் வாழ்வுக்கு பின்னர் எனது சொந்த மண்ணான பன்னாலைக்குத் பிள்ளைகளுடன் திரும்பினேன். அதன்பின்னர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடத்தில் சென்று சபேசனின் பெயரைக் கூறி விசாரித்தோம்.
அதன்போது அவர்கள் ஒருவரை கூட்டிக்கொண்டு வந்தார்கள். அது நான் குறிப்பிட்ட நபர் இல்லை. அவர் சபேசன் என்ற பெயரில் இருக்கும் வேறொரு நபராவார்.
தற்போதும் எனது கணவனைத்தேடிக்கொண்டே இருக்கின்றேன். சபேசன் என்பது அவருடைய விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயராகும்.
அவருடைய உண்மையான பெயர் கூட தெரியாது. ஆனால் அவரை எந்த சந்தர்ப்பத்திலும் என்னால் இனங்காட்ட முடியும். எனக்கு இழப்பீடுகள் அவசியமில்லை. எனது கணவருக்கு என்ன நடந்தது அவர் எங்குள்ளார் என்பதே எனக்கு தேவை.
சபேசன் பற்றிய தகவல்களை கண்டறிந்தால் எனது கணவன் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுங்களென ஆணையாளரிடத்தில் கோரிக்கை விடுத்தார்.