வீடொன்றைக் கட்டும் பொருட்டு பெற்றோர் தங்கச் சங்கிலியை எடுத்தமையால் மனமுடைந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெல்லாவெளியில் இடம்பெற்றுள்ளது.
அலரி விதையை உண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுவதியின் மரண விசாரணையின் போது அவரது தாயார் அளித்த சாட்சியம் வருமாறு
“ஏன் வாந்தி எடுக்கிறாய் எனக் கேட்டேன். ஒன்றும் இல்லைஎன்றாள். வற்புறுத்திக் கேட்ட போது மூன்று அலரி விதை சாப்பிட்டேன் என்றார். எதற்காக இப்படிச் செய்தாய் எனக் கேட்ட போது விளையாட்டாகவே சாப்பிட்டதாக கூறினார்.
கணவர் வெளிநாடு சென்று விட்டார். இறந்தவர் எனது மகள். அவர் க.பொ.த. சாதாரண தர வகுப்புவரை படித்து விட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்காக ஒரு வீடு கட்டுகின்றோம். இதன் செலவுக்காக அவளின் தங்க சங்கிலியை வாங்கி அடகு வைத்து பணம் பெற்றேன்.
அதனை மீட்டுத்தருமாறு இரண்டு மாதத்துக்கு முன்னரும் சண்டையிட்டார். சங்கிலியைக் கேட்டு அதன் பின்னரும் கேட்டு வந்தார். இறுதியாக சம்பவதினம் நண்பகல் சங்கிலியைக் கேட்டு சண்டைபிடித்தார்.
அப்பா அனுப்பும் காசை என்ன செய்கிறாய் என்று சண்டையிட்டார். மறுநாள் காலையில் தான் வாந்தி எடுத்தார். உடனடியாக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் போது மறுநாள் மரணமானார்” என்றார்.