மும்பை மாஃபியா உலகத்தில் சினிமா நடிகைகளுக்கும், நிஜமான டான்களுக்கும் இடையேயான காதல் கிசுகிசுக்களுக்கு என்றும் பஞ்சமே இருந்தது இல்லை. பத்திரிக்கைகளுக்கு செய்திகள் இல்லாத நேரங்களில் இந்த செய்திகள் பெரும் தீனி போட்டன.

பிரபலமான தாதாக்களை காதலிப்பதை அல்லது தாதாக்களுடன் சேர்த்து எழுதப்படும் கிசுகிசுக்களை வெறுக்காமல் விரும்பினார்கள் பாலிவுட் நடிகைகள்.

அதனால் அவர்களுக்கு பெரிதும் பலன் கிடைத்தது. ஒரு சில தாதாக்கள் ஒரு படி மேலே போய் நடிகைகளை திருமணமும் செய்து கொண்டனர். அதற்கு பிறகு அவர்கள் பாலிவுட் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வரத்தொடங்கினர்.

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாதது போல, பாலிவுட் சினிமாவையும் மும்பை மாஃபியா தொடர்புகளையும் இன்றளவும் பிரிக்க முடியாமல் இரட்டை குழந்தைளை போல இருக்கிறது மும்பை நிலவரம்.

“தாவூத்திற்கும் பிரபலமான சினிமா நடிகை ஒருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்து முடிந்தது. இருவருக்கும் பிறந்த மகன் இருக்கிறான். அவன் தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிறான். அவனை நடிகையின் தங்கைதான் வளர்த்து வந்தார்.

இன்றளவும் தாவூத் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்” என்று கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தார் நீரஜ்குமார். இவர் 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து அதன் பின்னணியில் நடந்த சம்பவங்களை தொகுத்து ‘டையல் டி பார் டான்’ என்கிற புத்தகத்தை எழுதியவர். முன்னாள் சிபிஐயின் துணைத்தலைவர் நீரஜ்குமார்.

இப்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் தலைமை ஆலோசகராக இருக்கிறார். நீரஜ் குமார் சொன்னது போல வெளியே தெரியாமல் பல்வேறு விசயங்கள், அதிசயங்கள் நடந்து இருக்கிறது.

அந்த அதிசயங்களில் ஒன்றுதான் அபுசலீம் என்பவனின் காதல் கதையும். அபு சலீம் அனிஸ் என்கிற தாதாவிற்கு உதவியாக இருந்து மெல்ல மெல்ல மேலே வந்து மும்பையை தெறிக்கவிட்டவன். அனிஸ், தாவூத்தின் பட்டறையில் இருந்து வந்தவன்.

அபுசலீம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சராய் மீர் என்கிற குக்கிராமத்தை சேர்ந்தவன். அவனது அப்பா ஒரு வழக்கறிஞர். அப்பாவின் மரணத்திற்கு பிறகு படிக்க வசதி இல்லாமல் பள்ளியை பாதியில் விட்டுவிட்டு, அவனது அண்ணனுடன் சேர்ந்து கிடைக்கும் வேலைகளை செய்து வந்தான்.

abu saleem 600 11இளமைக்காலங்களில் உத்தரபிரதேசம், டெல்லி, கல்கத்தா என்று பல்வேறு ஊர்களை சுற்றி விட்டு கடைசியாக மும்பைக்கு வேலை தேடி வந்தவன், மாஃபியா கும்பல் ஒன்றில் சேர்ந்து தொழிலை கற்றுக்கொண்டான். அதன் பிறகு பல்வேறு தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தான்.

அபுசலீம், நடிகர் சஞ்சய்தத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்ததாக பிரச்னை கிளம்பியது. அதுதான் அவனின் முதல் சம்பவம். அதற்கு பிறகு நடிகர் சஞ்சய்தத்தின் சந்திப்புக்கு பிறகு அவனது நட்பு வட்டாரங்கள் பெருகியது.

மாஃபியா வட்டாரங்களில் அதிக அளவில், பிரபலமான காஸ்டியூம்ஸ்களை பயன்படுத்தும் ஆளாக மாறினான் அபு சலீம். எப்பொழுதும் கோர்ட், சூட், கண்ணாடி, ஷூ என்று எல்லாமே அதிகபட்ச விலையில் வாங்கி பயன்படுத்தி தன்னை எப்பொழுதும் ஒரு ஹீரோ போல காட்டிக்கொண்டான்.

இவனது நடவடிக்கைகளை பார்த்த நண்பர்கள், ‘நீயும் பாலிவுட் ஸ்டார்தான், உனக்கு மசியாத பெண்கள் இல்லை‘ என்று அவனது ஆசைகளுக்கு டன் கணக்கில் உரம் போட, அபு சலீம் பிரபலமான நடிகையை விரும்ப ஆரம்பித்தான்.

பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த நடிகை மோனிகா பேடி, தனக்கு ஒரு பெரும் சிக்கல் என்று அபுசலீமை தேடி வந்தார். வந்த இடத்தில் அபுசலீமின் தோற்றம், நடவடிக்கை எல்லாமே பிடித்துபோக, முதலில் நண்பர்களாக வலம் வந்தவர்கள் பிறகு காதலிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அதற்கு முன்பே அபு சலீம் வேறு ஒரு நடிகையை மனதிற்குள் காதலித்துக் கொண்டு இருந்தான். மோனிகா வந்ததும் அந்த நடிகை அவன் மனதிற்குள்ளே கரைந்து போய் விட்டாள்.

இதனிடையே இவர்கள் இரண்டு பேருக்கும் முன்னதாகவே, அபுசலீம் மும்பைக்கு வந்த புதிதில், அதாவது 1991-ம் ஆண்டு வாக்கில் சமீரா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான்.

abu saleem 600 3அப்பொழுது சமீராவிற்கு வயது பதினேழுதான். அதன் பிறகு சமீராவிற்கு குழந்தை பிறந்ததும் அவளை கண்டு கொள்ளவே இல்லை. பிறகு சலீமின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவள் வெளிநாட்டிற்கு போய் விட்டதாக மும்பை போலீஸ் சொல்லுகிறது.

அதன்பிறகு மோனிகாதான் அபுசலீமின் அறிவிக்கப்படாத மனைவியாக இருந்து வருகிறார். அபுசலீமின் பெரும் குற்றங்களில் பெரும்பங்கு மோனிகாவால் நடந்தது என்று குற்றம் சொல்லுகிறது பாலிவுட் வட்டாராம்.

அபுசலீம், உத்தரபிரதேசத்தில் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த பல்வேறு இளைஞர்களை மும்பைக்கு கொண்டு வந்து, நாட்டு ரக துப்பாக்கிகளை காட்டி பல்வேறு நபர்களை மிரட்ட ஆரம்பித்தான்.

இந்நிலையில் சலீம்க்கு தெரியாமல் அவர்களின் ஆட்கள் ஒரு வேலையை செய்து வந்தனர். அது துப்பாக்கி விற்பது. வெறும் ஐந்தாயிரம் ரூபாய்க்கு துப்பாக்கிகள் மும்பையில் கிடைக்க ஆரம்பித்தன. சலீம் ஆட்கள் நாட்டுத் துப்பாக்கிகள் செய்வதில் கில்லாடிகள்.

gun 200துப்பாக்கி செய்ய தெரிந்தவர்களுக்கு, அதை வைத்து பணம் பண்ணும் தொழிலையும், அதனால் என்ன வேலைகள் வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற குறுக்கு புத்தியையும் விதைத்து விட்டது அபு சலீம்தான்.

அபு சலீமின் தோற்றம், மிரட்டும் ஸ்டைல் எதிராளிகளை குலைநடுங்க வைக்கும். இந்த சம்பவங்களை எல்லாம் பார்த்த நபர்கள் இந்த தொழிலையும் கற்றுக்கொண்டனர்.

அதன் விளைவாக மும்பையில் பல்வேறு இடங்களில் துப்பாக்கியை காட்டி நகை, பணம் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. தொடர் கொள்ளைகள் குறித்து புகார்கள் வந்ததால் குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறியது.

தனியாக நடந்து வந்து கொண்டிருந்த கல்லூரியில் படிக்கும் இளம் பெண் ஒருவரை துப்பாகியால் மிரட்டி, நான்கு நபர்கள் கிழித்து எரிந்து விட்டு சென்றனர். குத்துயிரும் குலையிருமாக கிடந்த அந்தப் பெண் கொடுத்த தகவலின்பேரில் அந்த நான்கு நபர்களை போலீஸ் வளைத்தது.

அவர்களிடம் விசாரித்தபொழுது துப்பாக்கியை உத்தரபிரதேசத்தில் இருந்து வந்திருந்த ஆட்களிடம் வாங்கியது தெரிய வந்தது. அவர்களை விசாரித்த பொழுது அவர்கள் அபு சலீமின் ஆட்கள் என்று தெரிய வந்தது.

ஆனால் இந்த துப்பாக்கி விற்கும் வேலைகள் எதுவும் எனக்கு தெரியாது என்று அபு சலீம் சொல்லிவிட்டான். அதன் பிறகு நடந்த ஒரு சில என்கவுண்டர்களில் அவர்கள் ஒழித்துக் கட்டப்பட்டனர். ஆனால் அபு சலீம் மட்டும் பயங்கர வளர்ச்சியை அடைந்து இருந்தான்.

மும்பையில் பிரபலமான பில்டர் பிரதீப்ஜெயின். பல்வேறு இடங்களில் அரசுக்கும், தனியாருக்கும் சொந்தமான பெரும் கட்டடங்களை கட்டி வந்தவன்.

பல்வேறு இடங்களில் நிறைய சொத்துகளை வாங்கி போட்டு இருந்த பிரதீப்பை, பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்தான் சலீம். போலீஸ் செல்வாக்கு இருப்பதால் சலீமும்க்கு பணம் தர முடியாது என்று பிரதீப் மறுக்கவே, பிரதீப்பை கொடூரமாக கொலை செய்ய திட்டம் போட்டான் அபுசலீம்.

இதனையடுத்து பிரதீப்பை மார்ச் 8-ம் தேதி, 1995 ல் அவரது பங்களாவின் வாசலில் வைத்து சுட்டுக்கொன்றார்கள் அபு சலீம் அனுப்பிய ஆட்கள். அதோடு அவர்கள்தான் கொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு துப்பாக்கியையும் வீட்டு வாசலில் போட்டு வைத்தனர்.

அதில் A என்று ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டு இருந்தது. மும்பையில் பிரபலமான பெரும் செல்வந்தர் கொலை செய்யப்பட்டதும் மற்ற தொழில் அதிபர்கள் தங்களது உயிருக்கு பயந்து கொண்டு சலீமுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.

abu saleem 600 1அடுத்த கட்டமாக யார் மும்பையில் அதிகாரம் செலுத்துவது என்கிற போட்டி எழுந்து வந்தது. அபுசலீம் நேரடியாக சோட்டா ராஜனுடன் மோதுவது என்று முடிவு எடுத்து விட்டான்.

அதனால் அவனுக்கு பணம் தரும் குக்ரேஜா பில்டர் நிறுவனத்தை சேர்ந்த ஓம்பிரகாஷை பணம் கேட்டு மிரட்டினான். சோட்டா ராஜன் ஆள் என்பதால் தைரியமாக இருந்தார்.

கொலை செய்ய முடிவு எடுத்த சலீம், ஓம் பிரகாஷையும், அவருக்கு பாதுகாப்பு கொடுத்த ஆட்கள் இருவரையும் தனது ஆட்கள் மூலம் சுட்டுக்கொன்றான்.

அதன் பிறகு சலீமின் ஆட்கள் மும்பையை சுற்றி அதிகார போதையில் வலம் வர ஆரம்பித்தனர். சலீமுக்கு நெருக்கமான நண்பன் ஒருவன், நடிகை மணிஷா கொய்ராலாவை குறி வைத்தான்.

மணிஷாவின் பெரிய படங்களை அவனது ரூமில் ஒட்டி வைத்து மணிஷாவின் அழகில் மயங்கினான். எப்படியாவது மணிஷாவை தன் பக்கம் இழுக்கும் வேலைகளை அவர்கள் செய்து வந்தனர்.

ஆனால் அதற்குள் சோட்டா ராஜனின் ஆட்கள் சலீமை குறிவைத்தனர். அபு சலீமின் ஒட்டு மொத்த கூடாரத்தை காலி செய்யும் வேலைகளில் இறங்கினார்கள்.

காலியானது யார்? அடுத்தவாரம் பார்க்கலாம்…!

– சண்.சரவணக்குமார்

Share.
Leave A Reply