சவூதி அரேபியாவில் புதிதாக திருமணம் செய்த பெண்ணொருவர், ஒட்டகக் குட்டியொன்றை முத்தமிட்டதால் விவாகரத்து செய்யப்பட்டுள்ளார்.
இப்பெண் தனது மாமியாருக்கு முன்னால் வைத்து ஒட்டகத்தை முத்தமிட்டதாகவும் அதையடுத்து அவரை விவாகரத்து செய்யுமாறு அப்பெண்ணின் கணவரை மாமியார் வற்புறுத்தியதாகவும் சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
இதனால், அன்றைய தினமே அக்கணவர் விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பாக மேற்படி கணவர் தெரிவிக்கையில், “விவாகரத்து செய்யுமாறு எனது தாயார் வலியுறுத்தினார். விவாகரத்து செய்யாவிட்டால் என்னை கைவிடப்போவதாகவும் எனது தாயார் எச்சரித்தார்.
அவரின் வார்த்தையை என்னால் மீற முடியவில்லை. அதனால் நான் விவாகரத்து செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
இப்பெண்ணின் வீட்டுக்குச் சென்ற கணவர், அப்பெண்ணின் ஆடைகளை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு, தான் விவாகரத்து செய்துள்ளதை தெரிவித்தார்.
அப்போது மன்னிப்புக் கோரிய மேற்படி பெண், தான் தீங்கு எதுவும் செய்ய நினைக்கவில்லை எனவும், புதிதாக பிறந்த ஒட்டகக்குட்டிக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அதற்கு முத்தமிட்டதாகவும் கூறினார்.
ஆனால், தனது மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைப்பதற்கு தான் தீர்மானித்தபோதிலும் தனது தாயார் அதை விரும்பவில்லை எனக் கூறினார் என மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.