கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஆபரணங்கள் மற்றும் மாணிக்கக்கல் விற்பனை நிலையம் ஒன்று பாகிஸ்தானியர்கள் இருவரால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் முகத்தில் ஒரு வகையான திரவத்தை தெளித்த பின்னர் இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும் கொள்ளையில் ஈடுபட்ட பகிஸ்தானியர்கள் இருவரையும் 24 மணி நேரத்துக்குள் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன்குணசேகர தெரிவித்தார்.
நேற்று முன் தினம் முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவத்தின்போது போது சுமார் ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், மாணிக்கக்கல் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் மாணிக்கக் கல் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அறிய முடிவதாவது,
கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் இலக்கம் 446 காலி வீதியில் அமைந்துள்ள ஆபரணங்கள் மற்றும் மாணிக்கக் கல் விற்பனை நிலையத்துக்கு நேற்று முன் தினம் முற்பகல் 11.30 அளவில் இரு பாகிஸ்தானியர்கள் வருகை தந்துள்ளனர்.
தங்க நகைகள் கொள்வனவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள அவர்கள் நகைகளை பார்வையிட ஆரம்பித்துள்ளனர். இதன் போது அந்த விற்பனை நிலையத்தில் உரிமையாளர் மட்டுமே இருந்துள்ளார்.
இதன் போது குறித்த பாகிஸ்தானியர்களில் ஒருவர் உரிமையாளரின் கழுத்தை நெறித்து கெட்டியாக பிடித்துக்கொள்ள மற்றையவர் சிறிய போத்தலில் இருந்த ஒரு வகை திரவியத்தை துணியொன்றில் ஊற்றி அதனை முகத்தில் திணித்துள்ளார்.
இதனையடுத்து அந்த உரிமையாளர் மயக்கமுற்று கீழே சாயவே, அவ்விருவரும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
தங்க நகைகள், மாணிக்கக்க கற்கள் என பலவகையான நகைகளை அவர்கள் கொள்ளையிட்டுள்ளனர். இவற்றின் பெறுமதி 1 கோடியே 10 இலட்சம் ரூபாவகும்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அது தொடர்பில் பல்கோண விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் பல பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முன் தினம் இரவு 10.40 மணியளவில் முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி முஹுது மாவத்தையில் உள்ள தங்கு விடுதியொன்றில் இருந்த போது பொலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு கொள்ளுபிட்டி பெல்மெய்ரா மாவத்தையில் உள்ள தங்குமிடமொன்றில் இருந்து மற்றைய சந்தேக நபரும் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கல் பதிக்கப்பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கல், 100 அம்ரிக்க டொலர் நோட்டுக்கள் 30, 50 அம்ரிக்க டொலர் நோட்டுக்கள் 13, 9 அயிரத்து 340 ரூபா பணம் அகியனவும் கைப்பற்றப்பட்ய்டுள்ளன.
சந்தேக நபர்கள் நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.