சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கப்டன் திஸ்ஸ என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறத் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
வசீம் தாஜுதீன் கொலையுடன் மகிந்த ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில் முன்னர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இடம்பெற்றிருந்தவரும், சிராந்தி ராஜபக்சவின் சாரதியாகப் பணியாற்றியவருமான இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கப்டன் திஸ்ஸவுக்கு இந்தக் கொலையுடன் தொடர்பிருப்பதாக வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
விபத்துக்குள்ளானது போன்று தீயிட்டு எரிக்கப்பட்ட தாஜுதீனின் வாகனத்துக்கு அருகில் பொதுமக்களை செல்லவிடாமல் சிலர் தடுத்திருந்தனர்.
அவ்வாறு தடுத்தவர்களில் கப்டன் திஸ்ஸவும் அடங்கியிருந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றிய வரும், கப்டன் திஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விடாமல் தடுக்கும் நோக்கில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கப்டன் திஸ்ஸ விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.