சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை நடத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பில், ஆதரவாக 160 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

51 உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். அதேவேளை, மகிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது, ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைத்திருந்தன.

ஆனால் இன்று இறுதி வாக்கெடுப்பின் போது, எதிரணியில் இருந்த மற்றொரு உறுப்பினரும் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அதேவேளை, வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை இன்று அறிவிக்காவிடின் தீக்குளிக்கப் போவதாக மிரட்டிய ஐதேக உறு்ப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று எரிபொருள் போத்தலுடன் நாடாளுமன்றம் வந்திருந்தார்.

வாசலில் சோதனையிட்ட காவலர்கள், அவரிடம் இருந்து, எரிபொருள் கொள்கலனைப் பறித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply