யாழ்ப்பாணத்தில் பேரவை ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலர் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளனர்.
குறித்த அமைப்பினது அங்குரார்ப்பணம் யாழ். பொது நூலகத்தில் சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி இரவு 9 மணி வரையில் இடம்பெற்றது.
அந் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், தமிழரசு கட்சியின் உப தலைவர் சீ.கே. சிற்றம்பலம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வட மாகாண சபை உறுப்பினரும் புளெட் அமைப்பினை சேர்ந்தவருமான க.சிவநேசன் உள்ளிட்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள், மருத்துவர்கள் என 30 பேர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். குறித்த அமைப்பினது அங்குரார்ப்பனமானது, மிக ரகசியமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் பேரவை எனும் குறித்த அமைப்பின் அங்குரார்ப்பன நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இருந்த போதிலும் அதனை கேள்வியுற்று ஊடகவியலாளர்கள் நிகழ்வு நடைபெற்ற யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்திற்கு சென்ற போது மண்டபத்திற்குள் செல்வதுற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்து.
அதனால் ஊடகவியலாளர்கள் மண்டப வாயிலுக்கு வெளியில் காத்து இருந்தனர். அதன் போது நிகழ்வு முடிவடைய முதல் வெளியில் சென்ற பலர், ஊடகவியலாளர்கய், தம்மை புகைப்படம் எடுக்காதவாறு மிக வேகமாக நடந்து சென்று தமது வாகனங்களில் ஏறி சென்றனர்.
இதேவேளை, நிகழ்வின் நடுவில் வெளியேறிய வடமாகாண முதலமைச்சரை ஊடகவியலாளர்கள் இடைமறித்து கேள்வி கேட்க முற்பட்ட வேளை மிக வேகமாக ஊடகவியாளர்களை கடந்து சென்றார்.
அவரை விடாது பின் தொடர்ந்த ஊடகவியலாளர்கள் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நிகழ்வு தொடர்பான சகல விபரங்களையும் ஏற்பாட்டாளர்கள் தருவார்கள் அவர்களிடமே கேளுங்கள். என கூறி தனது வாகனத்தில் ஏறி சென்றார்.
அரசியல் கட்சிகள் சரியில்லை அதனாலையே அமைப்பு உதயம்.
அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கருத்து தெரிவிக்கையில்,
இருக்கின்ற கட்சிகள் சரியான முறையில் செயற்படவில்லை அதனால் புதிய அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் தமிழ் மக்களுக்கான தீவுர்த்திட்டடத்தை அரசாங்கத்திடம் முன் வைப்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இக் கூட்டத்திற்கு அழைத்தமை மத தலைவர் என்ற ரீதியிலையே என்னை அழைத்து இருந்தனர்.என தெரிவித்தார்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பு.
அமைப்பு குறித்து வடமாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் நலன் கருதி அரசியலுக்கு அப்பால் ஒரு புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளோம். நான் புளெட் சார்பாக கலந்து கொண்டேன். எமது அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் பாராளுமன்றத்தில் இருப்பதனால் என்னை இந்த நிகழ்வுக்கு செல்லுமாறு கூறினார். அவரின் பிரதிநிதியாக நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.
இந்த அமைப்பின் உருவாக்கம் பற்றிய மேலதிக தகவல்களை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பார்கள் என தெரிவித்தார் .
அரசியல் தீர்வினை எட்டவும் . கலாச்சார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் உருவாக்கம்.
இந்த அமைப்பின் உருவாக்கம் பற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வைத்திய கலாநிதி வைத்தியர் லஷ்மன் ஆகியோரின் இணைத்தலைமையில் தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பு உருவாக்க ப்பட்டு உள்ளது.
இந்த கட்டமைப்பு அரசியல் கட்சிக்களுக்கு அப்பால்பட்டு மத தலைவர்கள் தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாகி இருந்த வேளை மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றிய சமூக பெரியோர்கள் ஆகியோரை உள்வாங்கி இந்த அமைப்பு உருவாக்க பட்டு உள்ளது.
இந்த அமைப்பு ஏற்கனேவே இரு உப குழுக்களை உருவாக்க தீர்மானித்து உள்ளது ஒன்று அரசியல் தீர்வு சம்பந்தமாக மற்றையது கலாச்சார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடனும் உருவாக்க பட்டு உள்ளது
மேலதிகமாகவும் பல தீர்மானங்களாக எடுக்கப்பட்டு உள்ளது அவை உத்தியோக பூர்வ அறிக்கையாக ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்படும். என தெரிவித்தார்.
இனப்பிரச்சனைக்கு தீர்வு காணவே அமைப்பு உருவாக்கம்.இந்த அமைப்பின் உருவாக்கம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு உள்ளது அதன் முக்கிய நோக்கம் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பது.தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு ஏற்பட வேண்டும் என்பதனை அடிப்படையாக கொண்டும்
இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை நடாத்துவதும் ஐநா சபையால் அறிவுறுத்தப்பட்ட தீர்மானம் தொடர்பான பொறுப்பு கூறல் போன்ற நடவடிக்கையை கண்காணித்து அவை தொடர்பில் கண்காணிக்க இந்த அமைப்பு உருவாக்க பட்டு உள்ளது. என தெரிவித்தார்.
இறுதி வரை ஏற்பாட்டாளர்கள் யார் என தெரியவில்லை.
இந்த அமைப்பின் உருவாக்கம் தொடர்பிலும் அதன் எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேள்விகள் எழுப்ப பட்ட போது, அனைவராலும் சொல்லப்பட்ட பதில் ஏற்பாட்டாளர்களை கேளுங்கள் அவர்கள் தெரிவிப்பார்கள் என ..
ஆனால் நிகழ்வு முடிவடைந்து அந்த நிகழ்வில் பங்கு பற்றிய 30 பேரும் அதே பதிலையே சொல்லி சென்றனர். இறுதி வரை யார் ஏற்பாட்டாளர்கள் என தெரிவிக்கப்படவில்லை.
பத்திரிகை பிரதம ஆசிரியர் பங்கேற்பு.
யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் ஒருவரின் அழைப்பின் பேரிலையே மத தலைவர்களில் ஒருவர் எனும் ரீதியில் தான் அழைக்கப்பட்டதாக மத தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதே வேளை மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவர் நிகழ்வு முடிவடைந்து வரும் அனைவரிடமும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என கூறிவிட்டு எவ்வாறு ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியரை அனுமதித்தீர்கள என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அதனை ஏற்பாட்டாளர்களை கேளுங்கள் என பதிலளித்து சென்றனர். இறுதிவரை ஏற்பாட்டாளர்கள் யார் என தெரிவிக்கப்படவில்லை.
தகவல்
இலக்கியா நிருபர் -மணிமாறன்