உயிர் வாழும் உரிமையில் ஒருவருடைய உயிரை எப்படி இன்னொருவரினால் பறிக்க முடியாதோ அதே போல் தன்னுடைய உயிரைத் தானே பறித்துக்கொள்ளும் உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை மறந்துவிடக் கூடாது

தம்மிக்க! நீங்கள் திரு­மணம் செய்து சந்தோ­ஷ­மாக வாழுங்கள்! திரு­மண வைப­வத்தை எந்­த­வித குறை­யு­மில்­லாமல் வெகு விம­ரி­சையாக செய்­யுங்கள். நான் உங்­க­ளு­டைய வங்­கிக்­க­ணக்கில் ஒரு இலட்சம் ரூபா பணத்தை வைப்­பி­லிட்­டி­ருக்­கின்றேன்.

நீங்கள் எனக்கு வாங்கித் தந்த தங்க நகைகள் அனைத்தும் வீட்­டி­லுள்ள அலு­மா­ரியின் மேல் இருக்­கின்­றன. அவற்­றையும் நீங்­களே எடுத்துக்­கொள்­ளுங்கள்.

தயவு செய்து இனிமேல் எந்­தப்­பி­ரச்­சி­னைக்கும் நீங்கள் செல்­லக்­கூ­டாது. நான் உங்கள் மேல் எவ்­வ­ளவு அன்பு வைத்­தி­ருந்தேன் என்று உங்­க­ளுக்கு தெரியும்.

ஆனால், அந்த அன்பு காலப்­போக்கில் வெறுப்பாய் மாறி­ய­தற்கும் உங்­களை தவிர வேறு எவரும் கார­ண­மில்லை. உங்­க­ளு­டைய நடவடிக்கைகள் தான் எல்லா பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­ப­டை­யான காரணம்.

இது கடந்த வாரம் 8 ஆம் திகதி காதல் விவ­காரம் ஒன்றின் கார­ண­மாக தற்­கொலை செய்­துகொண்ட வடு­முன்­னே­கெ­தர பிர­தே­சத்தைச் சேர்ந்த 20 வய­தான விஷ்­வணி என்ற இளம் பெண் தனது மர­ணத்­துக்கு முன்னர் தனது முன்னாள் காத­ல­னுக்கு எழு­திய கடி­தத்தில் இவ்வாறு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

மேலும் இச்­சம்­ப­வத்தில் குறித்த இளம் பெண்ணின் தாயான 42 வய­தான ஹேம­லதா என்­ற பெண்­ணொ­ரு­வரும் தூக்­கிட்டு தற்­கொலை செய்­து­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இச்­சம்­பவம் தொடர்­பாக இது­வரை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற ஆதா­ரங்­க­ளையும், வாக்­கு­மூ­லங்­க­னையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்­கு­வோ­மானால்,

ஹேம­லதா சுமார் 21 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தடு­கொ­டுவ, கட்­டு­கெந்த பிர­தே­சத்தைச் சேர்ந்த சோம­ரத்ன என்­பரை வாழ்க்கை துணையாக கரம் பற்­றினார்.

அதன்பின் கணவர் , மாமி, மாமா என்று புகுந்த வீட்டில் அவ­ரு­டைய திரு­மண வாழ்க்கை மிக மகிழ்ச்­சி­யாக கழிந்­தது. திரு­மண வாழ்க்­கையின் ஆதா­ரமாய் விஷ்­வ­ணியும் பிறக்க அவர்­க­ளு­டைய மகிழ்ச்சி மேலும் இரட்­டிப்­பா­னது.

எனினும், கால­வோட்­டத்தில் ஹேம­ல­தாவின் குடும்ப வாழ்க்­கையில் புயல் வீச ஆரம்­பித்­தது. சோம­ரத்­ன­வுக்கு ஏற்­பட்ட திடீர் சுக­யீனம் கார­ண­மாக 1998 ஆம் ஆண்டு அவர் இறந்து விட்டார்.

இந்­நி­லையில் இளம் வய­தி­னி­லேயே கண­வரை இழந்து குழந்­தை­யுடன் நிர்க்­க­தியாய் நின்ற ஹேம­லதா மீண்டும் தனது பிறந்த வீட்டை வந்­த­டைந்தாள். அங்கு ஹேம­ல­தாவின் தாயும், சகோ­த­ரனும் அவ­ளுக்கு பெரும் உத­வி­யாக இருந்­தார்கள்.

ஹேம­லதா இடி­யப்பம், அப்பம் போன்ற உண­வுப்­பொ­ருட்­களை செய்து கடை­க­ளுக்கு விற்­பனை செய்­வதன் மூலம் தனது செல­வுக்கு தேவை­யான பணத்தை தேடிக்­கொண்டார்.

அது­மட்­டு­மின்றி கண­வரின் சொத்­து­களில் இருந்து வரும் வரு­மா­னத்தை சிறுக சிறுக சேமித்து தாய் வீட்­டுக்கு அரு­கி­லுள்ள காணி துண்டில் தனி­யாக வீடொன்றை நிர்­மா­ணித்து தனது மக­ளுடன் குடிபுகுந்தாள்.

இவ்­வாறு கண­வரின் இழப்பின் பின் தனது தைரி­யத்தை கைவி­டாது, மிகுந்த போராட்­டங்­க­ளுக்கு மத்­தியில் மகள் விஷ்­வ­ணியை வளர்த்து ஆளாக்­கினாள். விஷ்­வ­ணியும் கல்­விப்­பொ­துத்­த­ரா­தர சாதாரணதரப் பரீட்சை எழு­திய கையோடு ஆடைத்­தொ­ழிற்­சாலை ஒன்­றுக்கு வேலைக்கு சென்றாள்.

தாயும், மகளும் ஊரி­லுள்ள யாரு­டனும் பெரி­தாக நட்­புக் ­கொண்­டா­ட­வில்லை. யாரு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கும் செல்­ல­வில்லை. இருவர் என்­றாலும் அவர்­க­ளு­டைய வாழ்க்கை மிக அமை­தி­யா­கவும் ,அழ­கா­கவும் சென்­றது.

இந்­நி­லையில் விஷ்­வணி இரா­ணு­வத்தில் பணி­யாற்றும் தம்மிக்க (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்­ப­வரை காத­லிக்க ஆரம்­பித்தாள். தம்மிக்க விஷ்­வ­ணியின் மிக நெருங்­கிய உற­வி­ன­ராவார். அதுமட்டுமின்றி தம்மிக்க விஷ்­வ­ணியை வெறித்­த­ன­மாக காத­லித்தான்.

அவ­ளுக்குத் தேவையான சகல உத­வி­க­ளையும் செய்தான். எனினும் இரு­வ­ரு­டைய காதல் விவ­கா­ரமும் இரு வீட்­டா­ருக்கும் தெரிய வர தமது எதிர்ப்பை தெரி­விக்க ஆரம்­பித்­தனர்.

அதற்கு காரணம் இரத்த உற­வு­மு­றை­யி­ன­ருக்கு இடையில் திரு­மணம் செய்து கொள்­வது முறை­யற்ற ஒன்­றாகும் என்ற காரணத்தினாலே­யே­யாகும்.

இரா­ணு­வத்­தி­லி­ருந்து விடு­மு­றைக்கு வீட்­டுக்கு வரும் தம்மிக்க ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் விஷ்­வ­ணியின் வீட்­டுக்குச் சென்று விஷ்வணியை தனக்கு திரு­மணம் செய்து வைக்­கு­மாறு தொந்­த­ரவு செய்வான்.

சில சம­யங்­களில் ஆத்­தி­ரத்தில் ஹேம­ல­தாவை அடிக்­கவும் கையை ஒங்­குவான். எனவே, இத்­த­கைய செயல்கள் விஷ்­வ­ணியின் மனதில் தம்மிக்க தொடர்­பாக வெறுப்பை உரு­வாக்­கி­யது.

அது­மட்­டு­மின்றி, தம்மிக்கவின் பெற்­றோரும் ஹேம­லதா தொடர்­பாக வெவ்­வேறு வித­மான கட்­டுக்­க­தை­களை உரு­வாக்கி அங்கும் இங்கும் சென்று கதைத்துத் திரிந்­தார்கள்.

இதனால் பெரும் மன­மு­டைந்த விஷ்­வணி தம்மிக்க­வு­ட­னான காதல் தொடர்­புக்கு முற்­றுப்­புள்ளி வைக்க நினைத்தாள். அதன்­படி தம்மிக்கவை விட்டுப் பிரிந்தாள்.

எனினும் தம்மிக்க அவ­னு­டைய முடிவை மாற்­றிக்­கொள்­ள­வில்லை. நான் உன்னைத் தான் திரு­மணம் செய்வேன் என்று பிடி­வா­தமாய் இருந்தான். ஆனால், அதை விஷ்­வணி சிறிதும் பொருட்­ப­டுத்­த­வில்லை.

அது­மட்­டு­மின்றி தம்மிக்கவை பிரிந்து சிறிது காலத்­துக்­குள்­ளேயே புதிய உறவு ஒன்றை ஏற்­றுக்­கொள்ளும் மனப்­பக்­கு­வத்தை அடைந்தாள். அதன்­படி நளின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) என்­ப­வரை காத­லிக்க ஆரம்­பித்தாள்.

இந்த விவ­காரம் இரா­ணு­வத்­தி­லி­ருந்து விடு­மு­றையில் ஊருக்கு வந்­தி­ருந்த தம்மிக்கவுக்கு எப்­ப­டியோ தெரி­ய­வர அதை எதிர்க்க ஆரம்பித்தான்.

இரவு வேளை­களில் விஷ்­வ­ணியின் வீட்­டுக்கு சென்று தாயையும் மக­ளையும் மிரட்­டு­வது, விஷ்­வ­ணியின் புதிய காத­லனை மிரட்­டு­வது என்று தம்மிக்கவின் அட்­டூ­ழி­யங்கள் தொடர்ந்­தன.

இதனால் பல இர­வுகள் விஷ்­வ­ணிக்கும், ஹேம­ல­தா­வுக்கும் நிம்­ம­தி­யற்ற பொழு­து­க­ளா­கவே கழிந்­தன. ஹேம­ல­தாவின் வாழ்வில் அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல், நம்­பிக்கை எல்­லாமே விஷ்­வணி தான்.

அப்­ப­டி­யி­ருக்­கையில் அவள் காதல் விவ­காரம் ஒன்றின் காரணமாக தினம் கண்ணீர் சிந்­து­வது பெரும் வேத­னை­யா­க­வி­ருந்­தது. ஆயினும் யாரி­டமும் இது தொடர்­பாக கூறி தீர்வு காணவும் இரு­வரும் முன்­வ­ர­வில்லை.

இந்­நி­லையில் இச்சம்பவம் தொடர்­பாக பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் போது சம்­பவம் நடை­பெற்­ற­தாகக் கூறப்­படும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இரவு 11 மணி­ய­ளவில் வழ­மைபோல் தம்மிக்க ஹேம­ல­தாவின் வீட்­டு­க்கு வந்­து­சென்­ற­தாகத் தெரியவருகின்றது.

மேலும் அடுத்த நாள் காலை ஹேம­ல­தாவின் தாய் தன்­னு­டைய பையொன்றை எடுப்­ப­தற்­காக மகளின் வீட்­டுக்கு சென்ற போதே, மகள் ஒரு இடத்­திலும் பேத்தி வீட்டின் இன்னோர் இடத்­திலும் தூக்கில் தொங்­கி­ய­வாறு சட­ல­மாக கிடந்­தார்கள்.

இதன்­போது அதிர்ச்­சியில் ஹேம­ல­தாவின் தாய் கதறி அழ, சத்தம் கேட்டு ஊரார் அனை­வரும் சம்­பவ இடத்தை நோக்கி விரைந்துசென்றனர்.

அது­மட்­டு­மின்றி தன்னை திரு­மணம் செய்­து­கொள்­ளும்­படி விஷ்­வ­ணியை உள­ரீ­தி­யாக சித்­தி­ர­வதை செய்த தம்மிக்கவும் மேற்­படி சம்பவம் தொடர்­பாக கேள்­வி­யுற்று தற்­கொ­லைக்கு முயற்­சித்­தி­ருந்த நிலையில் சிகிச்­சை­க­ளுக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனுமதிக்கப்பட்­டுள்ளான்.

மேற்­படி சம்­பவம் தொடர்­பாக பன்­னல பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் பொலிஸார் தமது விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர் .

இதன்­போதே வீட்­டி­லி­ருந்து இரு­வரும் தமது கையெ­ழுத்தில் எழுதி கையொப்­ப­மிட்ட 8 கடி­தங்­களை பொலி­ஸார் கண்­டெ­டுத்­தனர். எனவே கிடைத்த கடி­தங்­களை ஆதா­ர­மாகக் கொண்டு தற்­கொ­லைக்­கான கார­ணத்தை அறிய முற்­பட்ட பொலி­ஸா­ருக்கு இது இரு காதல் தொடர்­பு­க­ளினால் ஏற்­பட்ட மர­ண­மென்று தெரி­ய­வந்­தது.

இக்­க­டி­தங்களில் விஷ்­வணி தனது முன்னாள் காத­லான தம்மிக்கவுக்கு எழு­தி­யதும், ஏனைய கடி­தங்கள் ஹேம­ல­தா­வினால் தனது தாய்க்கும், சகோ­த­ர­னுக்கும் எழு­தி­ய­வை­யாகும்.

ஹேம­லதா எழு­தி­யி­ருந்த கடி­த­மொன்றில் “அம்மா, அண்ணா என்னை மன்­னித்து விடுங்கள். நீங்கள் இரு­வரும் எங்­க­ளுக்கு நிறைய உதவிகள் செய்­தி­ருக்­கின்­றீர்கள்.

எல்­லா­வற்­றுக்கும் நன்றி. மக­ளு­டைய காதல் தொடர்­பினால் நாங்கள் இரு­வ­ருமே நிம்­ம­தி­யில்­லா­ம­லேயே வீட்டில் இருந்து வந்தோம். மகள் அடிக்­கடி நான் செத்தால் தான் நிம்­மதி என்று புலம்­புவாள் எனவே, எனக்கு இருப்­பது மகள் மட்­டுமே, மகள் போன பிறகு என்னால் மட்டும் தனி­யாக வாழ முடி­யாது. ஆகவே தான் மக­ளுடன் சேர்ந்து நானும் இந்த முடிவை” எடுத்தேன். “என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இளம் வய­தி­லேயே கண­வரை இழந்து மறு­வி­வா­கமும் செய்­து­கொள்­ளாது ஒரே மக­ளுக்­காக பல்­வேறு போராட்­டங்­க­ளுக்கு மத்­தி­யிலும் தைரியத்துடன் வாழ்ந்த ஹேமலதா இவ்வாறான ஒரு முட்டாள்தனமான முடிவினை தேடிச்சென்றது வேதனைக்குரியதே .

எது எவ்வாறாயினும் ஒருவருடைய உயிரை எப்படி இன்னொருவரினால் பறிக்க முடியாதோ அதே போல் தன்னுடைய உயிரை தானே பறித்துக்கொள்ளும் உரிமையும் எவருக்கும் கிடையாது என்பதை மறந்துவிடக் கூடாது.

இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை பிரச்சினைகள் என்று வரும் போது அதை சமாளிக்க திறனின்றி நிரந்தரமற்ற பிரச்சினைகளுக்காக நிரந்தரமான பாரதூரமான முடிவுகளை நோக்கிச் செல்கின்றார்கள்.

ஆனால், உங்களுடைய இழப்பானது உங்களுடன் நெருக்கமானவர்களுக்கு எவ்வாறான வேதனையளிக்கும் என்பதை ஒரு தரம் சிந்தித்து பார்க்கவும் தவறிவிடாதீர்கள்.

-வசந்தா அருள்ரட்ணம்-

Share.
Leave A Reply