இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவிடம் மூன்று மாதங்கள் பாலியல் அடிமையாக இருந்த இளம் யாஸிதி பெண் ஒருவர் தாம் அனுபவித்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் பலத்காரங்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையின் முன் விபரித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புச் சபை முன் தோன்றிய நாதியா முராத் பாசி தாஹா என்ற குறித்த பெண், அந்த தீவிரவாத குழுவை அழித்து ஒழிக்கும்படி மன்றாடினார்.
சிறுபான்மை மக்களின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் போரில் சூறையாடப்பட்ட பொருட்கள் போன்று விற்கப்படுவதாக, ஐ.எஸ்ஸின் கீழ் யாஸிதி மக்கள் அனுபவிக்கும் துயரம் குறித்து 21 வயதான அந்த பெண் குறிப்பிட்டார்.
“பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் பாலியல் சித்திரவதைகள் அவர்கள் மீண்டும் வழமையான வாழ்வுக்கு திரும்புவதை முழுமையாக இல்லாமல் செய்கிறது” என்று குறிப்பிட்ட அவர், தனது அனுபவங்கள் குறித்து விபரிக்கும் போது அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் ஈராக்கில் தனது கிராமத்தில் இருந்து தம்மை ஐ.எஸ். பிரித்தது குறித்து 15 அங்கத்துவ நாடுகள் கொண்ட பாதிகாப்புச் சபை முன் அவர் விபரித்தார்.
பின்னர் அவர் ஐ.எஸ்ஸின் பலம்கொண்ட நகரான மொசூலுக்கு பஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். “போகும் விழியில் அவர்கள் எம்மை அவமானப்படுத்தினார்கள், துன்புறுத்தினார்கள், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார்கள்” என்றார்.
“மேலும் 150 யாஸிதி குடும்பத்தினருடன் அவர்கள் எம்மை மொசூல் நகருக்கு அழைத்துச் சென்றார்கள். கட்டடம் ஒன்றுக்குள் ஆயிரக்கணக்கான யாஸிதி குடும்பங்கள், சிறுவர்கள் இருந்தார்கள். அவர்கள் அன்பளிப்புகளாக பரிமாறப்பட்டார்கள்.
அப்படியான ஒருவர் என்னிடம் வந்தார். அவர் என்னை எடுத்துச் செல்ல விரும்பினார். நான் நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் முழுமையாக பீதியில் இருந்தேன். நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு இராட்சத மனிதன் இருந்தான். அவன் ஒரு அரக்கனை போல் இருந்தான்.”
அந்த பெண் மேலும் விபரிக்கும்போது, “நான் அழுதேன், நான் அழுதுகொண்டே, நான் மிகவும் வயது குறைந்தவர், நீங்கள் பிரமாண்டமானவராக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டேன். அப்போது அவர் என்னை அடித்தார் உதைத்தார்.
ஒருசில நிமிடங்கள் கழித்து மற்றுமொருவர் என்னை நோக்கி வந்தார். அப்போதும் நான் நிலத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவர் சற்று சிறியவராக இருந்ததை கண்டேன்.
முதலாம் நபரின் இராட்சத தோற்றம் காரணமாக இரண்டாமவரிடம் என்னை எடுத்துச் செல்லுமாறு கெஞ்சினேன். அப்போது அந்த நபர் என்னை எடுத்துச் செல்ல மதம் மாறும்படி கேட்டார். நான் மறுத்துவிட்டேன். எனக்காக பேச அவர் என்னை திருமணம் புரிய கேட்டார்.”
யாஸிதி மக்கள் மீது ஐ.எஸ். புரியும் கொலை, கற்பழிப்பு, துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை ஐ.நா. ஒரு இனப்படுகொலையாக வர்ணிக்கிறது.
நாதியா தனது அனுபவம் பற்றி மேலும் விபரிக்கையில், “அன்றைய இரவு அந்த நபர் என்னை தாக்கினார். எனது ஆடையை களையுமாறு கேட்டார். அவர் பாதுகாவலர்களுடன் என்னை அறை ஒன்றுக்குள் போட்டார். நான் மயக்கமுறும் வரையில் தாங்களது குற்றங்களை புரிந்தார்கள்.
ஐ.எஸ்ஸை முழுமையாக ஒழித்துவிடுங்கள் என்று உங்களை இறைஞ்சுகிறேன்” என்று அந்த பெண் குறிப்பிட்டார்.
மூன்று மாதங்களின் பின் நாதியாவினால் ஐ.எஸ். பிடியில் இருந்த தப்பிக்க முடிந்திருப்பதோடு அவர் தற்போது ஜெர்மனியில் வாழ்கிறார். எனினும் அவரது சகோதரர்கள் பலரும் ஐ.எஸ்ஸினால் கொல்லப்பட்டுள்ளனர்.