கடலோரக் கவிதைகள் படம் மாபெரும் வெற்றியடைந்ததால், நிலையான கதாநாயகன் அந்தஸ்து பெற்றார், சத்யராஜ். தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடித்து வந்த படங்களும் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டன. “பாலைவன ரோஜாக்கள்” படத்தில் கருணாநிதி வசனத்தைப் பேசி நடித்தார்.

“கடலோரக் கவிதைகள்” படம் கொடுத்த நட்சத்திர அந்தஸ்து மூலம் கலைவாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

“கடலோரக் கவிதைகள் படம் மூலம் டைரக்டர் பாரதிராஜா என்னை ஜனரஞ்சக ஹீரோவாக்கி விட்டார். படத்தில் அவர் எனக்காக உருவாக்கியிருந்த `சின்னப்பதாஸ்’ கேரக்டர் ரசிகர்களின் இதயத்துக்குள் பதிவாகிவிட்டதே இதற்கு காரணம்.

இதன் பிறகு கலைஞர் கதை வசனத்தில் நானும் பிரபுவும் நடிக்க “பாலைவன ரோஜாக்கள்”, சத்யா மூவிசின் “மந்திரப் புன்னகை” என படங்கள் வந்தன. இந்த இரண்டும் ஒரே நேரத்தில் வந்த வாய்ப்புகள்.

“பாலைவன ரோஜாக்கள்” படத்திற்கு கலைஞர் வசனம் எழுதுகிறார் என்றதும், எனக்குள் ஒரு பரவசம். நடிக்க வரும் முன்பாக சிவாஜி சாருக்காக அவர் எழுதிய “பராசக்தி”, “மனோகரா” பட வசனங்கள் எனக்கு மனப்பாடம்.

அதற்குக் காரணம் நடிகர் சிவகுமார்தான். அவர் கலைஞர் கதை வசனத்தில் சிவாஜி சார் நடித்த படங்களின் வசனத் தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை பத்திரமாக வைத்திருந்தார். அதன் அன்றைய விலை நாலணா.

அந்த வசன புத்தகத்தை எனக்குத் தந்து, “நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்த பிறகு கலைஞர் வசனங்களை சிவாஜி சார் எப்படி பேசியிருக்கிறார் என்று படித்துப் பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்” என்று கூறினார்.

அதனால் அப்போதே “பராசக்தி”, “மனோகரா”, “ராஜாராணி” படத்தின் “சேரன் செங்குட்டுவன்” ஓரங்க நாடக வசனம் அத்தனையும் எனக்கு மனப்பாடம்.

அப்போது அவர் எழுதிய படங்களில் செந்தமிழில் வார்த்தைகளை அழகுபடுத்தியிருந்தார். இப்போதும் அப்படியே எழுதுவாரா? அல்லது வேறு பாணியில் எழுதுவாரா என்றெல்லாம் ஆர்வம் ஏற்பட்டது.

கலைஞரின் வசனங்கள் இயல்புத் தமிழில் இருந்தது. கால மாற்றத்தைப் புரிந்து அதற்கேற்ப மாற்றங்களுடன் வசனங்களை கோர்த்திருந்தார். டைரக்டர் மணிவண்ணன்தான் படத்தை இயக்கினார்.

மணிவண்ணன் இந்தப் படத்தை இயக்கிய அதே நேரத்தில் நான் கதாநாயகனாக நடித்த “விடிஞ்சா கல்யாணம்” படத்தையும் இயக்கினார்.

இரண்டும் வேறு வேறு கதை. “வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை கூர்மையானது” என்ற பின்னணியில் உணர்ச்சிக் குவியல் “பாலைவன ரோஜாக்கள்” என்றால், நான் எனக்கே உரித்தான பாணியில் `வில்ல’ நாயகனாக நடித்த “விடிஞ்சா கல்யாணம்” படம் அப்படியே மாறுபட்ட ரகம்.

1986-ம் ஆண்டு தீபாவளிக்கு “பாலைவன ரோஜாக்கள்”, “விடிஞ்சா கல்யாணம்” இரண்டு படங்களும் ரிலீசாயின. ஒரு ஹீரோவின் படம், ஒரே நேரத்தில் இப்படி பண்டிகை நாளில் ரிசீலானது இதற்கு முன்பு சிவாஜி சாருக்குத்தான் நடந்தது.

1970-ம் ஆண்டு தீபாவளிக்கு சிவாஜி சார் நடித்த “சொர்க்கம்”, “எங்கிருந்தோ வந்தாள்” ஆகிய இரண்டு படங்களும் ரிலீசாயின.

இரண்டுமே வெற்றி பெற்றன. 16 வருடம் கழித்து, இப்படி தீபாவளி தினத்தில் வெளியான என் படங்களும் வெற்றி பெற்று எனக்கு மகிழ்ச்சி தந்தன.

மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்ற படம்தான் தமிழில் “பாலைவன ரோஜாக்கள்” என்ற பெயரில் ரீமேக் ஆனது.

அது மாதிரி தமிழில் நான் நடித்த “பூவிழி வாசலிலே”, “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” படங்களும் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த படங்களின் ரீமேக்தான்.

“மக்கள் என் பக்கம்”, “அண்ணா நகர் முதல் தெரு”, “பொம்முகுட்டி அம்மாவுக்கு” என்று எனக்கு தொடர் வெற்றி தந்த படங்களும், மலையாள படங்களின் ரீமேக்தான். இந்த மூன்று படங்களிலும் மலையாளத்தின் இன்னொரு சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.

இதை நான் நன்றிப் பெருக்கோடு சொல்லக் காரணம் உண்டு. இந் தப் படங்களில் மாறுபட்ட சவாலான கேரக்டர்கள் எனக்குக் கிடைத்தன. இந்தப் படங்கள் என் ஹீரோ அந்தஸ்தை தக்க வைக்கவும் உதவின.

“பாலைவன ரோஜாக்கள்” படத்தை அடுத்து, நானும் பிரபுவும் சேர்ந்து நடித்த படம் “சின்னதம்பி பெரியதம்பி.” நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். படத்தை தயாரித்தவர் அண்ணன் `மாதம்பட்டி’ சிவகுமார்.

வழக்கமாக அவுட்டோர் படப்பிடிப்பு என்றால், ஓட்டலில்தான் தங்குவேன். இந்தப் படத்துக்காக அண்ணன் மாதம்பட்டி சிவகுமார் வீட்டிலேயே மொத்த யூனிட்டும் தங்கிக் கொண்டோம்.

அந்த அளவுக்கு கடல் மாதிரி பரந்து விரிந்தது அவர் வீடு. நான், பிரபு, கேமராமேன் சபாபதி, டைரக்டர் மணிவண்ணன் ஒரே ரூமில் தங்கிக் கொண்டோம்.

காலை முழுக்க படப்பிடிப்பு; மாலையானால் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் என்று ஒட்டுமொத்த யுனிட்டும் விளையாட்டு வீரர்களாகி விடுவோம். இரவானால் மாதம்பட்டி சிவகுமார் அண்ணனும், பிரபுவும் வேட்டைக்கு கிளம்பி விடுவார்கள்.

மாதம்பட்டி அண்ணன் வீட்டில், அப்போது யானை வேட்டைக்கு பயன்படுத்துகிற துப்பாக்கி உள்பட விதம் விதமான துப்பாக்கிகள் இருந்தன.

வேட்டையாட தடை வந்த நேரத்தில், எல்லா ரக துப்பாக்கிகளையும் மொத்தமாக சரண்டர் பண்ணிவிட்டார். இப்படி ஆட்டம், கொண்டாட்டம் என்று ஒரே குடும்பம் போல பணியாற்றிய அந்தப் படமும் வெற்றி பெற்றது.

இதையடுத்து சிவாஜி சாருடன் “முத்துக்கள் மூன்று” படம் வந்தது. இந்தப் படத்தில், சிவாஜி சாருடன் நானும் பாண்டியராஜனும் மற்ற 2 ஹீரோக்கள்.

படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 1-ந்தேதி குன்னூரில் தொடங்கியது. அன்று சிவாஜி சாரின் பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் 2-ந்தேதி பாண்டியராஜனின் பிறந்த நாள். மறுநாள் 3-ந்தேதி என் பிறந்தநாள்! தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்புடன் பிறந்த நாள் கொண்டாட்டமும் தொடர்ந்தது!

இந்த படப்பிடிப்பின் போது சிவாஜி சாருக்கு பக்கத்து ரூமை எனக்கு கொடுத் திருந்தார்கள். நான் காலையில் விழித்ததும் தண்டால், பஸ்கி போன்ற உடற்பயிற்சிகளை முடித்த கையோடு, `ஸ்கிப்பிங்’கும் செய்வேன்.

கயிற்றை கழற்றியபடி 2 ஆயிரம் தடவை தொடர்ந்து குதிப்பேன். அதன்படி, ரூமிலும் இந்தப் பயிற்சியை தொடர்ந்தேன். இதில் `ஸ்கிப்பிங்’ குதியல் மட்டும் பக்கத்து ரூமில் தங்கியிருந்த சிவாஜி சாருக்கு `திங்… திங்…’ என்று கேட்டிருக்கிறது.

கொஞ்ச நேரத்தில் பக்கத்து அறையில் இருந்து போன். எடுத்துப் பேசினால் பிரபு லைனில் வந்திருக்கிறார். “என்ன தலைவரே! ஸ்கிப்பிங் பண்றீங்களோ?” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன்.

“நீங்க குதிக்கிற சத்தம் அப்பாவுக்கு கேட்டிருக்கிறது. அப்பா எனக்குபோன் போட்டு, “சத்யராஜ் எவ்வளவு பொறுப்பா உடற்பயிற்சியெல்லாம் பண்றார். நீயும் ஏதாவது உடற்பயிற்சி செய்வதுதானே!” என்று கேட்கிறார்” என்றார்.

எனக்கு பாராட்டு. பிரபுவுக்கு அட்வைஸ். சிவாஜி சாரின் `பார்வை’ சரிதானே!”

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

தொடரும்..

முன்னைய சினி தொடர்களை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

Share.
Leave A Reply