வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் (இணைத்)தலைமையேற்றிருக்கும் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்கிற புதிய சிவில் சமூக அமைப்பொன்று கடந்த சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது.
சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் புதிய மாற்றுக் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்கள் சில தரப்புக்களினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர் புதிய அமைப்பொன்றுக்கு தலைமையேற்றிருக்கின்றார்.
அரசியல்- சமூக முனைப்புள்ள அமைப்பொன்றின் தோற்றம் இயல்பாகவே நிறைய உரையாடல்களையும், சர்ச்சைகளையும் தோற்றுவிக்கும். அப்படியான நிலையொன்று தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பம் தொடர்பிலும் எழுந்திருக்கின்றது.
புதிய தமிழ் சிவில் சமூக அமைப்பொன்றின் அங்குரார்ப்பண நிகழ்வு ஏன் மூடிய மண்டபத்துக்குள் நடத்தப்பட்டது, ஊடகங்களுக்கு முறையான அழைப்பு ஏன் விடுக்கப்படவில்லை, அந்த அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை ஏன் ஊடக நிறுவனமொன்றின் மின்னஞ்சலினூடு அனுப்பப்பட்டது?, என்பது மாதிரியான கேள்விகள் அவை.
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் மாற்றம் கோரும் தரப்பு’ என்கிற அரசியல் நிலைப்பாடொன்று தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் தொடரும் நிலையில், தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பமும், அதன் முனைப்பையும் கூட அந்த அமைப்பில் அங்கம் பெறும் தரப்புக்கள், நபர்கள் சார்ந்து கவனம் பெறுவது இயல்பானது.
அது, புதிய அரசியல் கூட்டணி மற்றும் மாற்றுத் தலைமைக்கான முனைப்பு என்கிற ரீதியிலான விடயத்தை தமிழ் மக்கள் பேரவையின் ஆரம்பத்தின் மீதும் வைத்திருக்கின்றது.
எனினும், தேர்தல்- வாக்கு அரசியல் முனைப்பு தமிழ் மக்கள் பேரவைக்கு கிடையாது என்று அந்த அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
அத்தோடு, ‘தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். அது அரசியல் கட்சியல்ல. அதற்கு மாற்று தலைமையை ஏற்படுத்தும் நோக்கமும் இல்லை‘ என்று சி.வி.விக்னேஸ்வரனும் தன்னுடைய பதிலொன்றில் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் பற்றி நிறையக் கதைகள் பேசப்படுகின்றன. அதில் எத்தனை கதைகள் உண்மையானவை என்பது தெரியாது.
கடந்த கால அவதானிப்புக்களின் போக்கில் இந்தப் பத்தியாளரும் சில விடயங்களைக் கூற விளைகின்றார். அதாவது, இப்போது ‘தமிழ் மக்கள் பேரவை’யாக தோற்றம் பெற்றுள்ள அமைப்பின் ஆரம்ப பெயர் ‘தமிழ்த் தேசியப் பேரவை‘யாக இருந்தது என்பது தொடர்பிலானது அது.
தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இன்னும் சில தரப்புக்களும் 2010 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆர்வம் காட்டின. அதற்கான முன் முனைப்புக்கள் 2012ஆம் ஆண்டில் அதிகமாகின.
அதன்போக்கில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அழைப்பின் பேரில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் ஆகியன சந்திப்பொன்றை நடத்தின.
தமிழ்த் தேசியப் பேரவை என்கிற அமைப்பினைத் தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை. அதை, தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
எனினும், கூட்டமைப்புக்குள் இருந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் பேரவை உருவாக்கத்துக்குப் பெரும் ஆதரவு அளித்தார்.
சுமார் 6 மணித்தியாலங்கள் நீண்ட இந்த இழுபறிகளின் பின், வேண்டா வெறுப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியப் பேரவையின் உருவாக்கம் தொடர்பிலான விடயத்துக்கு இணங்கினார்.
இதன்பிரகாரம், தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் சிவில் சமூக அமையம் சார்பில் சட்டத்தரணி வி.புவிதரன் மற்றும் சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், அது, அடுத்த கட்டத்தினை அப்போது எட்டவில்லை.
இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கத்தினை தவிர்த்து வருகின்றது என்கிற குற்றச்சாட்டினை தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முன்வைத்து வந்தன.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடக அறிக்கைகளில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஆரம்பம் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலோடு தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்கு வந்த சி.வி.விக்னேஸ்வரன் மெல்ல மெல்ல கவனம் பெறத் தொடங்கினார்.
அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுக்களை அவர் இலகுவாக உடைப்பது மாதிரி காட்டிக் கொண்டார். அதில் அவர் பெரிதாக வெற்றி பெற்றவில்லை. மாறாக கலகக்காரராக அடையாளப்படுத்தப்பட்டார். சில தரப்பினரால் நம்பிக்கையுள்ள தலைவராக நோக்கப்பட்டார்.
அப்படியான தருணமொன்றில், தமிழ்த் தேசியப் பேரவையின் உருவாக்கத்தினை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி முன்னெடுப்பது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட தரப்புக்கள் நகர்ந்தன.
அந்த முனைப்புக்கள் 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டாலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அது வீச்சம் பெற்றது.
அது தொடர்பிலான சந்திப்பொன்று கடந்த மே மாதத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ் சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது.
அந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைமைத்துவத்தை ஏற்பது அல்லது அதில் முக்கிய பங்காளராக இணைவது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன்பட்டிருந்தார் என்று கூறப்படுகின்றது.
எனினும், அதன் பின்னரான பொதுத் தேர்தல் களம் வேறு மாதிரியாக அமைந்ததால், தமிழ்த் தேசியப் பேரவையின் ஆரம்பம் காலம் தாழ்த்தப்பட்டது.
இந்நிலை, தமிழ்த் தேசியப் பேரவையின் தோற்றத்தில் ஆர்வம் காட்டிய தரப்புக்களோடு, இன்னும் சிலரை இணைத்து விட்டிருக்கின்றது.
அதில், வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் என்.விஜயசுந்தரம் முக்கியமானவர். இப்படிப்பட்ட நிகழ்வு மாற்றங்களின் போக்கில், தமிழ்த் தேசியப் பேரவை, தமிழ் மக்கள் பேரவையாக இப்போது தோற்றம் பெற்றிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்தாலும், கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் பலத்த அதிருப்திகளை வெளியிடும் முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
அது, குறிப்பிட்டளவான கவனம் பெற்றது. அதாவது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் தொடர்பிலானது அது.
அந்த விடயமே தமிழ் மக்கள் பேரவை மீது, புதிய அரசியல் கூட்டணி என்கிற விடயத்தை சேர்த்துவிட்டிருக்கின்றது. ஆனாலும், அது அவ்வளவு தாக்கம் செலுத்தும் ஒன்றல்ல. ஆக, அதுபற்றி இப்போதைக்கு அக்கறை கொள்ள வேண்டியதில்லை.
மக்கள் கூட்டமொன்றின் நாகரிகமான நீட்சி அதன் அரசியல் மற்றும் சிவில் சமூக இயங்குநிலை சார்ந்தது. ஆயுதப் போராட்டங்களின் முடிவுக்குப் பின்னரான கடந்த ஆறரை ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் தன்னுடைய இயங்குநிலை தொடர்பிலான அக்கறையை பெருமளவு கைவிட்டுவிட்டது.
விழித்துக் கொள்கின்ற ஒரு சில தருணங்களும் தேர்தல்கள் மற்றும் நினைவுகூரல்கள் சார்ந்தாக மாத்திரமே இருந்து வருகின்றது.
அப்படிப்பட்ட நிலையில், சிவில் சமூக வெளியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உண்டு. அதுதான், தமிழ்த் தேசிய அரசியலை தீர்க்கமான பக்கத்துக்கு நகர்த்தும். அதன்போக்கில், சிவில் சமூக அமைப்புக்களின் வருகை வரவேற்கப்பட வேண்டியது.
தமிழ்ச் சூழலில் சிவில் சமூக அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் அடிமட்ட மக்களிடமிருந்து தங்களுடைய ஆற்றுகைகளை கட்டமைத்து முன்னெடுப்பதில்லை. அது, மக்கள் சார் நிலைப்பாடுகளை அந்த மக்களிடமே கொண்டு செல்வதிலிருந்து தடுத்திருக்கின்றது. அதனால், வெற்றிகரமான சிவில் சமூக அமைப்புக்கள் இன்னமும் எழுச்சி பெறவில்லை.
எழுச்சி பெற்றுள்ளதாக காட்டப்படும் அமைப்புக்களின் வீச்சு என்பது ஊடக பரபரப்புக்களோடு பெரும்பாலும் அடங்கி விடுகின்றன.
அப்படிப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் செயற்திறனும், நோக்குமே அதன் வெற்றியைத் தீர்மானிக்கப்போகின்றது. மாறாக, ஓய்வு நேர அரசியல் உரையாடலும், பருவகால செயற்பாட்டாளர்களாக மாறுவதும் தீர்க்கமான அரசியல் மற்றும் சிவில் சமூக நகர்வினை வடிவமைக்காது.
தமிழ் மக்கள் பேரவை தன்னுடைய இயங்குநிலை மற்றும் செயற்பாட்டுகள் தொடர்பிலான முன்வைப்புக்கள் மற்றும் உபகுழுக்கள் நியமனங்களின் மூலம் சில நம்பிக்கைகளை ஏற்படுத்த முனைந்திருக்கின்றது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதி செய்தல், தேசியத்தினை காப்பாற்றுதல், உள்ளக பொருளாதாரத்தினை மீளக் கட்டியமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து அவை அமைந்திருக்கின்றன.
குறிப்பாக, இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கமான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை தன்னுடைய முதலாவது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.
அவ்வாறான நிலையில், அதற்கான செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றது என்பதையும், தமிழ் மக்களையும் அரசியல் சக்திகளையும் எவ்வாறு ஒருங்கிணைத்து வெற்றிகரமான பக்கம் நகரப்போகின்றது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-புருஜோத்தமன் தங்கமயில்-