ஈராக்கில் கடந்த 43 ஆண்டுகளில் முதல் தடவையாக தேசிய ரீதியான அழகுராணி போட்டியொன்று நடைபெற்றுள்ளது.
தலைநகர் பாக்தாத்திலுள்ள ஹோட்டலொன்றில கடந்த சனிக்கிழமை இறுதிச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஷாய்மா காசிம் அப்துல்ரஹ்மான், மிஸ் ஈராக் 2015 அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டார்.
1972 ஆம் ஆண்டின் பின்னர் ஈராக்கில் நடைபெற்ற முதலாவது அழகுராணி போட்டி இதுவாகும்.
இப்போட்டிகளில் நீச்சலுடைச் சுற்று நடைபெறவில்லை. மாலைநேர ஆடை சுற்றில் போட்டியாளர்களின் ஆடைகள் முழங்காலுக்கு கீழ் நீண்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
20 வயதான ஷாய்மா காசிம் அப்துல்ரஹ்மான், ஈராக்கின் பல்லின மக்கள் வசிக்கும் கிர்குக் நகரைச் சேர்ந்தவர்.
அடுத்த வருடம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகுராணி) போட்டியில் ஈராக் சார்பில் ஷாய்மா காசிம் பங்குபற்றவுள்ளார்.
மிஸ் ஈராக் அழகுராணியாக சாய்மா காசிம் தெரிவானவுடன் ஐ.எஸ். அமைப்பில் இணையுமாறும் இல்லாவிட்டால் அவர் கடத் திச் செல்லப்படுவார் என அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால், மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி போட்டியில் பங்குபற்றுவது உட்பட தனது திட்டங்களை இந்த அச்சுறுத்தல் காரணமாக மாற்றிக்கொள்ளப்போவதில்லை என ஷாய்மா காசிம் தெரிவித்துள்ளார்.
மிஸ் ஈராக் அழகுராணியாகத் தெரிவானதன் மூலம் தான் பெற்றுள்ள புகழை பெண்களின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கான பிரசாரங்களுக்கு பயன்படுத்த விரும்புவதாகவும் ஷாய்மா காசிம் தெரிவித்துள்ளார்.