‘எந்த திசையில் இருந்து துப்பாக்கி குண்டுகள் பாயுமென்று தெரியாது. எங்கிருந்து கொடூரமான ஆயுதங்கள் கொண்ட கும்பல் வந்து ரத்தம் உறையும் அளவிற்கான வேலையை செய்யும் என்று தெரியாமல் பயந்த மனநிலையில் இருந்தனர் மும்பையில் உள்ள பிரபலங்கள், முக்கியமாக பெரிய தொழில்கள் செய்து வரும் தொழில் அதிபர்கள், பல்வேறு முக்கிய நபர்கள்.
இவர்கள்தான் மும்பை டான்களுக்கு தங்க முட்டையிடும் வாத்துக்கள். தங்க முட்டை யாருக்கு என்பதில்தான் இந்த களேபரத்திற்கு காரணம். பாலிவுட் முதல் அரசியலில் கலக்கிக் கொண்டு இருந்த பல்வேறு முக்கிய புள்ளிகளுக்கு இந்த காலகட்டம் மிக கொடுமையாக இருந்தது.
ஒரு சிலர், தம்மை எப்பொழுதும் யாரோ கண்காணித்து வருகிறார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள். சிலர் பார்த்துக்கலாம் என்று அசால்டாக இருந்தனர்.
அப்படி பயமில்லாமல் இருந்த பல்வேறு முக்கிய புள்ளிகள் கொடூரமான முறையிலும், சாலையின் மையத்திலும், ஆட்கள் அதிகமாக பழங்கும் ஜனரஞ்கமான இடத்திலும் கொடூரமாக கொல்லப்பட்டனர். அது அவர்களுக்கு போதாதா காலம் போல.
மும்பையை பொறுத்தவரை பல்வேறு டான்கள் அவர்களுக்குள் நடக்கும் அதிகார சண்டையில் பல்வேறு அப்பாவி நபர்களை கொலை செய்தனர். ஒரு சில சம்பவங்களுக்கு மட்டுமே முக்கியமான டான்கள் வந்து செய்வார்கள்.
ஒரு சில சம்பவங்களை டான்களின் தளபதிகள் செய்வார்கள். அநேக கொலைகளை கூலிக் கொலையாளிகள் செய்து வந்தனர்.
இதற்காக பல்வேறு நபர்கள் மும்பை முழுவதும் நிறைந்து இருந்தனர். துப்பாக்கி வைத்து கொலை செய்வது, கொடூரமான ஆயுதங்கள் கொண்டு தாக்கிக் கொல்வது, வெடி குண்டு வீசி வெட்டி சாய்ப்பது, பயணத்தில் வைத்து கொலைசெய்வது, பொது இடத்தில் வைத்து கொலை செய்வது என்று கொலை செய்வது வகை வகையாக இருந்து வந்தன.
இங்கு நடந்த கொலைகளின் ஸ்டைல்கள், சண்டைகள், அதற்காக அவர்கள் தீட்டிய திட்டங்கள் என்று அவர்கள் பயன்படுத்திய முறைகளின் காப்பிதான் இன்றளவும் இந்திய சினிமாக்களுக்கு தீனி போட்டு வலம் வருகிறது.
வாஹித்தை துளைத்து, குல்ஷன் குமாரை குதறிய டான்களின் மோட்டிவ் மர்டர்ஸ்
மும்பையில் பிரபலமான நபர்களை குறிவைத்து கொலை செய்ய ஆரம்பித்த காலம். முதன் முதலில் அரசுக்கு போட்டியாக தனியார் விமான சேவையை ஆரம்பித்தார் கேரளாவை சேர்ந்த தாகியுதீன் வாஹித்.
கடின உழைப்பால் முன்னுக்கு வந்த வாஹித் ‘வாயு தூத்’ என்கிற பெயரில் மும்பையில் இருந்து விமான சேவையை தொடங்கியவர்.
விமான தொழில்கள் மூலம் பல்வேறு முக்கிய நபர்கள், அரசியல் புள்ளிகள் என பல்வேறு நபர்கள் வாஹித்துக்கு நெருக்கமானார்கள். ஆனாலும் உள்ளூர் டான்களின் அரசியலை தாக்கு பிடிக்கமுடியாமல் தடுமாறினார்.
சோட்டா ராஜனுக்கும் வாஹித்துக்கும் முட்டல் மோதல் ஆரம்பமானது. அதனால் சோட்டா ராஜன் அனுப்பிய ஆட்கள், வாஹித்தை பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொலை செய்தார்கள்.
அதோடு விடவில்லை வாஹித்தின் டிராவல்ஸ் நிறுவனம், விமான நிறுவனம், கட்டுமான நிறுவனம் என்று வாஹித்தின் ஒட்டு மொத்த பிசினஸ் சாம்ராஜ்யத்தையே தரைமட்டமாக்கினார்கள்.
ஆடிப்போனது மும்பை மாநகரம். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
kulshan
ஆடியோ கேசட் உரிமையாளர் குல்ஷன்குமார். ‘டி’ சீரியஸ் என்கிற பெரியரில் சிறிய அளவில் பக்தி ஆல்பங்களை ஆடியோ கேசட்களாக தயாரித்து, குறைந்த விலைக்கு சந்தையில் அறிமுகப்படுத்தி வந்த குல்ஷன் குமாருக்கு பயங்கர வெற்றி.
பல்வேறு பாடல்களை, ஆல்பங்களை ஆடியோவாக கேசட்களில் பதிவு செய்து குறைந்த விலைக்கு விற்றதால் நல்ல லாபம்.
குறுகிய ஆண்டிலேயே மிகப்பெரிய பணக்காராக ஆன குல்ஷன் குமார் மீது பல்வேறு நபர்களுக்கு பொறாமை உண்டானது. அவரை வீழ்த்த பல்வேறு நபர்கள் தொழில் ரீதியாக மோதினார்கள்.
ஆனால் குல்சன் குமார் பல்வேறு புதிய நபர்களை அறிமுகப்படுத்தினார். அவர்களில் சிலர் ஸ்டார் பாடகர்களாக வலம் வந்தனர்.
மும்பை சினிமா வட்டாரங்களிலும் தயாரிப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்த குல்ஷன்குமாரை பல்வேறு நபர்கள் பணம் கேட்டு மிரட்டினார்கள்.
இது போன்ற மிரட்டல்களை அலட்சியப்படுத்தி வேலையில் பிசியாக இருந்த குல்ஷன் குமாருக்கு குறி வைத்தனர். கோவில் ஒன்றுக்கு போன அவரை, அபு சலீமின் ஆட்கள் கோவிலின் வாசலில் வைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதை சற்றும் எதிர்பாராத குல்ஷன் குமார் குண்டடடி பட்டு வழியும் ரத்தத்தோடு, ‘காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்..!’ என்று கதறிக்கொண்டே கோவிலின் வாசலில் இருந்து வீதிகளில் ஓடிய பொழுது, ஒருவர் கூட அவருக்கு உதவ முன் வரவில்லை.
உயிரைக் காக்க அவர் ஓடிய அந்த வீதியில்தான் நேற்றுவரை குல்ஷனுக்கு ஏகப்பட்ட மரியாதைகள் கிடைத்து வந்தன. குல்ஷனை பார்த்தது வணக்கம் வைத்த கைகள் எல்லாம் ஒதுங்கி நின்றன.
பதறி ஓடிய குல்ஷன் குமார், உயிர் பிழைக்க இடம் கிடைக்காமல் கழிப்பறை ஒன்றில் தஞ்சம் அடைந்து இருந்த பொழுது சிதறிய ரத்தக்கறையை வைத்து கண்டு பிடித்த கொலைகார கும்பல், குல்ஷனை வெளியே இழுத்து வந்து போட்டுத்தள்ளியது.
குல்ஷன் குமாரின் உயிர் போகும் நிமிடம் வலியால் கத்துவதை அபு சலீமுக்கு அவனது ஆட்கள் செல்போனில் லைவாக கால் செய்து காட்டியதாகவும், குல்ஷன் குமார் உடல் முழுவதும் ரத்தம் வழிய ஓடி வந்து, பல்வேறு நபர்களிடம் ‘உயிரை காப்பற்றுங்கள்…’ என்று கெஞ்சியதாகவும் பத்திரிகைகள் அந்த சம்பவம் குறித்து எழுதித்தள்ளின.
சம்பவம் நடந்த கோவிலுக்குதான் அதிக நன்கொடைகள், அன்னதானங்கள் வாரி வழங்கியதாகவும் குறிப்பிட்டு, அங்கு யாரும் காப்பாற்ற முடியாத நிலையில் குல்சன் குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக மும்பை ஊடகங்கள் எழுதின.
குல்ஷன் குமாரின் மரணம் இந்தியா முழுவதும் பெரும் கோபத்தை உண்டாக்கியது. அரசு மீதும், காவல்துறை மீதும் பெரும் கடும் கண்டனக்குரல் எதிரொலித்தது.
அரபிக்கடல், வானத்தை முட்டும் பெரும் கட்டடங்கள், தொழிற்சாலைகள், இரவில் அழகான விளக்குகளால் ஜொலித்து மின்னும் மும்பைக்கு அழகான முகம் இருப்பது போல, இன்னொரு கோரமான ஒரு முகமும் உண்டு.
அதுதான் கொலைகளின் மாநகரம். இந்தியாவிலே அதிக கொலைகள் நடந்த நகரங்களின் பட்டியலில் மும்பைக்குதான் இன்றுவரை முதலிடம்.
மும்பை தாதாக்களை பொறுத்தவரை எதிராளிகளுடன் நேருக்கு நேர் மோதாமல் யார் யாருக்கு பொருளாதார உதவி செய்வது, அரசியல் ரீதியான உதவிகளை செய்வது, காவல்துறை, நீதித்துறை உள்பட பல்வேறு வட்டாரங்களில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதில்தான் கடும் போட்டி.
இதில் எதிராகளிகளுக்கு மறைமுகமாக உதவிய பல்வேறு நபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதில் உண்மையை எழுதிய பல்வேறு பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, ஒரு சில பத்திரிகையாளர்கள் கொலையும் செய்யப்பட்டனர்.
sotta
இந்த கொலைகள் நிற்கவில்லை. இது போன்ற சம்பவங்கள் இன்னமும் மும்பையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபக் கொலையாக மிட் டே பத்திரிகையின் கிரைம் பிரிவு செய்தியாளர் ஜோதிர்மோய், கடந்த ஜூன் 11 ல் 2011- ம் ஆண்டு மதியம் இரண்டரை மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த பொழுது, கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஆயில் மாஃபியா கும்பல்கள் பற்றி அதிக தகவல்களுடன் கட்டுரை எழுதியததால் மிரட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை சோட்டா ராஜனின் ஆட்கள் செய்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
சமூகத்தில் நல்ல நிலைமையில் உள்ள முக்கியமான நபர்களை குறி வைத்து தப்பாமல் கொலை செய்தனர். கடந்த 2008-ல் பிசினஸ் புள்ளியான சுரேஷ் பகத்தை அருண் காவ்லியின் ஆட்கள் கொலை செய்தனர்.
2006 ல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் பவன்ராஜீவை ஓடும் ரயிலில் வைத்து கொலை செய்தனர். இது போன்ற அரசியல் கொலைகளும் அடிக்கடி நடந்தன. போலீஸ் விசாரணையில், எம்பி ஒருவர் சொல்லி இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.
மனிஷா கொய்ராலாவின் செக்ரட்டரி அஜித் திவானி, இயக்குனர் ராஜீவ் ராய், நட்வர் லால் தேசாய், வல்லப்தாக்கர், கரீம் மாரதியா, சுனித் கட்டா போன்ற முக்கிய பிரமுகர்கள் என்று கொலைப்பட்டியல் நீள்கிறது. இதுவரை மும்பையில் மட்டும் இது போன்ற கொடூர கொலைகளாக 170 கொலைகள் நடந்து உள்ளன.
இந்த கொலைகள் எல்லாம் தனித்தனியாய நடந்த கொலைகள். கொலையானவர்கள் அனைவரும் அதிகாரத்தில் வலம் வந்தவர்கள், பெரும் புள்ளிகள், பாலிவுட்டை கலக்கி கொண்டிருந்த பெரும் புள்ளிகள், அரசியல் வாதிகள் என்று பெரும் பிரபலங்கள்.
கொலை நடந்த இடங்கள் அனைத்தும் பொதுமக்கள் கூடும் இடமான மருத்துவமனை, நீதிமன்றம், கோவில், பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள், சிக்னல்கள், வீட்டின் வாசல் என்று எல்லாமே பொது மக்களின் பார்வைக்கு மத்தியில், பொது ஜனங்களின் கண்களின் சாட்சியாக நடந்த கொலைகள்தான்.
கொலைக்கான காரணங்களை அலசி ஆராய்ந்த அரசு ஒரு முடிவு எடுத்தது… அது என்ன?
– சண்.சரவணக்குமார்