கிழக்கு ஜெரூசலத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இரு பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டதோடு மற்றுமொரு இஸ்ரேலியர் தவறாக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலஸ்தீன தாக்குதல்தாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோதே தவறாக அங்கிருந்த இஸ்ரேலியர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதில் கத்திக்குத்துக்கு இலக்கான மற்றுமொரு இஸ்ரேலியர் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையில் கடந்த மூன்று மாதங்களாக பதற்ற சூழல் நீடித்து வருகிறது.
இந்த காலப்பிரிவில் குறைந்தது 131 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் தாக்குதல்தாரிகள் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது.
ஏனையோர் இஸ்ரேல் படையினருடனான மோதல்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்களாவர்.
இதே காலப்பிரிவில் 21 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பலஸ்தீனர்களின் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளனர்.
புதிய தாக்குதல் சம்பவம் கடந்த புதன் காலை ஜெரூசலம் பழைய நகர் மதிலின் ஜப்பா நுழைவாயிலுக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய எல்லையோர படையினர் மக்கள் பயத்தில் ஓடுவதை அவதானித்ததை அடுத்து இருவர் கத்தியால் ஒருவரை குத்துவதை கண்டிருப்பதாக இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் விபரித்துள்ளார்.
அதன்போது அதிகாரிகள் தாக்குதல்தாரிகள் மீது சூடு நடத்தி அதனை கட்டுப்படுத்தினர் என்று அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பா நுழைவாயில் யூத இஸ்ரேலியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பழைய நகருக்குள் நுழைய பயன்படுத்தும் வாயிலாகும். இந்த தாக்குதலை அடுத்து குறித்த வாயில் புதனன்று மூடப்பட்டது. அருகில் இருக்கும் டமஸ்கஸ் வாயிலும் மூடப்பட்டுள்ளது.
பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தியிருக்கும் மனித உரிமைக் குழுவுக்கு பெரும்பாலான சம்பவங்களில் இஸ்ரேல் படை “சுட்டுக் கொல்லும்” கொள்கையையே கடைப்பிடித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றன.
பெரும் அச்சுறுத்தல் இல்லாத சூழலிலேயே பெரும்பாலான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.