இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். லாகூரில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிபை சந்தித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பயணத்தில் இருந்த பிரதமர் மோடி இது தொடர்பாக தனது டுவிட்டரில் இன்று (25) திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“டெல்லிக்குத் திரும்பும் வழியில் லாகூரில் இன்று (25) பிற்பகலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில் ஷெரீபுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதைத் தெரிவித்த மோடி, “ஷெரீபுடன் பேசினேன், அவரை வாழ்த்தினேன்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்தத் திடீர் பயணத் திட்டம், வெளியுறவுத் துறை ரீதியிலும் சற்றே வியப்பில் ஆழ்த்தக் கூடிய விடயமாகும்.
2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பாஜக தலைமையிலான அரசு முடிவு செய்தது.
இது தொடர்பான அறிவிப்பை, இஸ்லாமாபாத்துக்கு இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பயணம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டார், இந்தச் சூழலில் மோடியின் இன்றைய திடீர் பயணம் கவனிக்கத்தக்கது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவால் கட்டப்பட்ட அந்நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று (25) திறந்து வைத்தார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பயங்கரவாதத்தின் புதிய நிழல்கள் நம்மை நெருங்கி வருகிறது, இந்த நேரத்தில்தான் நாம் ஆப்கானிஸ்தானுக்கு துணையாக நிற்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.