மட்டக்களப்பிலுள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் மோட்டார் சாரதி அனுமதிப் பத்திரத்துக்காக வைத்தியச் சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்கு வருகை தரும் இளைஞர் யுவதிகள் இரவு வேளையில் தங்கியிருந்தே பெறவேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சாரதி அனுமதிப் பத்திரத்துக்காக தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தில் வைத்தியச் சான்றிதழ் பெறுவது அவசியமாகவுள்ளது.
இதனைப் பெறுவதற்காக முதல் இரவு மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள குறித்த நிறுவகத்துக்கு வந்து வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று நாட்டில் எந்த தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதானாலும் அல்லது வெளிநாடு ஒன்றுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுச்செல்வது என்றாலும் சாரதி அனுமதிப்பத்திரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இந்த நிறுவகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு மருத்துவ சான்றிதழ் பெறுவருவோருக்கு உத்தியோகஸ்தர்கள் காலை 8.30 இற்கு பின்னரே சிட்டை வழங்குகின்றனர். அதுவும் ஒரு நாளில் 100 பேருக்கே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தினமும் இந்த நிலையத்திற்கு 300 இற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்ற நிலையில் 100 பேருக்கே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
ஏனையவர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையேற்படுவதாகவும் மருத்துவச் சான்றிதழ் பெற வருவோர் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இரவு வேளைகளில் குறித்த நிறுவகத்திற்கு வரும் இளைஞர் யுவதிகள் வீதிகளில் இரவினைக் கழித்து வருவதை காணமுடிவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு இரவு வேளைகளில் கண்விழித்து மறுநாள் சிலவேளைகளில் சிட்டை கிடைக்காமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையேற்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகளவானோர் இவ்வாறு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதன் காரணமாக மாவட்டத்தில் மேலும் சில நிலையங்களை திறக்க இந்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.