தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில், இசிப்பத்தான மாவத்தையில் உள்ள சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை 4.30 மணியளவில் தொடங்கிய சந்திப்பு, 7.30 மணிவரை தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் பின்னர், கருத்து வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாகவும், மீண்டும் சந்தித்துப் பேச இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் அண்மைக்காலமாக நிலவி வந்த பனிப்போருக்கு முடிவு கட்டும் நோக்கிலேயே இன்றைய சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் முரண்பாடான கருத்துகளை வெளிப்படுத்தி வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, கடுமையான விமர்சனங்களை இரா. சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் எதிர்கொள்ள நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
இரா.சம்பந்தன், கவீந்திரனும் இணைத் தலைவர்களாக நியமனம்
வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களினதும், ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல் வெளியிடுகையில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக இரா.சம்பந்தனும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கவீந்திரன் கோடீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.
முன்னதாக, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சிறீநேசனும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக மாவை சேனாதிராசாவும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சிவமோகனும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனும், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சாள்ஸ் நிர்மலநாதனும் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுக்கான நியமனங்கள் மட்டும் தற்போது அறி்விக்கப்பட்டுள்ளது.