சிம்பு பாடியதாக கூறி வெளிவந்த ஆபாச பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிம்பு தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், சக நடிகையான ராதிகா இந்த வழக்கு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சிம்பு தனது வீட்டிற்குள் பாடிய பாடலை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட முயற்சி செய்வதால், அவரை கைது செய்ய போலீசார் விமான நிலையத்தில் கண்காணிப்பில் இருக்கின்றனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்றேன். சிம்பு போலீசார் தேடும் அளவுக்கு தீவிரவாதி அல்ல.
அவர் பாடிய அந்த பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இல்லை. பெண்களின் மனதில் இந்த பாடல் பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.
இதில் என்ன மனஉளைச்சல் இருக்கிறது என்று தெரியவில்லை. பெண்களை இழிவுபடுத்தி இதுவரை எந்த தமிழ் சினிமாவும் வரவில்லையா? இல்லையென்றால், பெண்களை இழிவுபடுத்தி எந்த பாடலும் வரவில்லையா? அப்பொழுதெல்லாம் போராடாதவர்கள் இப்போது மட்டும் ஏன் போராடுகிறார்கள்.
சிம்புவை தூக்கில் போடவேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். அவரை ஏன் தூக்கில் போடவேண்டும். இன்று கற்பழிப்பு குற்றத்தில் உள்ளே சென்றவர், வயதை காரணம் காட்டி வெளியே வருகிறார்.
அதற்கெல்லாம் சென்று போராடாமல் இதை ஒரு பெரிய பிரச்சினையாக எடுத்து போராட காரணம் என்ன?
சிம்பு இந்த பாடலுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தேவையில்லை. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவரது அப்பா, அம்மாவிடம்தான் மன்னிப்பு கேட்கவேண்டும். வெளிவராத ஒரு பாடலுக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை செய்கிறார்கள்.
இந்த பிரச்சினையில் சிம்புவுக்கு சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் யாரும் ஆதரவு கொடுக்காதது பெரும் வருத்தத்தை கொடுக்கிறது’ என்றார்.