உலகில் பழமையான தொழில்களில் ஒன்றாக கருதப்படும் விபசாரம் அல்லது பாலியல் தொழில் பலராலும் வெறுக்கப்படும் போதிலும் புதிய ரூபத்தில் பல்வேறு ஆதரவுகளுடன் இன்று எந்த இடையூறும் இன்றி நடைபெற்று வருகின்றது.
இன்னும் நான்கு தசாப்த காலத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றமை பழங்கதை ஆகி விடும் என்றும் பெண்களுக்கு பதிலாக ஏராளமான ரோபோ பெண்கள்தான் பாலியல் தொழிலில் ஈடுபடுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ரோபோ பெண்களின் விபசார விடுதிகள் கண்களுக்கு தென்பட இருக்கின்ற நாள் தொலைவில் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
எனினும் இன்றும் பல நாடுகள் விபசாரத்தை தடை செய்யப்பட்ட ஒரு சட்ட விரோத செயற்பாடாகவே கருதுகின்றன. தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் பாலியல் தொழிலை அங்கீகரித்துள்ள போதும் இலங்கை உள்ளிட்ட கலாசார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகள் தொடர்ந்தும் அதனை தடை செய்யப்பட்ட தொழிலாகவும் அதில் ஈடுபடுவது குற்றமாகவும் கருதி வருகின்றன.
எனினும் இவ்வாறு தடை செய்யப்பட்ட பாலியல் தொழில் இலங்கையில் இன்று மிக ஜெயமாக நடந்து வருகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆரம்பத்தில் ஒளிந்து ஒளிந்து செய்யப்பட்ட இந்த தொழில் தற்போது கண் எதிரே பகிரங்கமாக இடம்பெற்று வருவதை நாம் அவதானிக்கின்றோம்.
இவற்றை விட வெளி நாடுகளில் இருந்து இதற்கென்றே பெண்கள் தருவிக்கப்பட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டு மிகப் பெரிய அளவில் பாலியல் தொழில் இங்கு இடம்பெற்று வருகின்றது.
இதற்கு அரசியல், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தக் கூடிய பாதுகாப்புத் தரப்பினர் என பலரும் உடந்தையாக இருப்பது கடந்த காலங்களில் உறுதி செய்யப்பட்ட ஒரு உண்மை.
கொள்ளுப்பிட்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய தாய்லாந்து பெண்களின் விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்ட போது நாம் இது தொடர்பில் வெளிப்படுத்தல்களை தந்திருந்தோம்.
அதே போல் தான் இந்த மாதம் அடுத்தடுத்த இரு கிழமைகளில் பாணந்துறை வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இரு பாலியல் சம்பவங்கள் தொடர்பிலான விபரங்களை நாம் இவ்வாரம் பகிர்ந்துகொள்கின்றோம்.
ரஷ்யா ஊடாக சுற்றுலா விஸாவில் இலங்கைக்குள் வரும் உஸ்பகிஸ்தான் பெண்களை வைத்தும் இலங்கையின் கிராமப் புறங்களைச் சேர்ந்த அப்பாவி யுவதிகளை ஏமாற்றி அழைத்து வந்து அவர்களை நடிகைகள் எனக் கூறி வெளிநாட்டவர் உள்ளிட்டோருக்கு விற்றும் பணம் சம்பாதிக்கும் குழுக்களின் முகத்திரையை கிழிக்கவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
பிரபல தனியார் வானொலியின் சில அன்பர்களும், ஊடகவியலாளர்கள் சிலரும் பாணந்துறை வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் உண்மையில் வெளிப்படுத்தப்பட வேண்டியதே.
முதலில் வெளி நாட்டுப் பெண்களை விற்கும் லக்மால் என்ற முகவர் தொடர்பில் இற்றைக்கு பல மாதங்களுக்கு முன்னரேயே தகவல் ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கின்றது.
இந்த தகவல்களை வைத்து இது தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபடும் போது தான் இந்த வியாபாரம் ஜெயமாக இடம்பெற்று வருவதை உறுதி செய்யக் கூடியதாக இருந்தது.
இந் நிலையில் தான் இது தொடர்பிலான விடயம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
உடன் களத்தில் இறங்கிய பொலிஸ் மா அதிபர் இது தொடர்பிலன நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை தனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பாணந்துறை வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவுக்கு ஒப்படைத்தார்.
வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் பெரேராவின் மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரசாந்த, நிலையப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜனித்த குமார உப பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன உள்ளிட்ட குழுவினரால் இந்த இரகசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மிக நீண்ட நாட்களாக சூட்சுமமாக அவதானிக்கப்பட்ட நிலையில், உளவாளி உள்ளிட்டவர்களின் உதவியுடன் பெண்களை விற்கும் பிரதான முகாமையாளராக கருதப்பட்ட லக்மால் என்பவரின் தொடர்பினை பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
அதன்பின்னர் விசாரணை. ஊடகவியலாளர்கள் சிலரும் வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் கான்ஸ்டபிளான ஜயலாலும் லக்மாலுடன் தொடர்புகளைப் பேண ஆரம்பித்தனர்.
அதற்கு காரணம் இருந்தது. லக்மாலுடன் தொடர்பினைப் பேணிய இந்த குழு தம்மை பெரிய வர்த்தகர்களாகவே காட்டிக்கொண்டது. அத்துடன் தாம் வேலைப் பளு மிக்கவர்கள் என்பதையும் உணர்த்திக்கொண்டிருந்தது.
இந் நிலையில் தான் லக்மால் அவர்களுடன் செய்த உரையாடல்கள் ஒலிப்பதிவுக்கு உட்பட்ட நிலையில் அதில் இந்த பாலியல் வர்த்தகத்தை ஜயமாக மேற்கொள்ள அரசியல் வாதிகள் பலரும் பொலிஸ் உயரதிகாரிகள் பலரும் அவருக்கு பக்கபலமாக இருப்பது தெரியவந்தது.
லக்மாலுக்கு சந்தேகம் வராத வண்னம் மிக சூட்சுமமாக உரையாடிய இந்த குழு முதலில் லக்மால் செய்யும் வர்த்தகம் தொடர்பில் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டது.
அதன்படி அவர் ரஷ்யாவில் இருந்து தருவிக்கப்பட்ட பெண்களை ஒரு இரவுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வது தெரியவந்ததுடன் நீண்டகாலமாக அவர் இந்த வர்த்தகத்தை எந்த தடைகளும் இன்றி முன்னெடுப்பது உறுதியானது.
அத்துடன் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி பல அரசியல் வாதிகளுக்கும் இவர் இந்த யுவதிகளை விற்பனை செய்வதும் அதனால் தனது தொழிலுக்கு எவ்வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என்பதும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலையில் உள்ள பலர் கூட தமக்கு மிக நெருக்கமானவர்கள் என கூறும் லக்மால், தேவைப்படும் போது வெளி நாடுகளில் இருந்து யுவதிகளை இறக்குமதி செய்யும் சக்தி தனக்கிருப்பதாக கூறுகின்றார்.
இந் நிலையில் தான் இத்தகைய முதன் நிலை பாலியல் தொழிலாளர்களை வி நியோகிக்கும் லக்மாலை கைது செய்யும் திட்டத்தை வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்தனர்.
இற்றைக்கு இருவாரங்களுக்கு முன்னர் இதற்கான திகதி குறிக்கப்பட்டது. அது கடந்த 7 ஆம் திகதி. நேரமோ இரவு 7.00 மணியிருக்கும்.
ஏற்கனவே பேசப்பட்டமைக்கு அமைவாக கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் திட்டத்தை அரங்கேற்ற பொலிஸாரும் ஊடகவியலாளர் குழுவும் தயாராகினர்.
அதன் பிரகாரம் லக்மாலை தொடர்புகொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயலால், தமக்கு இன்றைய தினம் ரஷ்ய யுவதிகள் இருவர் வேண்டும் என திட்டப்படி கூறலானார். லக்மாலிடமிருந்து சாதகமான பதில் வந்தது.
‘ நீங்கள் ஒரு ஹோட்டலில் அறைகளை வேறுபடுத்திவிட்டு அந்த அறை இலக்கத்தை எனக்கு தாருங்கள்… நான் ரஷ்ய யுவதிகளோடு அந்த அறைக்கு வருகின்றேன்.
அதன் பின்னர் நீங்கள் தேவையானோரை தெரிவு செய்துகொள்ளுங்கள். ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா வேண்டும். பணத்தை என்னிடம் உடனடியாக தர வேண்டும்.’ எனலக் மால் தனது வியாபார உத்திகளை தெளிவு படுத்தினான்.
வாடிக்கையாளராக வேடமிட்டுள்ள பொலிஸ்தரப்பு உடனடியாக அதனை ஏற்றுக்கொள்ளாமல் விலையை சற்று குறைக்க பேரம் பேசலில் ஈடுபட்டது.
ஜயலால் கான்ஸ்டபிள் ‘ இந்தியாவில் இருந்தும் அடுத்த வாரம் எமது நண்பர் ஒருவர் வருவார். அப்போதும் எமக்கு இவ்வாறான யுவதிகள் தேவைப்படுவர்… ஒரு இலட்சம் ரூபா என்பது கொஞ்சம் அதிகமக உள்ளது..குறைக்கக் கூடாதா..’ என பேரம் பேச ஆரம்பித்துள்ளார்.
எனினும் அதற்கான லக்மாலின் பதில் வேறாக இருந்தது…’ மிஸ்டர்… இது என்ன மருதானை பாலத்துக்கு கீழ் இருக்கும் லோக்கல் என்று நினைக்கிறீர்களா… ஒரு பெண் ஒரு இலட்சம் ரூபா…இவர்கள் எல்லோரும் எவ்வளவு சரி சம்பாதிப்பதற்காக சுற்றுலா விசாவில் தான் இங்கு வந்துள்ளார்கள்… இவர்களுடன் ஒரு இரவு நீங்கள் இருந்தால் தெரியும்…
ஒரு இலட்சம் ரூபா கொடுத்து இவர்களை ஒரு இரவுக்கு ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு சாப்பிட கொடுத்து பின்னர் செல்லும் போது அவர்கள் அளித்த உல்லாசத்திற்காக மேலதிகமாக , ஆயிரம் ரூபா கையில் கொடுத்துவிட்டு போகும் எத்தனையோ லவ் பேர்ட்ஸ்கள் உள்ளார்கள்.. நீங்கள் ஏன் குறைத்துக் கேட்கிறீர்கள்..என லக்மால் சற்று நம்பிக்கையின்றி கதைக்கலானான்.
எனினும் பொலிஸார் விடவில்லை… ஜயலால் தொடர்ந்து பேரம் பேசி, ஏற்கனவே அவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட போலியான நட்புறவின் அடிப்படையில் இறுதி விலையாக 85 ஆயிரம் ரூபா நிர்ணயம் செய்யப்பட்டது.
அதற்கு மேல் விலையை குறைக்க முடியாது என்பதை உ ணர்ந்த பொலிஸார் பணத்தை திரட்டும் பணிகளை செய்தனர். அதாவது யுவதிக்கு 85 ஆயிரம் ரூபாவும் ஹோட்டல் அறைக்கு 30 ஆயிரம் ரூபா என ஒரு இலட்சத்து 15 ரூபாவை பொலிஸார் திரட்ட வேண்டியிருந்தது.
அதன் பின்னரேயே திட்டம் அரங்கேற்றப்பட்டது. வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள அந்த பிரபலமான ஹோட்டலில் 10 ஆவது மாடியில் 30 ஆயிரம் ரூபாவுக்கு அறை பிரத்தியேகமாக பெறப்பட்டது.
அந்த அறையில் நன்கு பேர் இருந்தனர். ஊடகவியலாளர்கள் சிலருடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயலால் பணத்துடன் தயாராக இருந்தார்.
7.00 மணி தாண்டிச் செல்லவே லக்மலுக்கு ஜயலால் அழைப்பை ஏற்படுத்தி விளக்கம் கோரினார். இந்த ஏற்பாடுகளைச் செய்யும் போது குறித்த ஹோட்டலின் முகா மையாளருக்கு கூட சந்தேகம் ஏற்படாத வகையிலேயே பொலிஸ் குழு செயற்பட்டது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் பெரேரா, உதவி பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரசாந்த ஆகியோர் நடவடிக்கைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியிருந்த நிலையில் வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜனித்த குமார உப பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களான மல்லிகா மற்றும் சானிகா ஆகியோருடன் சாரதி பண்டார ஆகியோர் ஹோட்டலுக்கு வெளியே நடவடிக்கைக்கு தயாராக இருந்தனர்.
அப்போது நேரம் இரவு 10.24 இருக்கும். இந் நிலையில் தான் வெள்ளை நிற சொகுசு ஜீப் வண்டியில் லக்மாலும் ஐந்து பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகளும் ஹோட்டல் வளாகத்துக்குள் வந்தனர். ஹோட்டல் வளாகத்துக்குள் வந்த அவர்கள் வாகன நிறுத்துமிடத்துக்கே சென்றனர்.
வாகன நிறுத்துமிடத்தில் இருந்து லக்மால், ஹோட்டல் அறைக்குள் இருந்த ஜயலாலுக்கு அழைப்பை ஏற்படுத்தலானான்.
‘ மிஸ்டர் நான் ஹோட்டல் பார்க்கிங்கில் இருக்கின்றேன்..நீ வந்து பணத்தை தந்துவிட்டு இவர்களில் ஒருவரை தெரிவு செய்துவிட்டு அழைத்துச் செல் என்றான்.
இப்போது பொலிஸாரின் திட்டம் சற்று பிசக ஆரம்பித்தது… உடன் செயற்பட்ட கான்ஸ்டபிள் ஜயலால் வெளியே நடவடிக்கைக்கு காத்திருந்த குழுவுக்கு அழைப்பை ஏற்படுத்தி’ அவன் பார்க்கிங் வந்து என்னை கூட்டிச் செல்ல சொல்கிறான்.. நான் சென்று ஒருத்தியை கூட்டிக்கொண்டு அறைக்கு செல்கின்றேன்..அவர்கள் வெளியேறும் போது நீங்கள் அவர்களை கைது செய்யுங்கள்’ என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
பின்னர் அறையில் இருந்து அவர் வெளியே வரவே… அந்த வெள்ளை ஜீப் ஹோட்டலின் வாசலுக்கு சென்று நின்றது. அங்கு 5 யுவதிகளையும் இறக்கிவிட்டு ஜீப் வெளியே செல்ல ஆரம்பித்தது.
வெளி நாட்டு யுவதிகள் ஐவரும் குறித்த அறையை நோக்கி சென்றனர். பொலிஸாருக்கு வேண்டிய லக்மால் ஜீப்பில் தப்பிச் செல்லவே பொலிஸார் துரத்தி வழியில் வைத்து மறித்து கைது செய்தனர்.
‘ உனக்கு எல்லாம் தெரிந்து விட்டது என நினைக்கின்றேன்… சத்தம் போடாமல் எமக்கு ஒத்துழை‘ என கூறிய பொலிஸார் அவனை கைது செய்து ஹோட்டலுக்கே மீண்டும் அழைத்து வந்தனர்.
அதே நேரம் ஹோட்டல் முகாமையாளரை இரகசியமாக தெளிவு படுத்திய பொலிஸார் தாம் அங்கு மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை தொடர்பிலும் குறிப்பிட்டு விட்டு திடீரென 10 ஆவது மாடியில் இருந்த அந்த அறையைத் திறந்தனர்.
அங்கு 5 உஸ்பகிஸ்தான் யுவதிகள் இருந்தனர். அவர்கள் சீருடையில் இருந்த பொலிஸாரைக் கண்டதும் நடுங்கினர். தாம் சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.
கைதானவர்களை பொலிஸார் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவே அவர்கள் கல்கிஸை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
யுவதிகள் 5 பேருக்கும் தலா 500 ரூபா தண்டப்பணமும் லக்மாலுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் நீதிமன்றினால் விதிக்கப்பட்டது.
வெளி நாட்டு யுவதிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இலட்சங்களை சுருட்டும் இந்த சட்ட விரோத செயற்பாடுகள் ஒரு புற மிருக்க, இலங்கையின் கிராமப் புறங்களை சேர்ந்த யுவதிகளை நடிகைகளாக சித்தரித்து அவர்களை வெளி நாட்டவருக்கு விற்கும் செயற்பாடுகளும் இதனைத் தொடர்ந்த விசாரணை ஒன்றில் வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவினரால் வெளிப்படுத்த முடிந்தது.
அதன்படி அந்த சட்ட விரோத செயற்பாட்டினை முன்னின்று செய்து வந்த இருவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட பொலிஸார் கடந்த 19 ஆம் திகதி அவர்களின் முகத்திரையினையும் கிழித்தனர்.
மிக நெருக்கமான தொடர்புகளை போலியாக ஏற்படுத்திக் கொண்ட வலான துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு பொலிஸார் அந்த நாள் ‘ மச்சான்… எனக்கு 2 பேர் இன்றைக்கு வேனும்..கிடைக்குமா?’ என நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
அதற்கு பதிலளித்த முகவர் பிரதேசத்தின் பிரபலமான சுற்றுலா விடுதியொன்றைக் கூறி அங்கு வருமாறும் அங்கு வந்து வாகன நிறுத்துமிடத்தில் இருக்குமாறும் கூறியுள்ளனர்.
‘ மச்சான் எனக்கு நடிகைகள் மாதிரி யாராவதுதான் வேண்டும்..எவ்வளவு செலவாகும்….’ என பொலிஸார் கேட்க என்னிடம் உள்ள 2 பேரும் நடிகைகள் தான்.. நான்கு மணி நேரத்துக்கு அவ்விருவருக்கும் 80 ஆயிரம் ரூபா வேண்டும் என சட்ட விரோத முகவர்கள் கூறியுள்ளனர்.
இந் நிலையிலேயே ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் பொலிஸார் சிவில் உடையில் காத்திருக்க நீல நிற சொகுசு காரில் முகவர்கள் இருவரும் யுவதிகள் இருவரும் வந்தனர்.
தரிப்பிடத்தில் வைத்து முகவர்கள் பணத்தைக் கோரவே யுவதிகளைப் பார்த்துவிட்டு வலான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஏற்கனவே திட்டமிட்டு கையெழுத்திட்டு தயார் செய்து வைத்திருந்த பணத்தை கொடுத்தவுடன் மறைந்திருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் காருடன் அந் நால்வரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு யுவதிகளும் உண்மையிலேயே நடிகைகள் இல்லை என விசாரணைகளில் தெரிந்துகொண்ட பொலிஸார் அவர்கள் 21,27 வயதுகளை உடைய ஹோமாகம மற்றும் மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பிலியந்தலையில் தங்கியிருந்தே இந்த வேலையைச் செய்து வந்துள்ளமையையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இவர்கள் பாணந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் டிசம்பர் 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விரு சம்பவங்களும் மிக சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட இரு வேறு பாலியல் தொழில் நடவடிக்கைகளாகும். இவ்வாறு கொழும்பில் மட்டுமன்றி பல்வேறு பிரதேசங்களிலும் சூட்சுமமாக யுவதிகள் பலர் ஏமாற்றப்பட்டும் கட்டாயப்படுத்தியும் அவர்களின் விருப்பின் பேரிலும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவை எமது சட்டத்தின் பிரகாரம் சட்ட விரோத நடவடிக்கையாகும். இன்று நாடளாவிய ரீதியில் எயிட்ஸ் ஆட்கொல்லி தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் முகத்திரைகள் முதலில் கிழிக்கப்படல் வேண்டும்.