ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது.
ஆண்களை விட மனவுரனுடன் சளையாது போராடும் ஆற்றல் பெண்களுக்கு உண்டெனப் பல போராட்டங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.
எனினும், உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அஞ்சும் போராளிகளாகக் குர்தியப் பெண் போராளிகள் உள்ளமை கொஞ்சம் வியக்கவைக்கும் உண்மையே.
இன்றைய மத்திய கிழக்குச் செய்திகள், சிரியா, அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி என்பவற்றைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் அனைத்துக்கு நடுவிலும் பல்வேறு ஒடுக்குமுறையாளர்கட்கும் ஆக்கிரமிப்பாளர்கட்கும் எதிராகக் குர்திய மக்கள் தொடர்ந்து தமது விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள்.
ஐ.எஸ்ஸுக்கு எதிரான போரிற் களமுனைகளிற் பாரிய வெற்றிகளைக் கண்ட அமைப்பாக பி.கே.கே. எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி விளங்குகிறது.
குர்திய மக்களுடைய வரலாறு ஈழத் தமிழ் மக்களினது போலத் துயரம் தோய்ந்தது. முதலாம் உலகப் போரின் பின்பு, துருக்கியின் வசமிருந்த மத்திய கிழக்குப் பிரதேசத்தை பிரித்தானிய-பிரெஞ்சு ஆதிக்கவாதிகள் தங்களுக்கு வசதியானபடி கூறுபோட்டனர்.
பிரித்தானிய அடிவருடிகளான சில வசதி படைத்த அரபுக் குடும்பங்களிடம் அராபியத் தீபகற்பம் பங்கிடப்பட்டது. அப்போது உருவான சின்னஞ்சிறு ஷேக் இராச்சியங்கள் பிரித்தானிய ஆதரவிற் தங்கியிருந்தன.
அவ்வேளை, துருக்கிய அரபுப் பிரதேசங்களின் எல்லையில் அமைந்த குர்திய இனத்தின் பெரிய பாரம்பரியப் பிரதேசத்தின் பெரும் பகுதி, முற்குறித்த பிரித்தானிய-பிரெஞ்சுக் குறுக்கீட்டால் துருக்கி, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிடையே பங்கிடப்பட்டது.
அதை விட பழைய சோவியத் ஒன்றிய நாடான ஆர்மெனியாவிலும் வட சிரியாவிலும் குர்தியப் பிரதேசங்கள் இருந்தன. பிரித்தானிய கொலனி ஆதிக்கத்தைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கில் ஒரு வலிய அரபு வல்லரசோ, துருக்கிய வல்லரசோ ஏழாமற் கவனிக்கப்பட்டமை போதுமானது.
குர்திய மக்களின் நலன்கள் பற்றிய அக்கறை பிரித்தானியர்கட்கோ, துருக்கியப் பேரரசுக்கோ, அரபு ஷேக்குகட்கோ என்றும் இருந்ததில்லை. ஈரானும் ஈராக்கும் துருக்கியும் குர்திய தேசிய இனத்தவரைப் பலவாறு ஒடுக்கினர்.
அதன் விளைவாக எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி வலுப்பெற்றன. ஒவ்வொரு நாட்டிலும் இருந்த இயக்கங்களுள் பிளவுகளும் முரண்பாடுகளும் இருந்தன.
அதை ஒடுக்குமுறையாளர்கள் பயன்படுத்தினர். குறிப்பாக ஈராக்கில், குர்திய உள் முரண்பாட்டை சதாம் ஹுசேன் நன்கு பயன்படுத்தினார்.
அதே வேளை தம் ஒடுக்குமுறையாளர்களிடையே இருந்த முரண்பாடுகளை குர்திய விடுதலை இயக்கங்கள் பயன்படுத்தின.
இதனிடையே துருக்கியின் குர்திய மக்களிடையே மார்க்சிச லெனினிசப் நோக்குடைய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே) எனும் வலிய விடுதலை இயக்கம் 1970இல் உருவானது.
குர்திய மொழியைப் பேசுவதையும் சட்ட விரோதமாக்கிய துருக்கிய ஆட்சியாளர்கட்கெதிரான விடுதலை உணர்வை ஒரு முழுமையான சமுதாய விடுதலை உணர்வாக வளர்த்தெடுத்த அக் கட்சி, ஒரு மகத்தான மக்கள் சக்தியாக வளர்ந்தது. அதனால் அதை ஏகாதிபத்தியவாதிகள் மிகவும் வெறுத்தனர்.
தன் மீது துருக்கிய இராணுவ ஒடுக்குமுறை ஆட்சி கட்டவிழ்த்த வன்முறைக்குப் பதிலடியாகவே பி.கே.கே. 1980 முதல் கெரில்லாத் தாக்குதல்களையும் பிற வன்முறைப் போராட்டங்களிலும் இறங்கியது.
அடுத்துக் குர்திய மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் ஒன்றிணைத்த ‘குர்திஸ்தான்’ தேசத்தைத் தன் குறிக்கோளாக அறிவித்தது.
காலப்போக்கில் பி.கே.கே. சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கு உடன்பட்டாலும் மேற்குலகிலும் வெயியிலும் பல நாடுகளில் அது தடை செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 1999ஆம் ஆண்டு பி.கே.கே. தலைவர் அப்துல்லா ஒச்சலான் இஸ்ரேலிய உதவியுடன் சிறைப்பிடிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்த துருக்கிய அரசின் ஒடுக்குமுறை பி.கே.கேயுக்குப் பாரிய பின்னடைவாயிற்று. அப் பின்னடைவு சந்தர்ப்பவாத குர்து தேசியவாதிகட்கு வாய்ப்பானது.
இங்கு நினைவுகூர வேண்டியது யாதெனில், குர்திய மக்களுக்கு சதாம் ஹுஸேன் செய்த கொடுமைகள் பற்றி நமக்கு நிறையச் சொல்லப்பட்டாலும், குர்திய மக்கள் மீதான ஒடுக்குமுறை அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி நாடான துருக்கியிலேயே மிகக் கொடுமையானது.
விடுதலைப் போராட்டம் அங்கேயே மிக வலிமையுடன் தொடர்ந்தது. துருக்கிய குர்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் மிக உதவியுள்ளன.
1990க்குப் பின்பு, அமெரிக்காவின் எதிரியாக சதாம் ஹுஸேன் மாறிய வேளை அமெரிக்கா ஈராக்கிய குர்திய தேசியவாதிகளை சதாம் ஹுசேனுக்கு எதிராகப் பாவித்தது.
இன்று ஈராக்கில் அமெரிக்காவின் அதி நம்பகமான நட்புச் சக்தியாக உள்ள குர்திய தேசியவாதிகள், அமெரிக்க ஆதரவுடன் தனிநாட்டைப் பெறலாம் என இன்னமும் நம்புகிறார்கள்.
அவர்கள் குர்துகளை ஒடுக்கும் துருக்கிய அரசுடன் ஒத்துழைக்கிறார்கள்.
துருக்கி அரசுடன் நடந்த பேச்சுக்கள் பயனளிக்காததால் பி.கே.கே. மீண்டும் ஆயுதமேந்திப் போராடுவதற்கு விழைந்தது. ஈராக் மீதான அமெரிக்கப் போர் இப் போராட்டத்துக்குப் புதிய வடிவைக் கொடுத்தது.
இன்று குர்திய மக்களின் விடுதலையில் மட்டுமன்றி அவர்களது இருப்பிலும் அடிப்படை அம்சமாக பி.கே.கே. அமைந்துள்ளது.
துருக்கிய கம்யூனிஸ்ற்றுக்களை எதிர்ப்பவர்களாகத் தொடங்கிப் போராட்ட அனுபவத்தின் விளைவாக அவர்களுடைய நட்புச் சக்தியாகிய பி.கே.கே துருக்கியில் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகட்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்குமான போராட்ட அணியில் ஓர் அங்கமாகவும் குர்திய மக்களின் சுய நிர்ணயத்துக்கும் சமூக விடுதலைக்குமான ஒரு போராட்டச் சக்தியுமாகியது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தீவிரமாக எதிர்க்கும் ஒரு விடுதலை இயக்கமான பி.கே.கே. சென்ற நூற்றாண்டின் இறுதியில் முடிந்து விட்டது எனப் பலர் நினைத்தனர்;. பெரும்பாலோர் அதையிட்டு மகிழ்ந்தனர்.
பி.கே.கேயின் மீள் எழுச்சி ஒடுக்கப்படும் சமூகங்களுக்கான ஒரு வழிகாட்டியாயுள்ள அதேவேளை, ஒடுக்கப்படும் சமூகங்களின் தேசியவாதிகள் ஒடுக்குமுறையாளர்களுடனும் வல்லரசுகளுடன் இணங்கிப் போகக்கூடும் என்பதற்கும் குர்தியப் போராட்டம் நல்லதொரு உதாரணமாகும்.
இன்று குர்தியப் போராட்டம் பல முனைகளில் சவால்களை எதிர்நோக்குகிறது. ஒருபுறம் துருக்கி இராணுவம் பி.கே.கே. போராளிகளைக் குறிவைத்துத் தாக்குகிறது.
அமெரிக்காவும் மேற்குலகும் அதற்கு ஆதரவு வழங்குகின்றன. மறுபுறம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்து மக்களுக்கெதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளார்கள்.
துருக்கி இராணுவமும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பெண்களைக் குறிவைக்கத் தொடங்கினர். குர்தியப் பகுதிகளைத் தாக்கி அங்கிருக்கும் பெண்களை வன்கலவிக்கு உள்ளாக்குவதும் பாலியல் அடிமைகளாகப் பாவிப்பதும் பெண்களை விற்பதும் போன்ற கொடுமைகள் தொடர்ந்து இடம்பெற்றன. பி.கே.கேக்கு எதிரான யுத்தத்தில் பெண்கள் இலக்குகளாயினர்.
இந் நிலையில், 2012இல் பி.கே.கே. பெண்கள் பாதுகாப்புப் படைகளை உருவாக்கியது. தனது கட்டுப்பாட்டுப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தப் பெண்களை ஆயுதபாணியாக்கினர்.
ஐ.எஸ்ஸின் அளவுகடந்த அட்டூழியங்களின் விளைவாகப், பெண்கள் அமைப்பு காலப்போக்கில் ஓர் இராணுவமாக வளர்ந்தது.
இன்று, பி.கே.கேயின் முக்கிய போரிடும் படைப்பிரிவாக இப் பெண் போராளிகள் உள்ளனர். தற்போது, ஆயுதப் பயிற்சி பெற்ற பெண் போராளிகள் கிட்டத்தட்ட 10,000 பேர் உள்ளனர்.
ஆணைப் பெண்ணுக்கு மேலாகக் கருதுகின்ற, ஆண்-பெண் சமத்துவமற்ற மத்திய கிழக்குச் சூழலில் இப் பெண் போராளிகள் பண்பாட்டு ரீதியாகவும் சமூக ரீதியிலும் அராபிய-இஸ்லாமியவாதச் சிந்தனையில் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெண் பற்றிப் புனைந்த கற்பிதங்கள் அனைத்தையும்; இப் பெண்கள் இராணுவச் சீருடையில் ஆயுதங்களை ஏந்திக் களமாடுவது உடைத்தெறிகிறது.
மத்திய கிழக்குச் சமூகம் ஒரு புறம் இதை ஏற்க மறுக்கிறது. பெண் பற்றிய படிமத்தையே இந்த வீர மகளிர் மாற்றுகிறார்கள்.
அவ் வகையிற் பாலியல் சமத்துவத்துக்கான புரட்சி நடவடிக்கையாக இதைக் கொள்ளலாம். ஆனால் இன்று மத்திய கிழக்கிற் பலரது கேள்வியாக உள்ளது யாதெனில் ‘இப் பெண்கள் ஆயுதம் ஏந்தத் தேவை என்ன?’ என்பதே.
குர்துப் பெண்களுக்கு வேறு வழியில்லை. தங்களைத் தற்காப்பதோடு தங்கள் குடும்பங்களையும் தற்காக்கும் கட்டாயம் அவர்களுடையது.
பல்கலைக்கழகங்கன்றிப் பாடசாலைகளே இல்லாது அன்றாட வாழ்வாதாரத்துக்கே போராடுவோர்; மீது தொடர்ச்சியான வன்முறையைப் பல்வேறு தரப்புக்கள் ஏவும்போது அவர்களுக்குப் போராடுவதைத் தவிர தெரிவு வேறில்லை.
மறுபுறம், மேற்குலக ஊடகங்கள் வீரமாகப் போராடும் பெண்களில் அழகானவர்களைப் படம் எடுத்துக் கிளுகிளுப்பூட்டுமாறு வெளியிட்டு வீரஞ் செறிந்த அப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகின்றன.
குர்து மொழியில் ‘ரொஜாவா’ எனப்படும் மேற்கு சிரியக் குர்திஸ்தான் பகுதியின் முழுக் கட்டுப்பாடும் பெண்களிடமே உள்ளது. அவர்கள் தான் அரசியலையும் நிர்வாகத்தையும் நடத்திக் காவல் காக்கிறார்கள், போராடுகிறார்கள்.
ஐ.எஸ்ஸில் இணையும் பலர் கலீபாத்தை அடைவதற்கான புனிதப் போரில் பங்குபற்றி மரித்தால் சொர்க்கம் நிச்சயம் என்று நம்புகிறார்கள்.
இந்த நம்பிக்கையே உலகின் பலபாகங்களில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ்ஸில் இணையத் தூண்டுகிறது. ஐ.எஸ்ஸைப் பொறுத்தவரை, பெண்கள், ஆண்களை மகிழ்விக்கவும் குழந்தை பெறவும் வீட்டு வேலைகளைச் செய்யவும் மட்டுமே தகுந்தவர்கள்.
பெண்களுடன் போரிட்டு இறந்தால் சொர்க்கம் கிடைக்காது, நரகமே கிடைக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். எனவே குர்தியப் பெண் போராளிகளுடன் போரிட அவர்கள் தயங்குகின்றனர்.
மேலும் போர்க்களத்தில் மிக வீரமாகத் தளராது போர்புரியும் குர்துப் பெண் போராளிகளின் இயல்பையும் ஐ.எஸ். போராளிகள் அறிவர். அதனாலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்
கடந்த ஆண்டு பி.கே.கே. கட்டுப்பாட்டில் உள்ள கொபானி நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றியபோது, பி.கே.கேயின் பெண் போராளிகள் அவர்களை அங்கிருந்து விரட்ட முக்கிய பங்காற்றினர். இப் பெண் போராளிகள் கொபானி முற்றுகையை முறியடித்தமை அவர்களின் வீரத்தின் சான்றாக இன்றுவரை திகழ்கிறது.
இவ் விடுதலை மகளிர் இப்போது குர்து விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக உள்ளார்கள். அது சமத்துவத்தின் சின்னம் மட்டுமன்றி வீரஞ் செறிந்த மக்கள் போராட்ட மரபின் வெற்றியின் சின்னமுமாம்.
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ