துருக்கியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்ய முயன்றவரை அந்நாட்டு ஜனாதிபதி தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்.
துருக்கியின் போஸ்போரஸ் ஜலசந்தியின் மேல் அமைந்துள்ளது போஸ்போரஸ் பாலம், சுமார் 211 அடி உயரத்தை கொண்டது.
ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கு பாலமாக இந்த பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இந்த பாலத்தின் மேலிருந்து ஒரு நபர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
தற்கொலை செய்யாமலிருக்க அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த துருக்கி ஜனாதிபதி ரெசெப் எர்டோகன் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தற்கொலை செய்ய முயன்ற நபரை அழைத்து வர சொன்னார்.
இதையடுத்து அந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியிடம் அழைத்து சென்றனர். அப்போது ஜனாதிபதியை பார்த்த அந்த நபர் அவரது கைகளை பற்றி முத்தம் கொடுத்தார்.
பின்னர் தற்கொலை செய்யக்கூடாது என்று ஜனாதிபதி கூறிய அறிவுரை ஏற்றுக் கொண்ட நபர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
தற்கொலை செய்ய முயன்ற நபரின் விவரங்கள் ஏதும் இதுவரை கண்டறியப் படவில்லை எனவும், மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.